என் மலர்
காஞ்சிபுரம்
- போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் சாராயம் தயாரித்து வைத்திருந்ததை அழித்தும் அவர்கள் கைது செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் பகலவன் உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 33 ஆண்கள், 30 பெண்கள் என 63 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 831 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டள்ளது.
- ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்ர் விஸ்வநாதன் மற்றும் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வரவேற்றார்.
1998-ம் ஆண்டு காவலர் பயிற்சியில் இணைந்த போலீசார் வாட்ஸ்-அப் குழு மூலம் மீண்டும் காஞ்சிபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்ர் விஸ்வநாதன் மற்றும் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வரவேற்றார். சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், ஜெயவேலு கணேசன்,செல்வராஜ்,அசோக் குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜகோபால், நாகராஜன் நன்றி கூறினர்.
- காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான கோவில்களும், பட்டுச் சேலை விற்பனை கடைகளும் உள்ளது.
- மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான கோவில்களும், பட்டுச் சேலை விற்பனை கடைகளும் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வெளி மாநில வாடிக்கையாளர்களும் காஞ்சிபுரம் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.
சாலை ஓரங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடிய அளவில் விளம்பர போர்டுகளும், நடைபாதை கடைகளும், பேனர்களும் வைத்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று அதிரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளான செங்கழுநீர் ஓடை வீதி, மேற்கு ராஜ வீதி,கிழக்கு ராஜ வீதி, நெல்லுக்கார தெரு, உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளையும், விளம்பர போர்டுகளையும், அதிரடியாக அகற்றும் பணியை மேற்கொண்டார். இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு செய்திருந்த விளம்பர போர்டுகள் மற்றும் பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் கொண்டு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.
- விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் கண்ணன் (40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக காஞ்சிபுரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பாலாறு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஆம்னி வேனில் முன் பகுதி முழுவதும் நசுங்கிய நிலையில் வேனை ஓட்டி வந்த பெருமாள் வேனில் சிக்கி உயிருக்கு போராடினார். உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து வந்து, கடப்பாரை கொண்டு ஆம்னி வேன் முன் பக்கத்தை நெம்பி படுகாயம் அடைந்த வேன் டிரைவர் பெருமாளை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காஞ்சிபுரத்தில் கோவில்கள் அருகே வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- கோவில் அருகிலேயே வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.
காஞ்சிபுரம்:
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள்கோவில், உலகலந்த பெருமாள் கோவில், வழக்கறுத்தீஸ்வரர்கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், குமரகோட்டம் முருகன்கோவில் உள்ளிட்ட சிறப்பு பெற்ற தலங்கள் உள்ளன. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த கோவில்கள் அருகே பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும்போது வாகனங்களை நிறுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும் பக்தர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கோவில்கள் அருகேயே பக்தர்களின் வாகனங்களை தனியாக நிறுத்த இடம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கோவில்கள் அருகே வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது வாகனம் நிறுத்தும் இடங்களை கண்டறிந்து தேர்வு செய்து உள்ளனர்.
வரதராஜப் பெருமாள் கோவிலின் உள்பகுதியில் உள்ள இடம், நகரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மைதானம், உலகளந்த பெருமாள் கோவில் பின்புறம் உள்ள மைதானம், ஒலி முகமதுபேட்டையில் உள்ள இடங்கள் வாகனங்களை நிறுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மற்ற இடங்களிலும் பணி விரைவில் தொடங்கும்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாதது பெரும் பிரச்னையாக இருந்தது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே தற்போது கோவில் அருகிலேயே பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் இனி நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவில் அருகிலேயே வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. ஒலி முகமதுபேட்டையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. இங்கு 250 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, பக்தர்கள் நீண்ட தூரம் நகருக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
- குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராடும் மக்களை நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காஞ்சிபுரம்:
குன்றத்தூர் - பல்லாவரம் சாலை விரிவாக்க பணிக்காக குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களை நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மூதாட்டி ஒருவரை அணைத்து ஆறுதல் கூறிய சீமான், 'விவசாயி சின்னத்தில் ஒருமுறை கை வையுங்கள்.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். அப்போது கட்சியினர் உற்சாக குரல் எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், அனைத்து வளங்களையும் கொண்ட தமிழகத்தின் இரண்டு மாவட்டங்கள் அளவு கொண்ட சிங்கப்பூரிடம் முதலீட்டாளர்களை கேட்பது தமிழகத்தையும் இனத்தையும் அவமதிக்கும் செயல் என்றார்.
- அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சிவருத்ரய்யா (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.
இதற்கு தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044 27238837, 27238551 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 7904559090, 95669 90779 செல்போன் எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர், முகவர்கள் என பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
- கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
காஞ்சிபுரம்:
சென்னையை மையமாக கொண்டுள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர், முகவர்கள் என பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை ஜெம் நகர் அருகாமையில் வசித்து வரும் முதியோர்களான ஸ்டீபன் (63) மற்றும் சுகுணா தேவி (59) தம்பதியின் வீட்டை ரூ.26 லட்சத்திற்கு தனது பெயருக்கு நாகராஜ் மாற்றியுள்ளார். அதில் ரூ.6 லட்சத்தை முதியவர் ஸ்டீபனின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து 3 மாதங்கள் மட்டுமே மாதம் ரூ.1 லட்சம் கிடைத்த நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முகவர் நாகராஜ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முகவர் நாகராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நாகராஜ் ஒரு சிலருடன் ஸ்டீபன், சுகுணா தேவி வசிக்கும் வீட்டுக்கு சென்று அவர்களின் செல்போனை பறித்து கொண்டு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசி விட்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேசில் ஆனந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
- 2-ந்தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது.
- 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று முதல் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் முருகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், ஜூன் 2-ந்தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 3-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
- புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும்.
- புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் புத்தகரம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
புத்தர் கோவில் அமைந்திருக்கும் இடம் புத்த விகாரம் என்று அழைக்கப்படும். புத்த கிரகம், புத்த விகாரம் என்பது காலப்போக்கில் மருவி புத்தகரம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், இடையே உள்ள இடத்தில் குளம் சீரமைத்தபோது அழகிய புத்தர் சிலை ஒன்று கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்த புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும், செம்பாதி தாமரை அமர்வு உடன் கால்களும், சிந்தனை முத்திரையுடன் கைகளும், தலைமுடி சுருள் சுருளாகவும், ஞான முடி தீப்பிழம்பாகவும், கழுத்தில் மூன்று கோடுகளும், இடது புற தோள் மட்டும் சீவர ஆடையால் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலையின் பின்புறம் தலைப்பகுதியில் தாமரை மலர் மீது அறவாழி சக்கரம் அமைந்துள்ளது.
பின்புறம் உள்ள உடலின் முதுகுப் பகுதியில் சீவர ஆடை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 16-ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட புத்தர் சிலையில் காண முடியும்.
தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள புத்தகரத்தில் மட்டுமே பவுத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிஷிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வு குழுவினர் கடந்த 2009-ம் ஆண்டிலேயே கண்டறிந்து உள்ளனர்.
மேலும் புத்தகரம் கிராமப் பகுதியில் பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதும், பல்லவர் காலத்திற்கு முந்திய குடியேற்றங்களும் இருந்து உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது. அத்தகைய சிறப்புகளை உடைய புத்தர் சிலையை தற்பொழுது வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அஜய குமார் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதியைப் பெற்று புத்த விகாரம் எனும் புத்தர் கோவில் சுற்றுலா துறையின் மூலம் கட்டப்பட உள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சி துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
- காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது.
- போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மாகரல், பெரிய காலனியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது64). இவர் இன்று காலை வீட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜவேலு உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் மாகரல் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
- பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.






