search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 2 குழந்தைகளை கடத்தி சென்ற பெண் அடையாளம் தெரிந்தது
    X

    அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 2 குழந்தைகளை கடத்தி சென்ற பெண் அடையாளம் தெரிந்தது

    • பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது.
    • பெண்மணியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் தாலுக்கா, வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமுதாய கர்ப்பிணி பெண் காமாட்சி (வயது 28) என்பவருக்கு கடந்த செய்வாய் கிழமை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில், சுகப்பிரசவம் ஏற்பட்டது. காமாட்சியின் கணவர் மூர்த்தி , 4 வயது மகன் சக்திவேல் ,மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை, அவருடைய மனைவி குள்ளம்மா, அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோர் காமாட்சிக்கு உதவிகள் செய்வதற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு நலப்பிரிவு பிரிவு அருகே தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி ஒருவர், மூர்த்தி, ஏழுமலை, குள்ளம்மா மற்றும் சிறார்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். செவ்வாய் கிழமை மாலை 7 மணி அளவில் சிறார்களை அழைத்துக் கொண்டு உணவு வாங்கி தருவதாக அந்த பெண்மணி அழைத்து சென்றார். சென்று வந்த பின்னர் அந்த பெண்மணி, மூர்த்தி என அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர்.

    புதன் கிழமை காலை பிள்ளைகளை காணாததால் பதறி அடித்துக் கொண்டுபோய் , மனைவி காமாட்சி இடம் தகவல் கூறினர். காமாட்சி அங்குள்ள செவிலியர்கள் மூலமாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். அதன் பெயரில் விரைந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் மூர்த்தி கூறும் போது, மூன்று நாட்களாக ஒரு பெண்மணி எங்களுடன் பழகினார். அவர்தான் என் பிள்ளைகளை கடத்திச் சென்று விட்டார் என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து மகப்பேறு நலப்பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண்மணி சந்தேகத்துக்கடமான நிலையில் மகப்பேறு நலப்பிரிவு அருகே வந்து செல்வது கண்டறியப்பட்டது. அதில் அவருடைய முகம் சரியாக தெரியவில்லை. ரெயில்வே சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை சுற்றிலும் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள சுமார் 200 கேமராக்களை புதன் கிழமை மதியத்திலிருந்து காவல்துறையினர், ஆய்வு செய்தனர். பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கேமராக்களை ஆய்வு செய்த போது தான் ஒரு பெண்மணி இரண்டு சிறார்களையும் அழைத்து கொண்டு பேருந்து நிலையம் வழியாக ஆடிசன் பேட்டை வரை செல்லும் காட்சி கண்டறியப்பட்டது.

    அந்த கேமரா புட் பேஜில் கடத்திய பெண்மணியின் முகம் சரியாக தெரியாததால் முகத்தை கண்டறியும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது சிறார்களை கடத்திய அந்த பெண்மணியின் முகம் தெளிவாக காணப்பட்டது. அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து பெண்மணியின் புகைப்படத்தை நேற்று இரவு காவல்துறையினர் வெளியிட்டனர். அக்காட்சிகளை கொண்டு சிறார்களை கடத்திய பெண்மணியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையிலும், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் தலைமையிலும், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தல்காரியை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.

    கடத்திய பெண்மணி பற்றிய விவரங்கள் தெரிந்தால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் : 044-27236111, 9498181232.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 949810026.

    Next Story
    ×