என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
    • அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோரின் உத்தரவின் படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த 31 வாகனங்களை கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வாகனங்களுக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து இதுபோன்று மீண்டும் அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது, சாலைகளில் பக்கவாட்டில் வட்டமாக பொருத்தப்பட்டிருக்கும் போக்குவரத்து சின்னத்தில் குறிப்பிடப்பட்ட வேக அளவில்தான் அந்தந்த பகுதியில் செல்லவேண்டும் என்றும் விளக்கமளித்தார்.

    மேலும் தணிக்கையின் போது பெரும்பாலான டிரைவர்கள் தாங்கள் சரியான வேகத்தில் தான் வந்தோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் ரேடாரின் வேக புகைப்படத்தை பார்த்த பின்னர்தான் தம் தவறை உணர்ந்து, இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று உறுதி எடுத்து சென்றார்கள் என்றார்.

    • பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் டே பை டே என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள் வாசுதேவன் மற்றும் சுரேஷ். இவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த நிதி நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    இதில் ரூ.1லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்கள் தினமும் ரூ.1500 பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும்,அந்த முதலீட்டா ளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்டுகளுக்கு தினமும் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். மேலும் முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். போட்டி போட்டு முதலீட்டாளர்களையும் அறிமுகப்படுத்தினர். இந்த நிறுவனத்தில் பொது மக்கள் சுமார் ரூ.24 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை பணம் திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தையே காலி செய்துவிட்டு இயக்குனர்கள் வாசுதேவன் மற்றும் சுரேஷ் தலைமறைவாகிவிட்டனர்.

    இதனால் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.மேலும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான வாசுதேவன் மற்றும் சுரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த வாசுதேவனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.அதே போல் சுரேஷ் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பனபாக்கத்திற்கு சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக வேகவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தாயார் குளம் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 மற்றும் 48 வது வார்டுக்கு உட்பட்ட மந்தவெளி, நாகலத்து மேடு, நாகலத்து தெரு போன்ற பகுதிகளில் ஜே.சி.பி. மூலம் வீட்டை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்தது.

    அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டு வீடு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    • உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 24). இவர்களுக்க திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து கஸ்தூரியை பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனர். நேற்று மாலை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் கஸ்தூரியின் உடல் நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். இதனை கேட்டு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து டாக்டர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கற்பகம். இவர்கள் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஹேமலதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஹேமலதாவின் பெற்றோர் அவரை ஒழுங்காக படித்து நல்ல மதிப்பெண் எடுக்குமாறு அறிவுரை கூறி கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த ஹேமலதா பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் ஹேமலதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், மாணவி ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை.
    • சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் வேனில் பணிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் வேலைக்காக வேனில் சென்றனர். வேனை டிரைவர் சிவானந்தம் என்பவர் ஓட்டினார். சாலவாக்கம் அருகே பொற்பந்தல் ஏரிக்கரையோரம் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

    ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் மற்றும் கிராமமக்கள் விரைந்து வந்து வேனின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேரை பத்திரமாக மீட்டனர். வேன் கவிழ்ந்த வேகத்தில் தொழிலாளர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏரிக்கரையோரத்தில் வேன் கவிழ்ந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. குறைந்த அளவு தண்ணீரே அங்கு இருந்தது. ஆனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. கரையோரத்தை தாண்டி கூடுதல் தூரத்தில் வேன் பாய்ந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

    தற்போது அதிர்ஷ்டவசமாக அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர்.
    • விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சாலை கூவத்தூர் அடுத்த முகையூர் அருகே உள்ள ஓடையூர் ஏரியை ஒட்டி செல்கிறது. இதற்காக அடையாள கற்கள் நடப்பட்டன. நெடுஞ்சாலை பணியால் ஏரிப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நெஞ்சாலை பணியை தொடர பசுமைத்தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சாலை அமைப்பதற்கான மாற்று முறைகளை பரிசீலிக்க நெஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர். சென்னையில் இருந்து வரும்போது வலது புறத்தில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளாமல், இடதுபுறத்தில் மேலும் 3 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஏரி பகுதியை தவிர்க்க புதிய தடுப்பு சுவர் கட்டவும் முடிவு செய்து உள்ளனர். ஆனால் ஏரியின் குறுக்கே புதிய நான்கு வழிப்பாதையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பான வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதுதொடர்பான விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.

