என் மலர்
காஞ்சிபுரம்
- பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
- வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உலகப் பிரசித்தி பெற்றது. அத்தி வரதர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.
ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் தேரோட்டம் தொடங்கியது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர்.
இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியில் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேராட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கண்காணிப்பு படையினர் கேமிரா அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது.
- மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு படையினர் கேமிரா அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அங்கு கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும், காஞ்சிபுரம் தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற அறைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. மேலும் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள் அருகில் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
- கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராம ஜெயம் (வயது38). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரத்னா(30). இவர்களது மகள்கள் ராஜலட்சுமி(5), தேஜாஸ்ரீ(2), மற்றும் 4 மாத ஆண் கைக்குழந்தை இருந்தது.
ரத்னா தனது கடைசி மகன் பிரசவத்தையொட்டி 2 மகள்களுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி மற்றும் மகள்கள், குழந்தையை அழைத்து வர ராமஜெயம் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் என்பவருடன் சென்னைக்கு காரில் வந்தார். பின்னர் அவர்கள் ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தேரி மேடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் கார் சென்று கொண்டு இருந்தபோது சாலையோரத்தில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 4 மாத கைக்குழந்தை மற்றும் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
காரை ஓட்டி வந்த ராம ஜெயம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாலு செட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ராமஜெயத்தை மீட்பு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான ரத்னா உள்பட 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.மேலும் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிறுநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சரக்கு லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
- 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மணிமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவரது நண்பர்கள் குணா, விக்கி. இந்த நிலையில் தினேஷுக்கும் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் 28-ந்தேதி அன்று தினேஷ் வரதராஜபுரம் தாம்பரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தினேஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் வரதராஜபுரம் பி.டி.சி. குடியிருப்பு பகுதி அருகே பதுங்கி இருந்த 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் ( 23), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்கிற சந்துரு ( 21), முடிச்சூர் பகுதியை சேர்ந்த சரண்குமார் (21), 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. விசாரணையில் முன்விரோதத்தில் வெட்டியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் ஐஸ்வர்யாவை கீழே தள்ளி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.
மணிமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சி.ஐ.டி. அவென்யு பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஐஸ்வர்யாவை கீழே தள்ளிவிட்டு ஐஸ்வர்யாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக படப்பை பகுதியில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பப்லு (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஐஸ்வர்யாவை கீழே தள்ளி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பப்லுவை போலீசார் கைது செய்தனர்.
- அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.
- 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.
இனி வரும் காலங்களில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியிலும் மாதத்தின் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும் முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 போன்றவற்றுடன் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுங்கள்.
- வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 3-வது நாளான இன்று கருடசேவை உற்வம் விமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி இன்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண பாடலுடன் வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்ததால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நான்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கருடசேவை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது:-காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
மாதிரித் தேர்வு கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
- மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும்.
- தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.
விருது பெற விரும்பும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் தமிழ் நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
விருதினை பெறுவதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின், அவர்கள் 10.6.2023 மாலை 5 மணிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (https://awards.tn/gov.in) விண்ணப்பித்தும் மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை, கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.
- ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இதே ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.
இந்த நிலையில் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு வாகனங்களை ஓட்டி அவதி அடைந்து விபத்து ஏற்படும் வகையில் செல்கின்றனர்.
இதனால் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்களும் பாதிப்படைகின்றனர். இதனால் மாசு கலந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே குப்பைக் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுக்க ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.
- கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி கிடந்த மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.
இதுகுறித்து பாலு செட்டிசத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டான்.
- சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சாமுவேல் வயது 16. இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நண்பர்கள் சிலருடன் பழையசீவரம் பாலாற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டான்.
சாமுவேல் நீரில் மூழ்கி காணாமல் போனது குறித்து நண்பர்கள் ஓடிச் சென்று கிராமத்தில் தெரிவித்த நிலையில், கிராம மக்கள் ஓடி வந்து தடுப்பணையில் தீவிரமாக தேடினர். நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






