என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் உரசிய தகராறில் காரை ஏற்றி வாலிபர் கொலை- நண்பர் படுகாயம்
- நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
- சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர்:
சுங்குவார் சத்திரம் அடுத்த மொளச்சூரை சேர்ந்தவர் விஷ்ணு(வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏழுமலை(25) என்பவருடன் மொளச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுங்குவார் சத்திரம் நோக்கி சென்றார்.
அப்போது திருவள்ளூர் மாவட்டம் பண்ணுர் பகுதியை சேர்ந்த பரங்கிராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மீது விஷ்ணுவும் அவரது நண்பர் ஏழுமலையும் வந்த மோட்டார் சைக்கிள் உரசியதாக தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சிறிது தூரம் சென்றபோது பரங்கிராஜ் ஓட்டி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது பரங்கிராஜ் திட்டமிட்டு காரை வேகமாக ஓட்டிவந்து மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு விஷ்ணுவை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பரங்கிராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






