என் மலர்
காஞ்சிபுரம்
- அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
- விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
அனுமதி பெறாமல் பதாகைகள், தட்டிகள், பேனர்கள் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2-ந் தேதி, கலெக்டர் தலைமையில், துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, கிராம ஊராட்சிகளில், விளம்பர பதாகைகள் நிறுவ, கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் வைத்தால், ஊராட்சி நிர்வாகத்தால் உடனடியாக அகற்றப்படும். விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் அவரது கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இது போலீசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடி தினேசை அதிரடியாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம் பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் கையில் பட்டா கத்தியுடன் சுற்றினார். திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே கஞ்சா வாலிபர் கையில் பட்டாகத்தியை வீசியபடி அங்குள்ள கலைவாணி என்பவரது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி தனது குழந்தைகளை வெளியே அழைத்து வந்து அந்த கஞ்சா வாலிபரை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்பக்கம் பூட்டி சிறைவைத்தார்.
இதனால் கோபம் அடைந்த போதை வாலிபர் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட கஞ்சா போதை வாலிபரை மீட்டு, அவரிடம் இருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.
நிற்க கூட முடியாத அளவுக்கு அவர் கஞ்சா போதையில் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போலீசார் திணறினர். விசாரணையில் அவர், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மருந்து கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு சென்றனர்.
- கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மணிமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியை சேரந்தவர் நாகராஜ் (வயது 57), படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பூட்டியிருந்த மருந்து கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு சென்றனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- திருடன் சாமி படங்களை வணங்கினான். கடையின் சுவற்றில் மாட்டப்ட்டிருந்த அனைத்து சாமி படங்களின் முன்பும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான்.
- கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய போது அவன் செல்போனிலும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான்.
தாங்கள் செய்யும் காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு வரும் சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் திருடன் ஒருவன் தான் திருடுவதற்கு முன்பு சாமி கும்பிட்டு விட்டு திருட்டை அரங்கேற்றிய சம்பவம் அங்கு சுங்குவார் சத்திரத்தில் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் சாலையில் ராஜ்குமார் என்பவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
கடைக்குள் சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தார். அந்த காட்சிகள் அவருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் வெள்ளை சட்டை அணிந்த திருடன் ஒருவன் ஹார்டுவேர் கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்தான்.
அவன் பணம் இருக்கும் கல்லாப் பெட்டியை தேடினான். அதற்கு முன்பு அவனது கண்ணில் கடையில் இருந்த சாமி படங்கள் தென்பட்டது. இதையடுத்து அந்த திருடன் சாமி படங்களை வணங்கினான். கடையின் சுவற்றில் மாட்டப்ட்டிருந்த அனைத்து சாமி படங்களின் முன்பும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான். அதன்பிறகு அவன் கல்லாபெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றான்.
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய போது அவன் செல்போனிலும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். இது தொடர்பாக கடை உரிமையாளர் ராஜ்குமார் போலீசில் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோ காட்சிகளை வைத்து திருடனை தேடி வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
- சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
- விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 2 விமானங்களும், கடப்பா செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்களும், கடப்பாவில் இருந்து வரவேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.
- கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
குன்றத்தூர்:
குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தாம்பரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். மேலும் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது பிடிப்பட்ட நபர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சையது அனீஸ் (வயது 25), முகமது முஸ்தபா (26), என்பது தெரியவந்தது. இவர்கள் திரிபுரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக எடுத்து வந்து குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
- கலந்தாலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின், சென்னை பெருநகர எல்லையானது ஏற்கெனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள பகுதிகள் என 5,904 சதுர கி.மீ. அளவுக்கு சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு, புதிய நகர் வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
அடுத்த கட்டமாக, காஞ்சிபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை புதுப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரிய தொழில்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க, கலந்தாலோசகரை நியமிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. அதற்கான கலந்தாலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.
- கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த பகுதியில் தொடங்கப்பட்டது.
- அகழ்வாராய்ச்சி பணி முழுமை அடைந்தால் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்படுவது தெரிய வரும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி தொல்லியல் துறை சென்னை வட்டார தொல்லியல் துறை கண் காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கியது.
பணி தொடங்கப்பட்டு 3 மாதம் நடைபெற்று வந்தது. தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
கண்ணாடி மணிகள். வட்ட சில்கள், இரும்பாலான ஆயுதம், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், முத்திரை சீல், 0.86 மில்லிகிராம் அளவில் 2 தங்க அணிகலன்கள் மற்றும் பழைய கற்காலத்தில் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்டவை கிடைத்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த பகுதியில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணியில் தங்க ஆபரணத்திலான சிறு தகடு, ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள், சுடுமன் கருவி, செப்பு சிறிய கிண்ணம், செப்பு கிண்ண மூடி, சுடுமண் பொம்மைகள், செப்பு வளையங்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. அகழ்வாராய்ச்சி பணி முழுமை அடைந்தால் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்படுவது தெரிய வரும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.
தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியின்போது தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்படும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் தொல்லியல் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- சஞ்சய் ராவத்தை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
ஒடிசா மாநிலம் பகத்காபள்ளி, கம்ஜம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ராவத் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மேஸ்திரி ஆனல் நாயக் என்பவரின் கீழ் கீழம்பி கிராமத்தில் சென்னையில் இருந்து செயல்படும் கட்டுமான நிறுவனம் கட்டிவரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கீழம்பி சந்திப்பு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டிக்கொண்டார்.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சஞ்சய் ராவத்தை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சய் ராவத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
- நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
குன்றத்தூர்:
குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி தலைமையில் தீவிரமாக கண்காணித்த போது நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூருவில் இருந்து சென்னை வந்த நைஜீரிய நாட்டு வாலிபர் ஆரோன் பெல் (30), என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு உரிய வேலை இல்லாததால் மனைவியின் சம்பளத்தில் பெங்களூருவில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.
மேலும் சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு பெங்களூருவில் இருந்து கொக்கைனை (போதை பொருள்) மொத்தமாக வாங்கி வந்து குன்றத்தூர் அருகே தங்கி இருக்கும் சாமுவேல் என்பவரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை சாமுவேல் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர் சாமுவேலையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஜாமீன் பெற்று மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.
- கணேசனை ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்தார்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, வெண்குடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவர் கள்ளச்சாராயம் விற்றதாக வாலாஜாபாத் போலீஸ் நிலையம், மற்றும் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. அதன்படி கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஜாமீன் பெற்று மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.
இதையடுத்து தொடர் குற்றச்செயலில் ஈடுபடும் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையை ஏற்று கள்ளச்சாராய வியாபாரி கணேசனை ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்தார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்த அறிவிப்பாணையை ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கள்ளச்சாராய வியாபாரி கணேசனுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் வழங்கி உள்ளனர்.






