என் மலர்
காஞ்சிபுரம்
- அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
- கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இங்கு நடந்த முதல்கட்ட அகழாய்வில் இந்த பகுதி கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இருந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதனை உறுதிப்படுத்த தற்போது 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணியின்போது பல்வேறு தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. விளையாட்டு பொருட்கள், பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் போன்ற பல பொருட்கள் கிடைத்து உள்ளன. இந்த நிலையில் தற்போது அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 42 பானை ஓடுகள் பல்வேறு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலானவை தென் தமிழ்நாட்டை சேர்ந்தவை. வட தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைப்பது அரிதானது என்றார்.
மேலும் இதுகுறித்து உதவி தொல்லியல் துறை அதிகாரியான ரமேஷ் கூறும்போது, "காஞ்சீபுரம் மற்றும் பட்டறை பெரும்புதூரில் மட்டுமே எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன. எனவே பானை ஓடுகளில் உள்ள கல்வெட்டு இந்த தளத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். தமிழ் மொழியின் தொன்மையை நிரூபிக்க இது முக்கியமானது ஆகும்" என்றார்.
- முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது.
- தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முத்துவேடு சாலை, கண்ணியம்மன் கோவில் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோழிப்பண்ணையின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கோழிப்பண்ணை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. கோழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் அவை தீயில் கருகி இறந்தன. சுமார் 3 ஆயிரம் கோழிகள் தீயில் சிக்கி இறந்ததாக தெரிகிறது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். கருகி இறந்து கிடந்த கோழிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசியது.
முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோழிப்பண்ணையில் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து குறித்து ராஜேந்திரன் கூறும் போது, உயர் மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து உள்ளது. தீயில் சிக்கி விற்பனைக்காக அனுப்ப வைக்கப்பட்டிருந்த அனைத்து கோழிகளும் கருகி இறந்து விட்டன. ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
- வருகிற 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
- பல்வேறு திட்டங்கள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை உபயோகப்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.
மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜமாணிக்கம். இவர் ஸ்ரீபெரும்புதூர் பழைய இரும்பு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜாமணிக்கம் வீட்டை பூட்டி கொண்டு வெளியே சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.
- பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள்.
பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலை 7 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள் தவித்தனர். காலை 7.20 மணியளவில் முதல் பஸ் பணிமனையில் இருந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பாலமுரளி கிருஷ்ணா மீது போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளது.
- பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டி. இவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு விஜயவாடா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளது.
இதையடுத்து தலைமறைவாக இருந்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து வந்த பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.
- டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது.
- உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் சேலத்தை சேர்ந்த ரமேஷ் (வயது40) என்பவர் கடந்த 15 நாட்களாக நெற்பயிரை அறுவடை செய்து வந்தார். பணி முடிவடைந்த நிலையில் அறுவடை செய்த வைக்கோலை தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சேலம் செல்வதற்காக ரமேஷ் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
குண்ணவாக்கம் கூட்ரோடு அருகே வந்தபோது டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த ரமேஷ் டிராக்டரில் இருந்து கீழே இறங்கினார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
- இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றத்தூரை அடுத்த கோவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் உள்ள யூ.கே.ஜி. வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
- அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரம்:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு என அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலை, பெரியார் தூண் அருகில் இருந்து சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
- ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை (7-ந் தேதி) முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்-திருத்தணிக்கு 100 பஸ்கள், அரக்கோணம்-திருத்தணிக்கு 25 பஸ்கள், சென்னை-திருத்தணிக்கு 100 பஸ்கள், திருப்பதி-திருத்தணிக்கு 75 பஸ்கள் என மொத்தம் 300 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது.
- ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோமினிக் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பில் உள்ளார்.இவரது மகன் ஆல்பர்ட் (வயது 30).
இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளார். ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழிற்சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார்.
ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்பர்ட் தொழிற் சாலை மேலாளரை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று ஆல்பர்ட் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 மர்ம நபர்கள் திடீர் என ஆல்பர்ட் மீது நாட்டு வெடி குண்டு வீசி உள்ளனர்.
இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்டை மீட்டு மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆல்பர்ட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட்டை யார் கொலை செய்தது? தொழில் போட்டியா? அல்லது வேறு எதும் காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆல்பர்டுக்கு திருமணம் ஆகி இந்துமதி என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிபடை அமைக்கபட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர் நாட்டு வெடி குண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரவி வருகிறது. இது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
- 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மரக்காணத்தைச் சேர்ந்தவர் சிவனந்தபெருமாள். மாற்றுத்திறனாளியான இவர் உப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் வந்தவாசி, செய்யார், சேத்துபட், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உப்பு லோடு இறக்கியதற்கான பணத்தை வசூலித்துக் கொண்டு, உத்திரமேரூர் வந்தார்.
அவர், தீட்டாளம் சாலையில் வைப்பனை கிராமம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.






