என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 6 வழி சாலை ஒரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சாலை ஒரங்களில் துர் நாற்றம் வீசுகிறது.
    • குப்பை கழிவுகளினால் மர்ம காய்ச்சல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம் கரசங்கால், படப்பை, சாலமங்கலம், செரப்பணஞ்சேரி, வைப்பூர், வட்டம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. 6 வழி சாலை ஒரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சாலை ஒரங்களில் துர் நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    மேலும் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளினால் மர்ம காய்ச்சல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே வண்டலூர்- வாலாஜாபாத் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றவும், சாலை ஓரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
    • சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார் சத்திரம் அடுத்த மொளச்சூரை சேர்ந்தவர் விஷ்ணு(வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏழுமலை(25) என்பவருடன் மொளச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுங்குவார் சத்திரம் நோக்கி சென்றார்.

    அப்போது திருவள்ளூர் மாவட்டம் பண்ணுர் பகுதியை சேர்ந்த பரங்கிராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மீது விஷ்ணுவும் அவரது நண்பர் ஏழுமலையும் வந்த மோட்டார் சைக்கிள் உரசியதாக தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சிறிது தூரம் சென்றபோது பரங்கிராஜ் ஓட்டி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது பரங்கிராஜ் திட்டமிட்டு காரை வேகமாக ஓட்டிவந்து மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு விஷ்ணுவை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பரங்கிராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு இன்று காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும்.
    • 19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது.

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடிப்பூர உற்சவம் வருகிற 12-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் காலையில் கொடியேற்றி 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக வருகிற 15-ந் தேதி நந்தி வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள், வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்று வழியாக கிரிவலம் செல்கிறார்.

    19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது. உத்திர நட்சத்திர நாளான 23-ந்தேதி மூலவருக்கு முழு அபிஷேகத்துடன் வழிபாடு, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது.
    • 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    பயனாளிக்கு இழப்பீட்டுத் தொகையினை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் லோக் அதாலத்தை தொடக்கி வைத்து சமரசம் செய்து வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

    தொடக்க விழாவுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லோக் அதாலத்தில் விசாரணைக்காக மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    தொடக்க விழா நிகழ்வில் நீதிபதிகள் இனிய கருணாகரன், வாசுதேவன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, பரணி, ரஞ்சனி மற்றும் மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் நன்றி கூறினார்.

    • ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.
    • புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும் 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் முதல் கட்டமாக 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

    சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர்பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737,738 விமானங்கள் மட்டுமே குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கு சோதனை முறையில் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. கொழும்பு, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், தோஹா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.

    இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என 36 பன்னாட்டு விமான சேவைகள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து இயங்கப்பட்டது.

    பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், தாய் ஏர்லைனஸ் உள்பட பெரிய ரக விமானங்கள் புதிய முனையத்தில் நேற்று முதல் இயங்க தொடங்கியது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும் 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய பன்னாட்டு வருகை முனையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்றும், 2-ம் கட்ட கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நகரியம் பகுதியில் உள்ள கடற்கரையில் பழனியப்பன் பிணமாக கிடந்தார். அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமை ஆசிரியர் பழனியப்பன் கூவத்தூரில் இருந்து கல்பாக்கம் கடற்கரைக்கு எதற்காக வந்தார்? அவர் கடலில் இறங்கியபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந் தாரா? அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விமான நிலையம் அமைய உள்ள பகுதிக்கு மஞ்ச நாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்ய வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமக்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். திடீரென சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பாலாற்றுக்கு சிறப்பு தீபாராதனைகளை செய்தனர்.
    • தென்பாரத கும்பமேளா கும்பகோணத்தில் நடத்தப்பட்டது

    காஞ்சிபுரம் ஓரிக்கை மகா பெரியவர் சுவாமிகள் மணிமண்டபம் அருகே பாலாற்றங்கரையில் நதிகளை பாதுகாக்க வலியுறுத்தி பாலாறு ஆரத்தி விழா நடைபெற்றது. அகில இந்திய சன்னியாசிகள் சங்கம், பாலாறு பாதுகாப்பு இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இணைந்து காஞ்சீபுரம் ஓரிக்கை மகா பெரியவர் சுவாமிகள் மணிமண்டபம் அருகில் பாலாற்றங்கரையில் பாலாறு ஆரத்தி விழாவை துறவிகள் கொண்டாடினார்கள்.

