என் மலர்
காஞ்சிபுரம்
- கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.
காஞ்சிபுரம்:
சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மற்றும் சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் நிதியுதவியுடன் கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா. ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் செயலாட்சியருமான மு. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளரும் முதன்மை வருவாய் அலுவலருமான சு. உமாபதி மற்றும் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் தே. சித்ரா ஆகியோர் வரவேற்று பேசினர். நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநர் சுரேஷ் கிட்டங்கி பராமரிக்கும் முறையை விளக்கி கூறினார்.
இப்பயிற்சியில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர் நாகராஜன், மணியப்பன் (ஓய்வு) ஆகியோர் விவசாயிகளுக்கு சேமிப்பு கிட்டங்கி பயன்பாட்டு தானியங்கள் அறுவடை செய்த பிறகு அவர்கள் பராமரிக்கும் முறை, நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான சத்தியநாராயணன், காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அருணா, காஞ்சிபுரம் சரக கூட்டுறவு சார்பதிவாளர் கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.
கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகைகள் கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த பூங்காவுக்கு செல்வதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள்.
இந்த பூங்கா கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பூங்கா சரிவர சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக காட்சிஅளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்திலும் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
ஆனாலும் இதுவரை பூங்காவை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பெருநகராட்சி என்ற பெயர் பலகையும் மாநகராட்சியாக தரம் உயராமல் அப்படியே காட்சி அளிப்பதால் இதனை பார்த்து செல்லும் மக்கள் பூங்காவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆவது எப்போது? என்ற கேள்வியுடனே செல்கிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப்பணிகளில் மாறவில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டாலும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.இதற்காக காரணம் என்ன என்று தெரிவியவில்லை.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல குழு அலுவலகங்கள் புதிதாக புனரமைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை இழந்து 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.
கணவர் மறைவுக்கு பிறகு அரக்கோணத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்த அவர் அங்கு ஒரு வாலிபருடன் பழகி ஏமாந்துள்ளார்.
இதன் பின்னர் மீண்டும் காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பேஸ்புக் மூலமாக தினேஷ்குமார் என்ற வாலிபர் 3 குழந்தைகளின் தாயுடன் பழகி இருக்கிறார் அப்போது இருவரும் தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் நெருக்கமானது. இதனால் இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த லிவ்விங் டொகதர் வாழ்க்கையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் மகளான 10-ம் வகுப்பு மாணவி மீதும் தினேஷ் குமார் காம பார்வையை வீசினார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளாக பார்க்க வேண்டிய மாணவியை பள்ளியில் இருந்து ஏதோ காரணம் கூறி அழைத்து வந்து வீட்டில் வைத்தே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போன்று தினேஷ்குமார் பல முறை நடந்து கொண்டு உள்ளார்.
ஒரு கட்டத்தில் தினேஷ்குமாரின் தொல்லை அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பின்னர் தனது தாயிடம் இது பற்றி சொல்லி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் காஞ்சிபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தினேஷ் குமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவரை போலீசார் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம்.
காஞ்சிபுரம்:
ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். கைது கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பதி, நகரி, புத்தூர், ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படும். தற்போது பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் காஞ்சிபுரம் மண்டலம் சென்னை மண்டலம் பேருந்துகள் திருத்தணி வரை மட்டுமே செல்லும் எனவும் ஆந்திர எல்லைப் பகுதிகளுக்கு செல்லாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
- வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- கூலிப்படை கைவரிசையா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ரவுடி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;-
காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால் பேட்டை அருகே உள்ள வெண்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அஜித். 25 வயதான இவர் ரவுடியாக வலம் வந்தார்.
நேற்று இரவு இவர் வெண்குடி கிராமத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அஜித்தை குண்டுகட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். நள்ளிரவு நேரம் என்பதால் இதனை யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் அஜித் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை அருகில் உள்ள தாங்கி கிராமத்தில் கோவில் ஒன்றின் அருகில் கிடந்தது. இது பற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் அஜித்தை கடத்தி கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து உடல் எங்கே என்று போலீசார் தேடினர். அப்போது அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் உடல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
வள்ளுவப்பாக்கம் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அஜித்தின் உடலை கைப்பற்றிய போலீசார் தலை மற்றும் உடலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரவுடி அஜித்தை மர்ம நபர்கள் திட்டம் போட்டு கடத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை சூப்பிரண்டு ஜூலியர் சீசர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கூலிப்படை கைவரிசையா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலையுண்ட அஜித் மீது வாலாஜாபாத், சாலவாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 6 மாதத்துக்கு முன்பு முத்தியால்பேட்டை செல்லியம்மன் நகரில் கஞ்சா போதையில் ஒரு வீட்டுக்குள் சென்று கலாட்டா செய்ததாக அஜித் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் கைதான இவர் ஒரு மாதத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
- நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
- சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.
காஞ்சிபுரம்:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங் வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.
மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
- அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன.
