என் மலர்
காஞ்சிபுரம்
- அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார்.
- 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கப்பட்டு இருப்பது குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.
சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல்துறையின் வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார். அஞ்சல்துறை தலைவர் பி.பி.ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்கொரியாவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய பார்சலை பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீது வழங்கினார். அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் பேசும்போது, தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.
- தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
- கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் பா. முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர். இதில் ரொக்கமாக ரூ.58 லட்சத்து 51 ஆயிரத்து 470, தங்கம் 190 கிராம், வெள்ளி 460 கிராம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆலஞ்சேரி, தோட்டநாவல், ரெட்டமங்கலம், மலைக்காலனி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிரினை விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என நம்பிக்கையுடன் விவசாயிகள் ஆலஞ்சேரி கிராமத்தில் தங்களது நெல் பயிரினை கொட்டி வைத்து அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக காத்திருந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி ஆலஞ்சேரி- நெல்வாய் கூட்ரோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர், கட்டவாக்கம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம் (வயது 55). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கும்போல கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து ரொக்கப்பணம், தங்க நகைகளை வாரி சுருட்டி கொண்டு தப்பி சென்றனர். மாலதி பணி முடித்து மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து சதாசிவம் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார்.
- சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் பரந்தூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்கூடமும், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடையும், அத்திவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவேடல் கிராமத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார். அதன்படி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது
க.செல்வம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம். பாபு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய கவுன்சிலர் லோகுதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அத்திவாக்கம் குமார், சிங்காடி வாக்கம் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பழனி, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கட்ராமன், கவிதா டில்லி பாபு, ஒன்றிய பொருளாளர் வேளியூர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், தண்டலம் பார்த்திபன், திருஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் தலையில் தீச்சட்டி மற்றும் அம்மன் பூ குடங்களுடன் தீ மிதிக்க தொடங்கினார்கள்.
- நெருப்பில் விழுந்த நபருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அம்மினி குளக்கரையில் உள்ள கன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
தீமிதி விழாவையொட்டி காலையில் கன்னியப்பன் ஆலயத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் ஏழு கன்னிமார்கள் பூ குடம் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து கெங்கையம்மன் ஆலயம் அருகே இரவு தீமிதி விழாவிற்கான நெருப்புகள் கலைக்கப்பட்டு தீ மிதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கே, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதி விழா நடைபெறும் இடத்தை சுற்றி இருந்தனர். அப்போது, வாணவேடிக்கை வெடிகள் வெடித்தபோது எதிர்பாராத விதமாக ஒரு வாணவேடிக்கை வெடி பக்தர்கள் இருந்த பக்கம் திரும்பி பக்தர்கள் மேல் விழுந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரின் ஆடையில் நெருப்பு பட்டதால் பரபரப்பு நிலவியது.
அதனையடுத்து பக்தர்கள் தலையில் தீச்சட்டி மற்றும் அம்மன் பூ குடங்களுடன் தீ மிதிக்க தொடங்கினார்கள்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கால் சரியாக நடக்க முடியாத நபர் ஒருவர் திடீரென தீயில் இறங்கி நடக்க தொடங்கி நடக்க முடியாமல் நெருப்பில் விழுந்தார்.
உடனே அருகில் இருந்த பக்தர்கள் பலர் அவரை நெருப்பில் இருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றினார்கள்.
அதில், நெருப்பில் விழுந்த நபருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நபரை பக்தர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெகத்ரட்சகன் எம்.பி, சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருவள்ளூர்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை இன்று திருக்குவளையில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெகத்ரட்சகன் எம்.பி, சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின்படி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 56,272 மாணவ- மாணவியர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 5,567 பேர் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 3,051 பேர் என மொத்தம் 64,890 மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள்.
காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் பி. எம். குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருவிடந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்தியா சேகர், எம்.எல்.ஏ. பாலாஜி, சப் கலெக்டர் லட்சுமிபதி, பையணூர் சேகர், ஊராட்சி தலைவர் அமுதா குமார், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது.
- நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது. ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை 30 மாதத்திற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. இதனை உடனடியாக ஆணையாக வெளியிட வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.
நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி கருணை ஓய்வூதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- விபத்தில் பாலியான பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை, டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது31). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பாஸ்கர் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் இடதுபுறம் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பாலியான பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது.
- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது.
காஞ்சிபுரம்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று இரவும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், செங்குன்றம், புழல், அயனாவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், போரூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.
பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது. சில இடங்களில் சுமார் அரைமணிநேரம் மழை வெளுத்து வாங்கியது.
இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலி முகமது பேட்டை, பாலு செட்டி சத்திரம், தாமல், வாலாஜாபாத், பரந்தூர், மாகரல், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலையும் மழை பெய்தது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் அவதி அடைந்தனர்.
திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்துவாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
- போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் நியூ காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது.33) ஆட்டோ டிரைவர். புலியூர் தைலமர காட்டு பகுதியில் மரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
- ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏ.ஏகவள்ளி அன்னப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், அளவூர் திருவள்ளுவர் தெருவில் தனியார் நிறுவனம் சார்பாக சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாங்கி குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி க.மோகன சுந்தரம், தொழிலதிபர்கள் எம்.வினோத் குமார், எம்.பிருத்திவிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏ.ஏகவள்ளி அன்னப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






