search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegavati River"

    • பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    • பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வேகவதி ஆறு தாமல் ஏரி அருகே உற்பத்தியாகிறது. பின்னர் காஞ்சிபுரம் நகரப்பகுதிக்குள் பாய்ந்து அதன்பிறகு திம்ம ராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலக்கிறது.

    இந்த ஆறு காஞ்சிபுரம் நகரபகுதிக்குள் பெருமளவில் ஓடுவதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    வேகவதி ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதால் ஆண்டு தோறும் இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வேகவதி ஆற்று பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதற்கு வசதியாக மழைக் காலங்களில் தூர்வாரும் பணி தொடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கை தடுக்க தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ஆனாலும் பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் பாலங்கள் உடைந்து விடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • 52 ஆண்டுகளுக்கும் மேலாக வேகவதி ஆற்றங்கரையில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்ற துடிப்பது கண்டிக்கத்தக்கது.
    • கீழ்க்கதிர்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் மேற்பூச்சு தொட்டாலே உதிரும் அளவுக்கு தரம் குறைவாக உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் நகரத்தின் மையப்பகுதியில் வேதவதி ஆற்றங்கரையில் குடிசைமாற்று வாரிய வீடுகளிலும், தனி வீடுகளிலும் வாழ்ந்து வரும் 3524 குடும்பங்களில் 600 குடும்பத்தினரை அங்கிருந்து அகற்றி கீழ்க்கதிர்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு அனுப்ப காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. 52 ஆண்டுகளுக்கும் மேலாக வேகவதி ஆற்றங்கரையில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்ற துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    கீழ்க்கதிர்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் மேற்பூச்சு தொட்டாலே உதிரும் அளவுக்கு தரம் குறைவாக உள்ளது.

    அவர்களுக்கு புதிய இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்காது. அது மட்டும் இன்றி, குடியிருப்புக்கு மிக அருகில் மதுக்கடை இருப்பதாலும், அதில் குடித்துவிட்டு வரும் குடிகாரர்கள் ரகளையில் ஈடுபடுவதாலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் இருந்து அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிக்கு மாற்றுவது என்பது, தண்ணீரில் வாழும் மீன்களை தரையில் வீசி வாழச் சொல்வதற்கு ஒப்பானது ஆகும். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவை கைவிடும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக வேகவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தாயார் குளம் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 மற்றும் 48 வது வார்டுக்கு உட்பட்ட மந்தவெளி, நாகலத்து மேடு, நாகலத்து தெரு போன்ற பகுதிகளில் ஜே.சி.பி. மூலம் வீட்டை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்தது.

    அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டு வீடு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    • வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
    • காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.

    ஆனால் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதனால் வேகவதி ஆறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது.

    இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையடுத்து வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் கரையோரம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வருவாய்த்து றையினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
    • கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் முருகன் காலனிக்கு செல்லும் கன்னிகாபுரம் பகுதியில் வேகவதி ஆற்று தரைப்பாலம் உள்ளது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் கன்னிகாபுரம் மக்கள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பருவமழை முடிந்த பின்னரும் சேதம் அடைந்த வேகவதி ஆற்றுத்தரைப் பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பொதுமக்களும் நீண்ட தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக சேதமடைந்த இப்பாலம் வழியாக ஆபத்தான முறையில் செல்வதினால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த இந்த பாலத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×