என் மலர்
காஞ்சிபுரம்
- குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையம் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி டிலைலா (33). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
அருளுக்கும் டிலைலாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் நீ வேண்டுமானால் உன்னுடைய தாய் வீட்டுக்கு போ என்று மனைவி டிலைலாவிடம் சொல்லிவிட்டு அருள் பள்ளிகூடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அருள் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி மற்றொரு அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 7 மணி அளவில் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் டிலைலா தூக்கு போட்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அவரது மகள் தந்தை அருளிடம் வந்து கூறினார். உடனடியாக அறைக்குள் சென்று தூக்கில் தொங்கிய டிலைலாவை கீழே இறக்கி உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து உத்திரமேரூர்போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
- விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
- நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது45). கல் குவாரியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
ஸ்ரீதர் மதுகுடித்து வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவும் மதுபோதையில் வந்த ஸ்ரீதர் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் கணவன் -மனைவி இருவரும் தூங்கிவிட்டனர்.
எனினும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீதர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதிகாலை 4 மணிஅளவில் எழுந்த ஸ்ரீதர் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி செல்வராணியின் தலையில் அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வராணி துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு எழுந்த அவர்களது குழந்தைகள் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பயத்தில் அலறினர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எடமச்சி பஸ் நிறுத்தம் அருகே நின்ற ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- ரேணுகாதேவியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). இவர் அதே பகுதியில் தனது பெயரில் உள்ள 460 சதுர அடி நிலத்தை தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி மகன் பெயரில் மாற்றம் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். நீண்ட நாட்களாக பெயர் மாற்றம் செய்யாமல் அலைக்கழித்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டர் ரேணுகாதேவியிடம் கேட்டபோது, ரூ.15 ஆயிரம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்தார்.
ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ.5 ஆயிரம் தருவதாக கூறுமாறு தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை சுந்தரிடம் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட ரேணுகாதேவியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி மநாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சுந்தர், பில் கலெக்டர் ரேணுகாதேவிக்கு போன் செய்தபோது, ஆலடிதோப்பு பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் அங்கு வருமாறு தெரிவித்தார்.
இதனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அங்கு சென்று ரேணுகாதேவியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை சுந்தர் கொடுத்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரேணுகாதேவியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது, சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் ரேணுகாதேவியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகரில் குடியிருப்பு பகுதியில் மாதவரத்தைச் சேர்ந்த கெவின் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பற்றி எரிந்து கரும் புகை வெளியேறியது. தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகே இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்கு விசாரணை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
- இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பத்தூர்:
மீஞ்சூரை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். காலையில் மாணவி வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றபோது அங்கு பேனாவில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் தனது தாயாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குளியல் அறையில் இருந்த பேனா கேமிராவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தொழிலாளியான வெங்கடாசலபதி(30) என்பவர் மாணவி வீட்டில் உள்ள குளியல் அறையில் பேனா கேமிராவை மறைத்து வைத்தது தெரியவந்தது.
ஏற்கனவே மாணவியின் குடும்பத்தாரிடம் வெங்கடாசலபதி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த மோதலில் குளியல் அறையில் பேனா கேமிரா பொருத்தி படம் பிடித்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வெங்கடாசலபதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதுகுறித்து மாணவியின் தாய் கூறும்போது, இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் அந்த வாலிபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்றார்.
- கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு வங்கியை உருவாக்கக் கோரியும், மாவட்ட, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20சதவீத ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய, பெரிய காஞ்சிபுரம், நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மாநில சங்க பொதுச்செயலாளர் சர்வேசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார்.
- 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கப்பட்டு இருப்பது குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.
சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல்துறையின் வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார். அஞ்சல்துறை தலைவர் பி.பி.ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்கொரியாவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய பார்சலை பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீது வழங்கினார். அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் பேசும்போது, தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.
- தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
- கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் பா. முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர். இதில் ரொக்கமாக ரூ.58 லட்சத்து 51 ஆயிரத்து 470, தங்கம் 190 கிராம், வெள்ளி 460 கிராம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆலஞ்சேரி, தோட்டநாவல், ரெட்டமங்கலம், மலைக்காலனி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிரினை விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என நம்பிக்கையுடன் விவசாயிகள் ஆலஞ்சேரி கிராமத்தில் தங்களது நெல் பயிரினை கொட்டி வைத்து அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக காத்திருந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி ஆலஞ்சேரி- நெல்வாய் கூட்ரோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர், கட்டவாக்கம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம் (வயது 55). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கும்போல கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து ரொக்கப்பணம், தங்க நகைகளை வாரி சுருட்டி கொண்டு தப்பி சென்றனர். மாலதி பணி முடித்து மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து சதாசிவம் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார்.
- சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் பரந்தூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்கூடமும், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடையும், அத்திவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவேடல் கிராமத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார். அதன்படி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது
க.செல்வம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம். பாபு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய கவுன்சிலர் லோகுதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அத்திவாக்கம் குமார், சிங்காடி வாக்கம் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பழனி, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கட்ராமன், கவிதா டில்லி பாபு, ஒன்றிய பொருளாளர் வேளியூர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், தண்டலம் பார்த்திபன், திருஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் தலையில் தீச்சட்டி மற்றும் அம்மன் பூ குடங்களுடன் தீ மிதிக்க தொடங்கினார்கள்.
- நெருப்பில் விழுந்த நபருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அம்மினி குளக்கரையில் உள்ள கன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
தீமிதி விழாவையொட்டி காலையில் கன்னியப்பன் ஆலயத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் ஏழு கன்னிமார்கள் பூ குடம் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து கெங்கையம்மன் ஆலயம் அருகே இரவு தீமிதி விழாவிற்கான நெருப்புகள் கலைக்கப்பட்டு தீ மிதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கே, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதி விழா நடைபெறும் இடத்தை சுற்றி இருந்தனர். அப்போது, வாணவேடிக்கை வெடிகள் வெடித்தபோது எதிர்பாராத விதமாக ஒரு வாணவேடிக்கை வெடி பக்தர்கள் இருந்த பக்கம் திரும்பி பக்தர்கள் மேல் விழுந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரின் ஆடையில் நெருப்பு பட்டதால் பரபரப்பு நிலவியது.
அதனையடுத்து பக்தர்கள் தலையில் தீச்சட்டி மற்றும் அம்மன் பூ குடங்களுடன் தீ மிதிக்க தொடங்கினார்கள்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கால் சரியாக நடக்க முடியாத நபர் ஒருவர் திடீரென தீயில் இறங்கி நடக்க தொடங்கி நடக்க முடியாமல் நெருப்பில் விழுந்தார்.
உடனே அருகில் இருந்த பக்தர்கள் பலர் அவரை நெருப்பில் இருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றினார்கள்.
அதில், நெருப்பில் விழுந்த நபருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நபரை பக்தர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.






