என் மலர்
காஞ்சிபுரம்
- நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார்.
- காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த டிப்-டாப் உடை அணிந்த இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி இரண்டு தங்க செயின்களை திருடி தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து நகையை சுருட்டி செல்வது பதிவாகி இருந்தது.
விசாரணையில் அவர், வாலாஜாபாத் அருகே உள்ள புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (26) என்பது தெரிந்தது. அவரை காஞ்சி போலீசார் கைது செய்தது விசாரித்தனர். அப்போது கடனை அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.
கைதான காயத்ரி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, நகைக்கடையில் தங்க செயின்களை திருடினேன். ஆனால் கண்காணிப்பு காமிராவில் பதிவானதால் சிக்கிக்கொண்டேன் என்று கூறி உள்ளார்.
காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும்.
- மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்க்க வாரம் ஒரு நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 217 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டு மனைப் பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும்.
குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும், மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பரிசளிப்பு தொகைக்கான காசோலையும், கூட்டுறவுத் துறை சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பீட்டில் கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.07 கோடியில் வங்கி கடன் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
- இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.
- போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் என்னும் ஆட்சேர்ப்பு நிறுவனம் பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பசல் பீமா உதவியாளர்களை ஆட் சேர்ப்பு செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, ஆந்திர மாநிலத்தில் 829 பசல் பீமா உதவியாளர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்து விண்ணப்ப கட்டணமாக ரூ.250/- வசூலித்து உள்ளது தெரிய வருகிறது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எவரும் பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
- உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.
உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் அவருக்கு சீராக சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருத்தும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.
உடனே வார்டில் அந்த மாணவரை அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த மாஸ்கை பொருத்துவவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து இன்னொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும்.
இந்த மாஸ்கை பொருத்தும் போது அதில் உள்ள எலாஸ்டிக் கயிறை தலையின் பின்பக்கம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மட்டும் வாய் பகுதியை விட்டு நகராமல் அப்படியே இருக்கும்.
ஆனால் இந்த மாணவருக்கு மாஸ்க் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபுடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மாணவரும் அப்படியே பிடித்து சிரமப்பட்டு சமாளித்துள்ளார்.
இதை பார்த்த நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ எடுத்தவர் கூறும்போது, இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார். மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என்பதற்கு மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.
ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வழியில்லை.
இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.
- குன்றத்தூரில் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
- பக்தர் தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.
குன்றத்தூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்து வேண்டி உள்ளார். வேண்டுதல் நிறைவேறினால் தங்கத்தால் சேவல் கொடியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தான் சொன்னபடி ரூ.65 லட்சத்தில் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.
இதனை குன்றத்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் பெற்றுக்கொண்டார். அவருடன் முருகன் கோவில் அறங்காவலர்கள் குணசேகர், ஜெயக்குமார் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் கோவில் செயல் அலுவலர் கன்னியா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தற்போது காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தங்க சேவல் கொடியை தினமும் முருகபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
- முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரெயில்வே சாலை கந்தன் பூங்கா அங்கன்வாடி மையப் பகுதியில் வசித்து வந்தவர் துரை(வயது62). இவர் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சாலையோரம் வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் துரை அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி போலீசுக்கு தகவல்தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து துரையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அருகில் ரத்த கரையும், பீர்பாட்டில் உடைந்தும் கிடந்தது. மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. மேலும் அங்கு உணவு பொட்டலமும் சிதறி கிடந்தது. துரை பழைய பொருட்களை விற்று பணம் வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த போதை கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது.
- விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு இரும்பு தடுப்பு அமைக்கும் பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலீம் (19), மற்றும் விராய்பூர் கிராமத்தை சேர்ந்த அனிக்குல் (20) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. இதில் கார் வேலை செய்து கொண்டிருந்த அப்துல் அலீம், அனிக்குல் ஆகியோர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் அலீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அனிக்குல் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அப்துல் அலீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அனிக்குல்லை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.
- பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் பட்டு சேலை உலக புகழ்பெற்றது. இதற்கு கடந்த 2005-06-ம் ஆண்டு மத்திய அரசால் புவிசார்குறியீடு வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இல்லாமல் முழுமை அடையாது. அந்த அளவிற்கு காஞ்சிபுரம் சேலை சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
காஞ்சிபுரம் புடவையின் வலிமையும் மகத்துவமும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
தரமான அசல் பட்டுச் சேலைகளை வாங்க வேண்டும் என விரும்பி வரும் வாடிக்கையாளர்கள் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல் வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.
மற்ற மாவட்டங்களில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில் விற்கப்படுவதாகவும் இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு செய்யப்படுகின்றன. இதனால்,போலிகளை கண்டறிவதில், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிரமம் ஏற்படுகிறது என்றும் பட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டு விற்பனை கூட்டுறவு சங்கங்கள் கைத்தறி துணி நூல்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இங்கு விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளில் அசல் ஜரிகையைக் கொண்டு நெசவாளர்கள் தரமாக நெய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், இதைத் தடுக்கும் வகையில் சில தனியார் பட்டு விற்பனைக் கடைகளில் ஒரிஜினல் போன்று வடிவமைப்பைக் காட்டி தரத்தைக் குறைத்து பட்டுகள் விற்பனை செய்து விடுகின்றனர்.
