என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சிறுமிகளை அழைத்து வந்தது அவர்களது தாயா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • சிவகாஞ்சி போலீசார் மீட்கப்பட்ட 2 சிறுமிகள் குறித்து வேலூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், ரெயில்வே சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் இருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் 2 மற்றும் 4 வயதுடைய 2 பெண்குழந்தைகளுடன் ரெயில்வே சாலை, பகதூர் கான் பேட்டை தெருவழியாக நடந்து சென்றார்.

    திடீரென அந்த இளம்பெண் 2 குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டு மாயமானார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகள் இருவரும் தவித்தனர். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையோரம் நீண்ட நேரமாக நின்று அழத்தொடங்கினர்.

    இதனை கண்டு சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விசாரித்த போது தங்களது தாய் தண்ணீர் எடுத்து வருவதாக கூறி சென்று உள்ளார் என்று தெரிவித்தனர். குழந்தைகளுடன் வந்த தாய் அவர்களை தவிக்க விட்டு மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 சிறுமிகளையும் மீட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களது பெயர் தீக்ஷிகா (வயது 4), ஏரிகா (வயது 2) என்றும் தாய் ரம்யா, தந்தை சதீஷ் எனவும் தெரிவித்தனர். மேலும் தங்களது தாத்தா ஆறுமுகம், பாட்டி அமுதா எனவும் அவர்கள் வேலூரில் வசிப்பதாகவும் தெரிவித்தனர். தாய் ரம்யாவுடன் வந்தபோது தண்ணீர் வாங்கிவருவதாக கூறி சென்றதாக சிறுமிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் மீட்கப்பட்ட 2 சிறுமிகள் குறித்து வேலூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வேலூரில் சிறுமிகள் மற்றும் தாய் மாயமானது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்பது தெரிந்தது. மேலும் சிறுமிகள் தங்களது தகவல் குறித்து மாறி, மாறி கூறுவதால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சிறுமிகளை அழைத்து வந்தது அவர்களது தாயா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் மாயமான இளம்பெண் 2 குழந்தைகளுடன் வருவது பதிவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி விசாரித்து வருகிறார்கள். இதுவரை மீட்கப்பட்ட சிறுமிகள் யார்? அவர்களது பெற்றோர் யார்? சிறுமிகளுடன் வந்த இளம்பெண் யார்? என்று எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து சிறுமிகள் 2 பேரும் சென்னை பரங்கிமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மீட்கப்பட்ட சிறுமிகள் 2 பேரும் நலமாக உள்ளனர். அவர்கள் தங்களது தாயுடன் வந்ததாகவும், சொந்த ஊர் வேலூர் எனவும் தெரிவித்தனர்.

    ஆனால் வேலூரில் சிறுமிகள் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. மேலும் சிறுமிகளை தாய் தவிக்க விட்டு சென்றது ஏன்? என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமிகளுடன் வந்த இளம்பெண் அவர்களது தாயா? அல்லது வேறு யாராவதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து அந்த இளம்பெண்ணை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் போலீசார் இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களும் தகவல் தெரிவித்து உள்ளனர் என்றார்.

    • கார் மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா காஞ்சிபுரம் பாவாஜி தெருவில் இரவு 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில் பின்தொடர்ந்து நடந்து சென்றனர். கோவில் விழாவை படம் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த புகைப்படகலைஞர் வெங்கடேசனை (வயது50) ஏற்பாடு செய்து இருந்தனர். அவர் அம்மன் வீதி உலா, பக்தர்கள் கூட்டத்தை படம் பிடித்தபடி சென்றார். அப்போது சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் புகைப்பட கலைஞர் வெங்கடேசன் மற்றும் சாமி தரிசனம் செய்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், இசைக்கலைஞர்கள் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகைப்பட கலைஞர் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். மேலும் 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிலில் ஆடி மாத திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

    காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். விசாரணையில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரிந்தது. அவரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள பெரும்புலிபாக்கம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இதில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை அடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக இவர்கள் பெங்களூர் அனுப்பப்பட்ட நிலையில் விபத்தான ஆம்புலன்சை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது திடீரென ஆம்புலன்ஸ் முன் பகுதி வெடித்து சிதறி ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அனைத்து ஆம்புலன்சை சாலை ஓரம் அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
    • சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் திருச்சோலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 75). இவருக்கு முரளிதரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமுதாய கரையோடு வாழ்ந்தவரான திருவேங்கடம், தான் இறந்து போனால் தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கிட வேண்டும் என தனது மகன் முரளிதரன் மற்றும் குடும்பத்தாரிடம், நண்பர்களிடமும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவேங்கடத்தின் கடைசி ஆசையை நிறை வேற்றிடும் வகையில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலந்து ஆலோசனை செய்த குடும்பத்தினர் முதியவர் திருவேங்கடத்தின் உடலை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்க முடிவு செய்து, தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

    அதன்படி திருவேங்க டத்தின் உடலுக்கு உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினர் சம்பிரதாயம் முறைப்படி இறுதி சடங்குகளை செய்த பின்னர் சிறிது தூரம் முதியவர் திருவேங்கடத்தின் உடலை எடுத்துச் சென்று தயாராக இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆம்பு லன்சில் ஒப்படைத்தனர். சமூக அக்கறையோடு வாழ்ந்த முதியவரின் கடைசி ஆசைப்படி, மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடலை குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று பள்ளியில் விடுவதற்குள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர்.
    • மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குன்றத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி நடத்தப்பட்டு வரும் நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தினமும் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியிலேயே நகராட்சி அலுவலகம் உள்ளது. தினமும் காலையில் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்களும், ஆண்களும் இந்த சாலையின் இரு பகுதியிலும் ஆக்கிரமித்து நிற்கின்றனர்.

    அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையின் ஓரம் நிறுத்தி வைத்து இருப்பதால் தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    அது மட்டுமின்றி காலை, மாலை இருவேளைகளிலும் பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று பள்ளியில் விடுவதற்குள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர். அது மட்டுமின்றி தற்போது இந்த பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் இடம் நெருக்கடி ஏற்பட்டு ஒரு வழியில் மட்டுமே மாணவர்கள் செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பபதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது "வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும்'', முதற்கட்ட முகாம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க தவறிய பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன. எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மேற்கண்ட தகுதிவாய்ந்த பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாமில் விண்ண ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தனபால் தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார்.
    • 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 60). தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 5 மகள்கள் பிறந்து 2 மகள்கள் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.

    ஒரு மகள் மட்டும் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனிமையில் விரத்தியான மனநிலையில் இருந்த தனபால் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வாசலில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்குக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவதாகவும், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வழங்குமாறும் கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் தங்களுக்கு பணம் வந்த பிறகே பெட்ரோல் நிரப்ப முடியும் என கூறியுள்ளார்.

    இதன் காரணமாக பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட் என்பவரின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.

