search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது-  11 பேர் மீட்பு
    X

    உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது- 11 பேர் மீட்பு

    • ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை.
    • சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் வேனில் பணிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் வேலைக்காக வேனில் சென்றனர். வேனை டிரைவர் சிவானந்தம் என்பவர் ஓட்டினார். சாலவாக்கம் அருகே பொற்பந்தல் ஏரிக்கரையோரம் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

    ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் மற்றும் கிராமமக்கள் விரைந்து வந்து வேனின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேரை பத்திரமாக மீட்டனர். வேன் கவிழ்ந்த வேகத்தில் தொழிலாளர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏரிக்கரையோரத்தில் வேன் கவிழ்ந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. குறைந்த அளவு தண்ணீரே அங்கு இருந்தது. ஆனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. கரையோரத்தை தாண்டி கூடுதல் தூரத்தில் வேன் பாய்ந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

    தற்போது அதிர்ஷ்டவசமாக அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×