மேலும் காஞ்சிபுரத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகன பதிவு எண்ணை குறி வைத்து இடைத்தரகர்கள் சிலர் வாகனங்களில் பின் தொடர்ந்து டிரைவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் கடைகளுக்கு திசை திருப்பி விடுகின்றனர்.
அங்கும் அசல் காஞ்சிபுரம் சேலைகள் விற்கப்படுவதில்லை என்பதால் போலியான பட்டுகளை வாங்கி பொதுமக்கள் ஏமாந்து செல்லும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் அதிரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரத்துக்கு நம்பி வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை காணப்படுகிறது.
இடைத்தரகர்களால் காஞ்சிபுரம் பட்டின் தரமும் மதிப்பும் சிதைத்து வருகிறது.
இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து அண்ணா, முருகன், காமாட்சியம்மன் உள்ளிட்ட பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது:-
காஞ்சீபுரத்தில் பாரம்பரியம் மாறாமல் பல ஆண்டுகளாக பட்டுச் சேலை நெய்து தந்து வருகிறோம். தற்போது அறிஞர் அண்ணா, முருகன், காமாட்சியம்மன், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் அசல் ஜரிகையைக் கொண்டு, தரமான பட்டுச் சேலைகளுக்கு வடிவமைப்பு தந்து, அவற்றை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கொடுக்கிறோம்.
மேலும் தரத்துக்கேற்ப அரசால் விலை நிர்ணையிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இடைத்தரகர்களால் நீண்ட தொலைவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பட்டு சேலை வாங்க வரும் மக்கள் அசல் காஞ்சிபட்டு என நம்பி போலி பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர்.
எனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பட்டு சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்க வேண்டும். இதேபோல் இடைத்தரகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
காஞ்சிபுரம் பட்டு சேலை என கூறி, வெளியூர் சேலைகளை விற்கின்றனர். அவை பட்டு சேலையே கிடையாது. வெளியூரில் இருந்து வாங்கி வந்த, சாதாரண சேலைகளை ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, மோசடியாக விற்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய கைத்தறி துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.
கைத்தறி கூட்டுறவு சங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, புரோக்கர்கள் பலர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர். அவற்றை தட்டிக் கேட்கும் சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகிறார்கள். சில சமயங்களில் தாக்குகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குமார் அளித்த காசோலையை சரவணன் வங்கியில் செலுத்திய நிலையில் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது.
- குமார் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரிடம் காஞ்சிபுரம் மாமல்லன் நகர் கே.டி.எஸ் மணி தெருவில் வசித்து வந்த குமார் (வயது 45) என்பவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு 24 சதவீத வட்டிக்கு ரூ.35 லட்சம் கடனாக பெற்று உள்ளார். கடன் தொகையை சரவணன் பலமுறை குமாரிடம் கேட்டும் திருப்பி அளிக்காமல் இழுத்தடித்துள்ளார்.
மேலும் கடன் தொகை ரூ.35 லட்சம் மற்றும் அதற்கு உண்டான வட்டி என ரூ.45 லட்சத்திற்கு குமார் கடந்த 2014-ம் ஆண்டு வங்கி காசோலையாக அளித்து உள்ளார்.
குமார் அளித்த காசோலையை சரவணன் வங்கியில் செலுத்திய நிலையில் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து சரவணன் வாங்கிய கடனுக்கு வங்கியில் பணம் இல்லாமல் குமார் காசோலை கொடுத்து மோசடி செய்ததாக கூறி காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். காசோலை மோசடி வழக்கு தீர விசாரிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு காசோலை கொடுத்து ஏமாற்றிய குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.90 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குமார் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தலை மறைவாக இருந்த நிலையில் சரவணன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடுத்ததன் அடிப்படையில் குமாரை கைது செய்ய கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குமாரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, குமார் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் தொடங்க தாமதமானது.
கூட்டத்துக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
கூட்டம் தொடங்க தாமதமானதால் அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதற்கு பதிலடியாக தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்த்து கோஷமிட்டனர்.
அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மணிப்பூர் சம்பந்தமான வீடியோவை மாமன்ற உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்டது ஏன்? என்று பெண்கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் நகரில், வைகுண்ட பெருமாள் கோவில் தெரு, அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் சிறப்பு முகாமை எழிலரசன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது, வட்டாட்சியர் புவனேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, திருட்டுத்தனமாக மது விற்பவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருட்டுத்தனமாக அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதாக இதுவரை 1,196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,204 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 110 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 2 ஆதாய கொலை வழக்கு, 10 வழிப்பறி வழக்குகள், 23 வீடு புகுந்து திருடுதல் வழக்குகள் மற்றும் 65 திருட்டு வழக்குகள் என மொத்தம் 100 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் களவுபோன சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 224 என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 வழக்குகள் தவிர மற்ற 81 வழக்குகள் துரிதமாக அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 46 லட்சத்து 1,324 மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 20 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.23,55,448 பணம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை மற்றும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






