என் மலர்
காஞ்சிபுரம்
- கைதான இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர்.
- காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் இவரது ஆதரவாளர்கள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் போலீஸ் நிலையங்களை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக பதிவிட்டு இருந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட உழகோல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (19), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட உதவிய கிதிரிப் பேட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர். இதுதொடர்பாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
- மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
புகார்களின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
- அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள 3 சரக்கு லாரிகளில் காற்றாலைக்கான இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சாலையோர பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக கவிழ்ந்தது.
அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.
- காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தினேஷ் (வயது 26). இவர் பிறந்த நாள் மற்றும் திருமண வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் இதே தொழில் செய்யும் தனது நண்பரான குமரன் மகன் மற்றொரு தினேஷ் (27) என்பவருடன் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டையில் பிறந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் செங்கழுநீரோடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பொன்னேரிக்ரையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த குமரன் மகன் தினேசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் செல்வம். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது வைரலாக பரவி வந்தது.
இந்த நிலையில் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.
- பிரசாந்த் மீது சென்னையில் மட்டும் கொலை, கொள்ளை என 5வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மர்ம நபர்கள் கத்திமுனையில் உதயகுமாரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி, பைக் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் புதிய புறநகர் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சக்திவேல் என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கொள்ளையர்களை பிடிக்க கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் , சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நந்திவரம் பெரியார் நகரை சேர்ந்த விஜய்பீட்டர், நந்திவரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம், சென்னை பூக்கடை பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற கொசுறு சூர்யா, வளசரவாக்கம் ஷேக் அப்துல்லாநகரை சேர்ந்த பிரசாந்த், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பிரசாந்த் மீது சென்னையில் மட்டும் கொலை, கொள்ளை என 5வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் இருங்காட்டுகோட்டை உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து பழைய ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கத்திமுனையில் உதயகுமாரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.
இதேபோல் கடந்த 7-ந் தேதி காமராஜர் சாலையில் ஆந்திரா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அஜிஸ் பாஷா என்பவரிடமும் மர்ம நபர்கள் செல்போன், பணத்தை பறித்து தப்பினர்.
இந்த கொள்ளை தொடர்பாக பரத், மணிகண்டன், பாலசந்தர் ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், பட்டாகத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.
- லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அறிவுறுத்துதலின்பேரில் நேற்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.
லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின், தலைவர், முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன், பார் அசோசியேஷன் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் வித்தகவேந்தன், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வக்கீல்கள் பத்மநாபன், சத்தியமூர்த்தி, மூத்த காப்பீட்டு நிறுவன வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதில் காஞ்சிபுரம் வட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 130 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 236 இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதனை காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.
- அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது.
- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியின்போது பொதுப்பணித்துறை அனுமதியுடன், ஏரி மண்கள் ஏலம் விடப்படும். அந்த வகையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், உள்ள ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் ஏரி மண்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் ஏரி மண்கள் அவலூர்-வாலாஜாபாத் தரை பாலம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது. ஆனாலும், இந்த பாலத்தில் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் தினமும் சென்று கொண்டிருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்று வட்டார கிராம பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த தரைப்பாலம் வழியாக பள்ளிக்கு சென்று வருவார்கள்.
மாணவர்கள் செல்வதால் இந்த தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வப்போது, இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதாகவும், விபத்து ஏற்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில் மாற்று பாதையில் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழியில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல இருப்பதால், இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
- பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும் நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.
அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி திருவிழாவையொட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
- சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (26). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சந்தானம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதுமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று காலை மது குடித்துவிட்டு வந்த சந்தனத்துடன் தகராறு செய்த வேண்டா ஆவேசத்துடன் அங்கு இருந்த அம்மிக்கலை தூக்கி சந்தனத்தின் தலையில் போட்டார். மேலும் கோபம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்தார். இதில் சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சந்தானம் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட வேண்டா பின்னர் தன்னுடைய சேலையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.
- தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா. இவர்களது மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது6), சித்திக் வைபவ். சஸ்வின் வைபவ் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையை முன்னிட்டு அதே பகுதி சுந்தரம் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் சஸ்வின் வைபவ் நீச்சல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.
சிறுவன் சஸ்வின் வை பவ் நீச்சல் பழகிக்கொண்டு இருந்த போது தாரிகா தனது மற்றொரு மகன் சித்விக் வைபவுக்கு உணவு கொடுக்க நீச்சல் குளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு அழைத்து சென்றார்.
அப்போது நீச்சல் குளத்தில் இருந்த சிறுவன் சஸ்வின் வைபவ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் யாரும் கவனிக்க வில்லை. சிறிது நேரத்தில் சஸ்வின் வைபவ் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சிறிது நேரத்துக்கு பின்னர் தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான். அவனை தேடிய போது நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. அவனது உடலைபார்த்து தாரிகா அலறி துடித்தார்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
- வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகநாயகி (வயது 52). இவர் வாலாஜாபாத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோவிலில் துப்புரவு பணியாளராக பணி செய்து வந்தார். நாள்தோறும் அய்யன்பேட்டையில் இருந்து வாலாஜாபாத்திற்கு பஸ்சில் பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் லோகநாயகி வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்பி வந்து அய்யன்பேட்டையில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லோகநாயகியின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் சாலையில் விழுந்த லோகநாயகி படுகாயம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






