search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீரமைக்கப்படாமல் கிடக்கும் பூங்கா- அனுமதி அளித்தும் பணி நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு
    X

    சீரமைக்கப்படாமல் கிடக்கும் பூங்கா- அனுமதி அளித்தும் பணி நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகைகள் கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த பூங்காவுக்கு செல்வதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த பூங்கா கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பூங்கா சரிவர சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக காட்சிஅளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்திலும் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    ஆனாலும் இதுவரை பூங்காவை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பெருநகராட்சி என்ற பெயர் பலகையும் மாநகராட்சியாக தரம் உயராமல் அப்படியே காட்சி அளிப்பதால் இதனை பார்த்து செல்லும் மக்கள் பூங்காவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆவது எப்போது? என்ற கேள்வியுடனே செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப்பணிகளில் மாறவில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டாலும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.இதற்காக காரணம் என்ன என்று தெரிவியவில்லை.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல குழு அலுவலகங்கள் புதிதாக புனரமைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×