என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது.
    • உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் சேலத்தை சேர்ந்த ரமேஷ் (வயது40) என்பவர் கடந்த 15 நாட்களாக நெற்பயிரை அறுவடை செய்து வந்தார். பணி முடிவடைந்த நிலையில் அறுவடை செய்த வைக்கோலை தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சேலம் செல்வதற்காக ரமேஷ் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    குண்ணவாக்கம் கூட்ரோடு அருகே வந்தபோது டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த ரமேஷ் டிராக்டரில் இருந்து கீழே இறங்கினார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
    • இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குன்றத்தூரை அடுத்த கோவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் உள்ள யூ.கே.ஜி. வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.

    மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
    • அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு என அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலை, பெரியார் தூண் அருகில் இருந்து சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை (7-ந் தேதி) முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்-திருத்தணிக்கு 100 பஸ்கள், அரக்கோணம்-திருத்தணிக்கு 25 பஸ்கள், சென்னை-திருத்தணிக்கு 100 பஸ்கள், திருப்பதி-திருத்தணிக்கு 75 பஸ்கள் என மொத்தம் 300 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது.
    • ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோமினிக் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பில் உள்ளார்.இவரது மகன் ஆல்பர்ட் (வயது 30).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளார். ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழிற்சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார்.

    ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்பர்ட் தொழிற் சாலை மேலாளரை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று ஆல்பர்ட் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 மர்ம நபர்கள் திடீர் என ஆல்பர்ட் மீது நாட்டு வெடி குண்டு வீசி உள்ளனர்.

    இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்டை மீட்டு மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆல்பர்ட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட்டை யார் கொலை செய்தது? தொழில் போட்டியா? அல்லது வேறு எதும் காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆல்பர்டுக்கு திருமணம் ஆகி இந்துமதி என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிபடை அமைக்கபட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர் நாட்டு வெடி குண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரவி வருகிறது. இது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    • 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    மரக்காணத்தைச் சேர்ந்தவர் சிவனந்தபெருமாள். மாற்றுத்திறனாளியான இவர் உப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் வந்தவாசி, செய்யார், சேத்துபட், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உப்பு லோடு இறக்கியதற்கான பணத்தை வசூலித்துக் கொண்டு, உத்திரமேரூர் வந்தார்.

    அவர், தீட்டாளம் சாலையில் வைப்பனை கிராமம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    • பெங்களூருவை சேர்ந்தவர் 13 வயது பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ் ஹரிஷ்.
    • இவர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் எம்ஆர்எப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் பெங்களூரைச் சேர்ந்த பைக்கர் ஷ்ரேயாஸ் ஹரிஷ் பங்கேற்றார்.

    பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்றது. இதனால், அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    கடந்த மே மாதம் மினிஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்று, இரண்டு பந்தயங்களிலும் முறையே 5-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார்.
    • திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இளைய மகள் விஜிதா (27) சென்னை கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்படுகளை மோகன் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார். விஜிதா நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விஜிதா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க வைர நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் சோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் வரதராஜபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை.
    • தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது27). இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா(26) என்பவரை கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    தாசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அவர் தினமும் வீட்டிற்கு மதுகுடித்து வந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். குழந்தை தொடர்பாகவும் நிகிதாவிடம் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை. தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.

    சம்பவத்தன்றும் தாஸ் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நிகிதா கணவர் கண்முன்பே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாஸ் காதல் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் உடல் கருகி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தாஸ் மற்றும் அவரது மனைவி நிகிதா ஆகிய 2 பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிகிதா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் தாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபரின் குடிப்பழக்கத்தால் அவரது குடும்பமே சிதைந்து போனது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஏரிக்கரை செல்லும் சாலையில் காளிதாசன் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் காளிதாசன்(வயது40). இவர் பல்லாவரத்தில தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குன்றத்தூர் அடுத்த ஜெயம் நகர் ஏரிக்கரை செல்லும் சாலையில் காளிதாசன் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கியதற்கான பலத்த காயமும், முகத்தில் காயங்களும் இருந்தது.

    எனவே மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து போட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பல்லாவரத்தில் இருந்து காளிதாசன் எதற்காக இங்கு வந்தார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    அரசு பஸ்களில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பயணம் அதிகமாக உள்ளது.

    அதே போல புறநகரங்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் அதிகளவில் பயணிக்கிறார்கள். அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, விழுப்புரத்திற்கு 40 சிறப்பு பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்களும் மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.
    • அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர், மலையம்பாக்கம், நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லசேரி, கோவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தை நாடுவது வழக்கம், வழக்கமாக குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.

    அதில் அதிகபட்சமாக 100 முதல் 120 வரை பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.

    நிலம் வாங்குபவர்கள் ஆடிப்பெருக்கன்று பத்திரப்பதிவு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை முதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு செய்ய 214 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதில் 160 பேர் பத்திரப்பதிவு செய்தனர்.

    ×