என் மலர்
காஞ்சிபுரம்
- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர்:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட படத்திற்கு அருகே பழங்கள், குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. சர்வ மத பிராத்தனை, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை, விஜய்வசந்த் எம்.பி., மாநில எஸ்.சி.எஸ்.டி.துணை தலைவர் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் மற்றும் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ராஜீவ் அமைதி ஜோதி எடுத்து செல்லப்பட்டது. இந்த ஜோதி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லி சென்று அடைந்து அங்குள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
இதற்கு ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் 13 கிராம மக்களும் கிராம சபை கூட்டத்தின்போது பரந்தூர் புதிய விமான நிலையம் வருவதை எதிர்த்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.
இதைத்தொடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் 13 கிராமங்களை சேர்ந்த விமானநிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் 300-வது நாள் போராட்டத்தை இன்று காலை திடீரென வயலூர் பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
- வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
- சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தேவையான பொருட்களை சுயசேவையாக எடுத்து கடைசியில் பில் போட்டு அதற்கான பணம் செலுத்தி பின்னர் பொருட்களை அதற்கான கவுண்டரில் பெற்று செல்வர்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை கடைக்கு வந்த 3 பெண்கள் பொருட்கள் வாங்குவதாக சொல்லிவிட்டு பொருட்களை எடுத்து வைக்க தேவையான கூடையை எடுத்து சென்று மளிகை பொருட்கள், பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கு பொருட்கள் என்று 1 மணிநேரத்திற்கும் மேலாக எடுத்துள்ளனர்.
ஆனால் கவுண்டர் வரும்போது குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே இருந்தது. அவற்றிற்கு மட்டுமே பில் போட்டனர். ஒரு பெண் ஸ்பூன் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு 80 ரூபாயும், மற்றொரு பெண் குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் என 70 ரூபாயும் என மொத்திலேயே 150 ரூபாய்க்கே பணம் செலுத்தி விட்டு பொருட்களை பெற்று கொண்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் ஸ்ரீராம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்தபோது அந்த பெண்கள் பொருட்கள் எடுத்துகொண்டு அவற்றை ஆளில்லா இடத்திற்கு வந்து தங்களது சேலைக்குள் ஒரு பையை கட்டி கொண்டு வந்து மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களையெல்லாம் அதில் போட்டு கொண்டு சென்றது தெரிய வந்தது.
சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.
- அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.
இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.
இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.
பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.
அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.
- விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
- தவணைத் தொகையினை பெறுவதற்கு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மே 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே. விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவுசெய்து உறுதிசெய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ள ஆதார் அட்டை நகல். புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
- ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல்கள் 4 பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.
23.05.2023 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையம் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெற உள்ளது.
இம்முகாமில் தேசிய அடையாள டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
- கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம்:
கோடை விடுமுறையையொட்டி பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனை நோட்டமிடும் மர்ம கும்பல் வீடு புகுந்து நகை-பணத்தை சுருட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளை கும்பல் அள்ளி சென்றுவிட்டனர்.
காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே சுதர்ஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர் டேனியல். இவர் கோடை விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகை தப்பியது.
சுதர்சன் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் 8 பவுன் நகை, லேப்டாப்பை சுருட்டினர். ஆசிரியர் தமிழரசு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்து இருந்தது.
இதேபோல் மேலும் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை போய் உள்ளது. அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று உடனடியாக தெரியவில்லை.
நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் நள்ளிரவு 1.30 மணியளில் கையுறை அணிந்தபடி கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அனைத்து வீடு களிலும் ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
- காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.
- பஸ் நிறுத்தம் அருகே இருந்த ராட்சத பேனர் மின் கம்பிகள் மீது விழுந்தது.
- மின்துறை ஊழியர்கள் மின் கம்பிகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 40 அடி உயரமுள்ள 20 அடி அகலமுள்ள ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை படப்பை கரசங்கால் உள்ளிட்ட பகுதியில் காற்று வீசி மழை பெய்ய தொடங்கியது.
பின்னர் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த ராட்சத பேனர் மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அங்கு சேதம் ஏற்படவில்லை.
அங்கு 5 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மின்துறை ஊழியர்கள் மின் கம்பிகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- கூவத்தூர் அருகே 2 பேரிடம் 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர்.
கூவத்தூர் அடுத்த முகையூர், கோலாவாஞ்சி காட்டுப்பகுதியில் கஞ்சா விற்ற புதுப்பட்டினத்தை சேர்ந்த முபாரக் அலி,தென்பட்டினத்தை சேர்ந்த தனுஷ் ஆகிய 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
- தேர் செல்லும் பாதையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் தேரோட்டத்தின் போது சிரமம் ஏற்படும் நிலை இருந்தது.
வண்டலூர்:
மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கிறது. அப்போது தேர் அனுமந்தபுரம் சாலையில் சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடையும்.
தற்போது தேர் செல்லும் பாதையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் தேரோட்டத்தின் போது சிரமம் ஏற்படும் நிலை இருந்தது.
இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் வெங்கடேசன் புகார் அளித்தார். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு ஏற்கனவே நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோமதி தலைமையில் அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஜே.சி.பி.எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதுபற்றி அறிந்ததும் ஏராளமான வியாபாரிகள் குவிந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.