    விழாவுக்கு சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமை வகித்து பாலாறு அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார். பின்னர் சன்னியாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாலாற்றுக்கு சிறப்பு தீபாராதனைகளை செய்தனர்.

    விழாவுக்கு உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கர்ஷினி அனுபவானந்த், சஞ்சீவி மடத்தின் நிர்வாகி அனுமன் மாதாஜி, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம், பாலாறு பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சன்னியாசிகள் சங்க இணைச் செயலாளர் சிவராமானந்தா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாநகர பா.ஜ.க. மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் உள்பட திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு பாலாறு அம்மனை தரிசித்தனர்.

    சுவாமி ராமானந்தா மகராஜ் இது குறித்து கூறியதாவது:-

    இந்தியாவில் உள்ள நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும், நதிகள் மாசுபடுவதால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் சுத்தமான தண்ணீர் பெறுவது சிரமமாக உள்ளது. நதிகளில் கழிவு நீர் செல்வதை தடுப்பது, குப்பைகளை கொட்டுவது, புனித தலங்களில் பரிகாரம் என்ற பெயரில் அணிந்திருக்கும் துணிகளை போடுவது போன்றவற்றில் இருந்து நதிகளைப் பாதுகாக்கவும், மாசடையாமல் இருக்கவும் சன்னியாசிகள் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    நதிகளை தெய்வங்களாக கருதி அவை ஒவ்வொன்றுக்கும் சிலைகள் உருவாக்கப்பட்டு நதிக்கரையோரங்களில் மக்களை திரட்டி அந்த சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்து நதிகளை வழிபட்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் 800 இடங்களில் நதிகளை பாதுகாக்க ஆரத்தி விழாக்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    தென்பாரத கும்பமேளா கும்பகோணத்தில் நடத்தப்பட்டது. ஆரத்தி விழா நடத்தப்படும் இடங்கள் அனைத்திலும் ரதயாத்திரை, பாதயாத்திரை போன்றவற்றின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இந்தியாவின் பிரதான நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்திரா, காலடி, பண்டரிபுரம் போன்ற இடங்களிலும் ஆரத்தி விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை குற்றாலம் பிரதான அருவி அருகில் உள்ள சித்ரா நதிக்கரையோரத்தில் ஆரத்தி விழா நடைபெறவுள்ளது.

    விழா நடைபெறும் 3 நாட்களும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 25-ந்தேதி முதல் 31 -ந்தேதி தேதி வரை கோவை பேரூராதீன மடத்தில் நொய்யல் நதிக்கான விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
    • விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது.

    மீனம்பாக்கம்:

    இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு நகருக்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே தமிழர்கள் அதிக அளவு வசிக்கக்கூடிய யாழ்ப்பாணம் நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து ஏர்-இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டில் இருந்து சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டபோது, சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.

    கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அதன்படி சென்னை- யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவையை 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் என மீண்டும் தொடங்கியது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் இந்த விமானத்தில் அதிக அளவில் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி விமானமாக சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

    இதையடுத்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16-ந்தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தினசரி விமான சேவையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் இலங்கை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது53).இவர் காஞ்சிபுரத்தில் உள்ள டாக்டர் பி.எஸ். ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று காலை அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். பின்னர் அவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆசிரியர்கள் விரைந்து வந்து சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆசிரியர் சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

    வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது ஆசிரியர் சக்திவேல் இறந்த சம்பவம் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்த ஆசிரியர் சக்திவேல் இதே பள்ளியில் தொழிற்கல்வி படிப்பு முடித்து 1994-ம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு முதல் அவர் நிரந்தர ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் 2 மகள்களும் உள்ளனர்.

    • பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் தச்சராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    ×