என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
    • கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பஸ்களில் திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்களும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, விழுப்புரம் பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
    • காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.

    ஆனால் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதனால் வேகவதி ஆறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது.

    இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையடுத்து வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் கரையோரம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வருவாய்த்து றையினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம்.
    • நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் பொறியியல் துறையில் வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவு பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250 என்ற அடிப்படையில் ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625 ம் புன்செய் உழவுக்கு ரூ.1250 ம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று. நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

    செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. செல்போன் எண் 99529 52253.

    உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, செல்போன் எண்: 90030 90440.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும்.

    மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத் உத்திரமேரூர் திருப்பெரும்புதூர், குன்றத்தூர், ஆகிய வட்டாசியர் அலுவலகங்கள் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகங்களில், மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு பொது விநியாக நியாயவிலைக் கடைகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், இ-சேவை மையங்கள், வாக்குச்சாவடி மையங்கள், சமுதாய கூடங்கள் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும். விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்ய ஏதுவாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளின் விவரங்கள் வருமாறு:-

    மாவட்ட கலெக்டர் அலுவலகம்-044 27237107, 044-27237207, காஞ்சிபுரம் வட்டம்-044-27222776, வாலாஜாபாத் வட்டம்-044-27256090, உத்திரமேரூர் வட்டம்-044-27272230, திருப்பெரும்புதூர் வட்டம்-044-27162231, குன்றத்தூர் வட்டம்-044-24780449.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் விற்பனை ஆகாத உணவை பதப்படுத்தி மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது விற்பனை ஆகாத உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும், மேலும் ஓட்டலை உரிய பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை விதித்து உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்னர் மீண்டும் விற்பனையை தொடங்க உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதேபோல் சுகாதார அதிகாரிகள், உரிய அனுமதியின்றியும் சுகாதார மில்லாமலும் செயல்படும் சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
    • தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.

    மரக்கன்றுகள் நடும் விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, முத்து சுந்தரம், ஆகியோர் கிராம மக்களோடு கலந்து கொண்டு ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் எனும் பழமொழிக்கு ஏற்ப தேவரியம்பாக்கம் கிராமப் புறத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான்.இவர் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து உள்ளார்.

    நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைத்து இருந்த உயர்ரக செல்போன் அனைத்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் செல்போன்கள் அனைத்தையும் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து செல்வது பதிவாகி உள்ளது. அவர்கள் திட்மிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது அடுத்த மாதம் 15-ந் தேதி அன்று நடைபெறும் சுகந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

    இந்த விருது தொடர்பாக தகுதிகளாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மார்ச் 31, 2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

    1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 20-ந் தேதி மாலை 4 மணி ஆகும்.

    விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விண்ணப்பித்த தங்களின் சாதனைப் பற்றிய பத்திரிகை செய்திகள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து ஆவணங்களையும் 3 புத்தகங்களாக தயார் செய்து காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் இந்த மாதம் 21-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அ) தொலைபேசி எண். 7401703481 (அ) 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பையொட்டி தங்கத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிகப்பு நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, சம்பங்கி பூ மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல காஞ்சீபுரம் காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தங்கத்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.
    • மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து, முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜரின் 121- ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளி, ஏரிவாய் அரசு ஆரம்ப பள்ளி, வள்ளுவப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி, மற்றும் களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ஆகிய 4 பள்ளிகளில் படிக்கும் 520 மாணவர்களுக்கு தேவையான தரமான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், அரிச்சுவடி, வாய்பாடு, கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி)மாவட்ட செயலாளரும், ஆன்மீக பிரமுகரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.வீ.ஜோதியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் மாவட்ட கழக அவைத் தலைவர் ரங்கநாதன், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஊராட்சிமன்ற உறுப்பினர் திருவேங்கடம், தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீமணிமாலா, ஏரிவாய் செல்வி, வள்ளுவப்பாக்கம் ஞானேஸ்வரி, களியனூர் மோகன காந்தி மற்றும் மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி, தேசிய கொடியை மாவட்ட கழக செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    • நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.
    • பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (வயது30). இவர் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர்தனபாலின் அக்காள் மகன் ஆவார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மாயமான கிரிதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

    இதற்கிடையே அவரை நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கிரதரனின் நண்பர்களான பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக், ஆகாஷ், ஹரிஷ், தாமோதரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி புதுப்பாளையம் அருகே பாழடைந்த வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட கிரிதரன் உடலை எலும்புக்கூடாக மீட்டனர். அவர் மாயமாகி 7 மாதத்துக்கு பின்னர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

    கிரிதரன் மாயமான ஜனவரி மாதம் 13-ந்தேதி நண்பர்களான ஹரிஷ் உள்பட 4 பேருடன் மதுகுடித்து உள்ளார். அப்போது கிரிதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கிரிதரனை நண்பர்களே அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலில் கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளனர். மேலும் இதுபற்றி வெளியில் தெரியாமல் இருப்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் மரக்கிளைகளையும் வெட்டிபோட்டு இருக்கிறார்கள்.

    இதனால் கிரிதரன் கொலையுண்டது வெளியில் தெரியாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிதரனின் நண்பர்கள் மதுபோதையில் இருந்தபோது கிரிதரணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருப்பதாக உளறி உள்ளனர்.

    இதன் பின்னரே கிரிதரன் கொலையுண்ட தகவல் போலீசுக்குதெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் காமராஜர் நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜ் நினைவு அறக்கட்டளையினர் காஞ்சிபுரம் நாடார் சங்கத்துடன் இணைந்து சங்க தலைவர் ராமேஸ்வரம் தலைமையில் காமராஜர் சிலைக்கு புது ஆடைகள் அணிவித்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. செயலாளர் வேலுமணி, பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை குமரகுருநாதன் நிர்வாகிகள் நாதன், காமராஜ், பார்த்தசாரதி, வஜ்ரவேல் இருந்தனர். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத். பா. கணேசன் தலைமையில் காமராஜர் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    ×