என் மலர்
காஞ்சிபுரம்
- சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆலந்தூர்:
ஐதராபாத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன்(55). தொழில் அதிபர். இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு, ஐதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் காஜா மொய்தீன் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது காஜா மொய்தீனின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் மோசடி வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் காஜா மொய்தீனின் பயணத்தை ரத்து செய்து, அவரை கைது செய்து தனி அறையில் வைத்தனர். இதுபற்றி தஞ்சாவூர் மற்றும் தெலுங்கானா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
- பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
ஆரணி கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் கடன் வாங்கி, வார தவணையில் செலுத்தி வரும் காஞ்சிபுரம் உப்பேரிகுளத்தை சேர்ந்த அபிபுல்லா என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார். அப்போது அபிபுல்லா தான் செலுத்தவேண்டிய ரூ.1,340-க்கு பதிலாக ரூ.600 மட்டும் கொடுத்தார்.
இதற்கு கணேசன் முழு பணமும் கொடுத்தால்தான் செல்வேன். இல்லையென்றால் நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அபிபுல்லா வீட்டுக்குள் சென்று தனது மகன் இலியாஸிடம் தெரிவித்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த இலியாஸ், நிதி நிறுவன ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார் இலியாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தபோது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் 216 மூட்டை ரேசன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.அதனை பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பிரித்திஷ்கா (வயது23). இவர் நேற்று மாலை நண்பர்களான அனகாபுத்தூரை சேர்ந்த செல்வன்(26),கோபிநாத்(23) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நண்பரை பார்க்க சென்றார்.
பின்னர் இரவு 9 மணியளவில் அவர்கள் 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். பிரித்திஷ்கா நண்பர்கள் இருவருக்கும் நடுவே அமர்ந்து பயணம் செய்தார். மீனம்பாக்கம் விமானநிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது அங்கு பேக்கரிக்கு பிஸ்கட், பிரட் சப்ளை செய்யும் வேன் ஒன்று பஞ்சராகி நின்றது. அந்த வேன் மீது பிரித்திஷ்கா மற்றும் வரது நண்பர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரித்திஷ்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் வந்த செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
- கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.19 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் தொடக்க விழா நடை பெற்றது. இதையொட்டி ராஜகோபுரம், ராஜகோபுரம் விநாயகர், ராஜகோபுரம் ஆறுமுகர், பல்லவ கோபுரம், விகட சக்கர விநாயகர், பல்லவர் கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர் ஆகிய சன்னதிகளில் திருப்பணிகள் செய்ய பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பாலாலய பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுவரை இந்து அற நிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பணிகள், திரு விழாக்கள், கும்பாபிஷேகம் என 788 விழாக்கள் சிறப்பாக நடைபெற்று உள்ளது. மேலும் 5001 ஏக்கர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4740 கோடி ஆகும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழி பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழ்நாடு அரசும் செய்யும். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினை இல்லை. இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகள் 2024 -ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் திருப்பணிகளை வேகப்படுத்தி குடமுழுக்கு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
- விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
அனுமதி பெறாமல் பதாகைகள், தட்டிகள், பேனர்கள் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2-ந் தேதி, கலெக்டர் தலைமையில், துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, கிராம ஊராட்சிகளில், விளம்பர பதாகைகள் நிறுவ, கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் வைத்தால், ஊராட்சி நிர்வாகத்தால் உடனடியாக அகற்றப்படும். விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் அவரது கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இது போலீசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடி தினேசை அதிரடியாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம் பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் கையில் பட்டா கத்தியுடன் சுற்றினார். திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே கஞ்சா வாலிபர் கையில் பட்டாகத்தியை வீசியபடி அங்குள்ள கலைவாணி என்பவரது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி தனது குழந்தைகளை வெளியே அழைத்து வந்து அந்த கஞ்சா வாலிபரை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்பக்கம் பூட்டி சிறைவைத்தார்.
இதனால் கோபம் அடைந்த போதை வாலிபர் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட கஞ்சா போதை வாலிபரை மீட்டு, அவரிடம் இருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.
நிற்க கூட முடியாத அளவுக்கு அவர் கஞ்சா போதையில் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போலீசார் திணறினர். விசாரணையில் அவர், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மருந்து கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு சென்றனர்.
- கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மணிமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியை சேரந்தவர் நாகராஜ் (வயது 57), படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பூட்டியிருந்த மருந்து கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு சென்றனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- திருடன் சாமி படங்களை வணங்கினான். கடையின் சுவற்றில் மாட்டப்ட்டிருந்த அனைத்து சாமி படங்களின் முன்பும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான்.
- கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய போது அவன் செல்போனிலும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான்.
தாங்கள் செய்யும் காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு வரும் சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் திருடன் ஒருவன் தான் திருடுவதற்கு முன்பு சாமி கும்பிட்டு விட்டு திருட்டை அரங்கேற்றிய சம்பவம் அங்கு சுங்குவார் சத்திரத்தில் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் சாலையில் ராஜ்குமார் என்பவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
கடைக்குள் சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தார். அந்த காட்சிகள் அவருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் வெள்ளை சட்டை அணிந்த திருடன் ஒருவன் ஹார்டுவேர் கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்தான்.
அவன் பணம் இருக்கும் கல்லாப் பெட்டியை தேடினான். அதற்கு முன்பு அவனது கண்ணில் கடையில் இருந்த சாமி படங்கள் தென்பட்டது. இதையடுத்து அந்த திருடன் சாமி படங்களை வணங்கினான். கடையின் சுவற்றில் மாட்டப்ட்டிருந்த அனைத்து சாமி படங்களின் முன்பும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான். அதன்பிறகு அவன் கல்லாபெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றான்.
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய போது அவன் செல்போனிலும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். இது தொடர்பாக கடை உரிமையாளர் ராஜ்குமார் போலீசில் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோ காட்சிகளை வைத்து திருடனை தேடி வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
- சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
- விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 2 விமானங்களும், கடப்பா செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்களும், கடப்பாவில் இருந்து வரவேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






