search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demolition of houses"

    • வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக வேகவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தாயார் குளம் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 மற்றும் 48 வது வார்டுக்கு உட்பட்ட மந்தவெளி, நாகலத்து மேடு, நாகலத்து தெரு போன்ற பகுதிகளில் ஜே.சி.பி. மூலம் வீட்டை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்தது.

    அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டு வீடு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    • வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் குப்பன் குளம் பகுதியில் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து 7 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் அருள் செல்வன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு முன்னதாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 7 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களையும் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை எடுக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்து தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து காலை முதல் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் திரண்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    • 2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது.
    • குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிராமம் மைலம்பாளையத்தை சேர்ந்த ராணி என்பவருக்கு கடந்த 2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது. மேற்படி இடத்தில் அவர் குடிசை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.

    இந்தநிலையில் இடம் தொடர்பான முன்விரோதம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கவுரி ( வயது 50), சாந்தி (50), மாணிக்கம் மூர்த்தி( 65), ராசு (54) மற்றும் அவரது உறவினர்கள் , ராணி குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.

    மேலும் ராணி , அவரது மகள் மோகனப்பிரியா (30), ராணியின் பேரன் கணேஷ்(2½) ஆகியோரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    குன்னத்தூர் நில வருவாய் ஆய்வாளர் நிலத்தை அளந்து கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பொதுப்பணித்துறை சார்பில் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • 86 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அணைபுதூர் ஜே.ஜே.நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில் 130 வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள 104 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 18 பேர் அந்த வீடுகளுக்கான தொகையை செலுத்தவில்லை. மேலும் 26 பேர் எங்களுக்கு வீடு வேண்டாம். நிலம் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் அந்த 44 பேரின் வீடுகள் தவிர, அங்கேயிருந்த 86 வீடுகள் இடித்து அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் நகராட்சி, வருவாய்துறை, மின்வாரியம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மீதமுள்ள 44 வீடுகள் மட்டும் அங்கு அகற்றப்படாமல் உள்ளது.

    அவர்களுக்கு காலி செய்து செல்ல 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இடித்து அகற்றப்பட்ட 86 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளது.
    • ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்: 

    கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே குளம் பகுதியில் 8 வீடுகள் உள்ளன‌. இந்த வீடுகள் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளதால் காலி செய்யக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி சார்பில் பொறியாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக கூறப்படும் வீடுகளை இடிக்க தயாரானார்கள். உடனே அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக இருந்தாலும் கூட இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இடமாகும். மேலும் இந்த இடத்திற்கும் மாநகராட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மேலும் இந்து அறநிலை துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்போது நாங்கள் உரிய பதில் அளிக்கிறோம். ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தற்சமயம் வீடுகள் இடிக்க மாட்டோம். வீட்டிற்கு வெளியில் உள்ள கழிப்பறைகளை இடிக்கவுள்ளோம் என கூறினார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த நபர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் வெளியில் இருந்த கழிப்பறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியினை தொடங்கினார்கள்‌‌ இந்த நிலையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    • மேல்மலையனூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குளத்துக்கு அருகில் இருந்த இடங்களில் 83 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதை உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி வருவாய் மற்றும் ஊரக உள்ளாட்சி ஆகிய துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது 10 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு நெருங்கி வருவதால் அதுவரையில் தங்களுக்கு கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி காலஅவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த கால அவகாசம் மு டிவடைந்துவிட்டதால் தாசில்தார் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்புச் செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முருகன் தலைமையில் 10 மணிக்கு சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் உயர்நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.எனவே ஆக்கிரமிப்புகளை நீங்களாகவே அகற்றிக்கொள்ளுங்கள். உங்கள் நிலை குறித்து மேலிடத்தில் தெரிவிக்கிறேன் என்று கூறியவுடன் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்பு வீடுகளிருந்த பொருட்களை அதன் உரிமையாளர்கள் எடுத்தவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் கடைகள் என 77ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவில் குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சுற்றி 30 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

    இதையடுத்து ஆக்கிரமித்து வீடு கட்டிருந்த பொது மக்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினார்கள். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு வீடுகளை விட்டு பொதுமக்கள் காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று திட்டக்குடி தாசில்தார் சத்தியன் தலைமையிலான அதிகாரிகள் வைத்தியநாதசாமி கோவில் குளம் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் உங்களுக்கு காலஅவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யவில்லை. எனவே, இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும். உங்கள் பொருட்களை எல்லாம் எடுத்துச்செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதையடுத்து வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் வெளியே தூக்கி வந்தனர். அதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

    அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×