    மேலும் புதிய திட்டத்திற்கான வரைபடத்தை சமர்ப்பிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது. இந்த வழக்கு இன்று(24-ந் தேதி) (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
    • முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான மு.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் உரிமைத் தொகை பெற கட்டணமின்றி "சேமிப்பு கணக்கு" தொடங்க 50 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்து உள்ளது.

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வரும் ஜூலை 24-ந் தேதி தொடங்குகின்றன.

    இத்திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, சேமிப்பு கணக்கு துவங்க, முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 2 பாஸ் போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை கொண்டு ஆரம்ப தொகை இல்லாமல் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் கிளைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அருகாமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொது மக்கள் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நடத்தும் இந்த முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
    • மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் நாகலத்து தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத அழகிய நடராஜ பெருமான் ஆலயத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ தும்பவனம் மாரியம்மன் சித்திரை மற்றும் ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கங்கை அம்மன் நின்ற திருக்கோலத்தில் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு பம்பை மேள இசையுடன் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று இதில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். முன்னதாக மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தூபதீப ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகத்தா தெருவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்தார் . கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.
    • கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வழக்கறுத் தீஸ்வரர் கோவில் தெருவில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய விற்பனை நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

    இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது-

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுகள் தான் உண்மையான கைத்தறி பட்டுகள். இந்த பட்டுக்களில் தான் தங்கத்தின் அளவு, வெள்ளி அளவு ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அதில் ரூ.9 கோடி லாபம் கொண்டு வந்துள்ளோம். கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. ரூ.150 கோடியாக இருந்த விற்பனையை ரூ.200 கோடியாக உயர்த்தினோம். இந்த ஆண்டு ரூ.400 கோடி இலக்கு வைத்துள்ளோம். இதை நாங்கள் ரூ.1000 கோடியாக அதிகரிப்போம்.

    காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவில் விற்பனை ரூ.10 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக அதிகரித்துள்ளது. நலிவடைந்த சங்கங்களுக்கு முதலீடுகள் கொடுத்து தொடர்ந்து அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு உண்மையான பட்டு எது? என்று தெரியவில்லை. இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டுகள் குறித்த விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அனைத்து கூட்டுறவு கடைகளிலும், இதுகுறித்து தகவல்கள் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படப்பை அருகே உள்ள ஆதனூர் அம்பாள் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி (41). இவர் ஆதலூர் ஊராட்சியில் தி.மு.க. அவை தலைவராக உள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான மணல், ஜல்லி போன்றவைகளை விற்பனை செய்யும் தொழிலும், ஜே.சி.பி. எந்திரத்தை வாடகைக்கு விட்டும் வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் தனது மகனை அருகில் உள்ள பள்ளியில் விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சக்கரபாணிக்கு பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ(வயது 36).இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 6 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளன. ராஜீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வீட்டு உபயோக பொருட்கள் மார்க்கெட்டிங் தொழிலையும் செய்து வந்தார்.

    இந்நிலையில் ராஜீ தனது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் என பலரிடம் பணம் பெற்று ஆருத்ரா, மற்றும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் ரூ. 7லட்சம் வரை பணம் கட்டியுள்ளார். இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வழக்கில் சிக்கியதையடுத்து ராஜீ பணத்தை இழந்து தவித்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜீ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இதற்கிடையே பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியும் அதிகரித்தது.

    இந்நிலையில் ராஜீ வீட்டில் தனியாக இருந்த வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ராஜீ வெளியில் வராததால் அவரது பெரியம்மா நீலா என்பவர் கதவை தட்டினார். அப்போதும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிமெண்ட் சீட் போட்ட இரும்பு கம்பியில் வேட்டியால் தூக்கு போட்டு ராஜீ தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து ராஜீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ள நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீருடன் தவித்து வருகிறார்கள்.

    ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆருத்ரா, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பலர் மன உளைச்சலில் தவித்து வரும் நிலையில் இது போன்று மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் பணத்தை இழந்தவர்களுக்கு அதனை திருப்பி கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உள்ளது.

    ×