    மேலும் அரிவாளால் வெட்டுப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட்டை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வையாவூர் கிராமத்தை சேர்ந்த கோபி (24) என்பதும், அவருடன் வையாவூரை சேர்ந்த ஸ்ரீராம், சிறுவாக்கத்தைச் சேர்ந்த ஜீவா ஆகிய 3 பேரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் தப்பி ஓடிய வாலிபர்கள் ஸ்ரீராம் மற்றும் ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் குமுதா டோம்னிக். இவரது மகன் ஆல்பர்ட். தி.மு.க.வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளராக இருந்தார். மேலும் ஏ.டி.கே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் எச்சூர் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை மொத்தமாக எடுக்கும் தொழிலும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்வது, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஆல்பர்ட், சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலை சிப்காட் சாலையோரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் ஆர்பர்ட்டை கொடூரமாக கொலை செய்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ், தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் ,மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார்,ஆகிய 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக எச்சூரை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.ப. நிர்வாகி சுரேஷ், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் செந்தில்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இதில் தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதிய நிறுவனங்கள் அமைக்கும் கட்டுமான பணியை செந்தில்குமார் மேற்கொண்டு வந்தார். இங்கு மண் கொட்டி நிரப்பும் பணியினை ஆல்பர்ட் செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் ஆல்பர்ட்டிற்கு முறையாக கணக்கு சொல்லாமல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆல்பர்ட் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு உள்ளார். இதனால் அதே மண் நிரப்பும் பணியினை எச்சூரை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சுரேஷுக்கு கொடுக்கபட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆல்பர்டிற்கும் சுரேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் சுரேசும், செந்தில்குமாரும் தாம்பரத்தில் உள்ள கூலிப்படையினைரை ஏவி ஆல்பர்ட்டை கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதையடுத்து பா.ம.க. பிரமுகர் சுரேஷ், செந்தில்குமார், மதுரையை சேர்ந்த சுந்தர்,ஆனந்த வினோத், எச்சூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் தினேஷ் ,சந்துரு, தாம்பரம் பகுதியை சேர்ந்த மாதவன், சபரிசன் வயது, அரவிந்த்க், அஸ்வின் மற்றும் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள நிலையில் மேலும் 14 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொழில் போட்டியில் கூலிப்படை ஏவி தி.மு.க.பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் 60 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் நிகழ்ச்சியில் மூவர்ண பலூன், வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் சுதந்திர தினவிழா ஆலபாக்கம் ஊராட்சியில் உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழில் பயிற்சி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.

    செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். நகரமன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் இளம்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து இனிப்புகளை வழங்கினார். மேலும் அரசின் பல்வேறு துறையின் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 191 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 22 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிக்குமார், மீனாட்சி, உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, துணை கலெக்டர் சுகபுத்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் பல கலந்து கொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரவி தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், பொன்னேரி நகராட்சியில் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தலைவர் சம்பத், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், மாதவரம் ஊராட்சியில் தலைவர் சுரேஷ், ஆண்டார் குப்பம் ஊராட்சியில் ஆர்த்தி ஹரி பாபு, பஞ்செட்டியில் தலைவர் சீனிவாசன், பெரிய கரும்பூரில் தலைவர் பாக்கியலட்சுமி, வேலூர் ஊராட்சியில் தலைவர் சசிகுமார், காட்டுப்பள்ளியில் தலைவர் சேதுராமன், கொடூரில் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், நாலூரில் தலைவர் சுஜாதா ரகு, வாயலூரில் தலைவர் கோபி, காட்டாவூரில் தலைவர் மங்கை உமாபதி, பெரும்பேட்டில் தலைவர் ராஜேஷ், பிரளையம் பாக்கத்தில் இலக்கியா கண்ணதாசன், சிறுவாக்கத்தில் தலைவர் சேகர் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டன.

    • ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் கணவர் கண்முன்பே துடிதுடித்து இறந்தார்.
    • போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி முனியம்மாள் (வயது19). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். புருசோத்தமனின் சொந்த ஊர் சிங்கப்பெருமாள் கோவில் ஆகும். திருமணமான பின்னர் அவர் மனைவியுடன் ஆர்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலைபார்த்து வந்தார். புருசோத்தமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் புருசோத்தமன் மதுபோதையில் வந்தார். மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதனை மனைவி முனியம்மாள் கண்டித்ததால் மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த புருசோத்தமன் அருகில் இருந்த கத்தியால் மனைவி முனியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் கணவர் கண்முன்பே துடிதுடித்து இறந்தார்.

    இதனை பார்த்து பயந்து போன புருசோத்தமன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

    இதற்குள் சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓட முயன்ற புருஷோத்தமனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை மாகரல் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அவர்களது 3 குழந்தைகளும் தாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    • வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

    மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவல கங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    அவர்களுக்கு பதிலாக வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×