ஆலந்தூர்:
நங்கநல்லூர், 18வது தெருவில் மழை நீர் வடிகால்வாய் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முழுமையாக நடைபெறாமல் ஆங்காங்கே சிறிய சிறிய பள்ளங்களாக மூடப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் உள்ளகரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது84) காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த முதியவர் ஜெயராஜ் மோட்டார் சைக்கிளோடு அருகில் மழைநீர் வடிகால்வாய் பகுதியில் விழுந்தார். இதில் அவர் மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெயராஜ் தவறி விழுந்து இடத்தில் கால்வாய் பணி நடைபெறுகிறது. ஆனால் இது முடிவடையாமல் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதேபோல் பல இடங்களில் கால்வாய் பணி முடியாமல் உள்ளன. அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன என்றார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலையின் குறுக்கே மாடு சென்றதால் விபத்தில் ஜெயராஜ் இறந்து போனதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எனினும் இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்றார்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதி வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத்தையும் அவளூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் உள்ளது.
இந்த தரைப்பாலத்தின் வழியாக அவளூர், அங்கம்பாக்கம், கண்ணடியன் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், தம்மனூர், காம்மராசபுரம், காவாந்தண்டலம், நெய்யாடு பாக்கம், வள்ளி மேடு, இளையனார் வேலூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வாலாஜாபாத்திற்க்கு வந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அன்றாட பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சேதமடைந்தது.
பின்னர் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தை சீரமைத்து தர நெடுஞ்சாலை துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் பாலாற்றின் குறுக்கே மாற்றுப்பாதை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டுவிட்டு, சேதம் அடைந்த வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது.
சேதமடைந்த தரைப்பாலத்தின் பகுதிகளில் மழை வெள்ளம் செல்வதற்கு வசதியாக மிகப்பெரிய குழாய்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைக்க வசதியாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே தரைப்பாலம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார்.
- ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர்(வயது32).ரவுடி. இவர் மீது கொலை, மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை எபினேசர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டோ மீது காரை மோதினர். மேலும் 2 நாட்டுவெடி குண்டுகளையும் ஆட்டோ மீது வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்தார். அருகில் உள்ள வயல்வெளியில் ஓடிய எபினேசரை மர்மகும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
இதற்கிடையே எபினேசர் வந்த ஆட்டோவை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. திருமழிசை பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும் எபினேசருக்கும் மோதல் இருந்து உள்ளது. இதில் யார்? பெரியவர்? என்று அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் இருதரப்பையும் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், கிரிஸ்டோபர் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் எபினேசரும், எதிர்தரப்பு ரவுடியும் மாறிமாறி யார் முந்திதீர்த்துகட்டுவது என்று திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் எபினேசர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எபினேசர் குற்றவாளி ஆவார். எனவே இந்த கொலைக்கு பழிக்குபழியாக எபினேசர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன்,பா.ஜ.க.பிரமுகர் பி.பி.ஜி.டி சங்கர், கடந்த மாதம் தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் என அனைவரும் வெடி குண்டு வீசியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.
- அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் பகுதியில் பிரபல நிறுவனத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு புல்லட் மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து 88 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் கண்டெனர் லாரியில் ஜார்க்கண்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கண்டெய்னர் லாரி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.
இதனை கவனித்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கிழே இறங்கினார். சிறிது நேரத்தில் கண்டெய்னர் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட புதிய புல்லட் மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. மற்ற மோட்டார் சைக்கிள்களும் தீயினால் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
- வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
- நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை பாசனத்துக்கு கை கொடுப்பதாக உள்ளன.
இந்த ஏரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் இன பெருக்கத்துக்காக வரும் இந்த பறவைகள் சில மாதங்கள் ஏரிகளில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் பறந்து சென்று விடும்.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 ஏரிகளில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை கள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
அந்த வகையில் வந்துள்ள இந்த பறவைகள் வழக்கத்தை விட கூடுதல் ஏரிகளில் தங்கி உள்ளன. ஒரகடம், நாவலூர், மணிமங்கலம், ஆதனூர் ஏரிகளிலும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்திருப்ப தை பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாட்டு பறவைகளில் எந்தெந்த வகை பறவைகள் தற்போது வந்துள்ளன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு 190-க்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
நாவலூர் ஏரியில் வெளிநாட்டு வகை வாத்துக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வகை பறவைகள் வந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சில கிராம மக்கள் பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பறவை ஆராய்ச்சியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர். சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் அரிய வகை பறவைகளை பிடித்து கூண்டுகளில் அடைத்து சிலர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
காஞ்சிபுரம்:
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் அன்றைய தினம் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் விவரம் வருமாறு:-
புழுதிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சங்கர், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி.வி.லதா, அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.மீனாட்சி, பாப்பாநல்லூர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சுகந்தி, மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிரேஸ் பெட்ரீ ஷியா மாலினி,
செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ம.சச்சி தானந்தம், காரணை புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.இரா. சூரியகலா, மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச.நாகராஜி, ஊரப்பாக்கம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ந.புவனேஸ்வரி ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ.ஷேக் தலைமை அகமது, வாலாஜாபாத் ஒன்றியம் பூதேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. சுந்தர ராசன்,
குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, கீழ்க்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.மழலை நாதன், வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா. சொர்ணலட்சுமி,
குன்றத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ஆ.வசந்தி, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.பி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் அ.சுந்தரராஜன், குன்றத்தூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை நூருல் குதாயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






