search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெடிகுண்டுகளை வீசி வெட்டி தி.மு.க. பிரமுகர் கொலை: தொழில் போட்டியில் ரவுடிகளால் தீர்த்துக்கட்டப்பட்டாரா?- பரபரப்பு தகவல்கள்
    X

    வெடிகுண்டுகளை வீசி வெட்டி தி.மு.க. பிரமுகர் கொலை: தொழில் போட்டியில் ரவுடிகளால் தீர்த்துக்கட்டப்பட்டாரா?- பரபரப்பு தகவல்கள்

    • ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது.
    • ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோமினிக் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பில் உள்ளார்.இவரது மகன் ஆல்பர்ட் (வயது 30).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளார். ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழிற்சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார்.

    ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்பர்ட் தொழிற் சாலை மேலாளரை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று ஆல்பர்ட் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 மர்ம நபர்கள் திடீர் என ஆல்பர்ட் மீது நாட்டு வெடி குண்டு வீசி உள்ளனர்.

    இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்டை மீட்டு மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆல்பர்ட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட்டை யார் கொலை செய்தது? தொழில் போட்டியா? அல்லது வேறு எதும் காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆல்பர்டுக்கு திருமணம் ஆகி இந்துமதி என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிபடை அமைக்கபட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர் நாட்டு வெடி குண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரவி வருகிறது. இது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×