என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • குடி போதையில் பஸ்சில் ஏறிய நபரை பஸ் டிரைவர் காட்ரம்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.
    • டிரைவரின் தலையில் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார்.

    சோமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 52), சென்னை மாநகர அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் இருந்து அமரம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்சை ஓட்டிச்சென்றார். அமரம்பேடு சென்றடைந்த பின்னர் அங்கு இருந்து மீண்டும் சைதாப்பேட்டைக்கு பஸ் புறப்பட்டது. அப்போது குடி போதையில் பஸ்சில் ஏறிய நபரை பஸ் டிரைவர் காட்ரம்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.

    பின்னர் டிரைவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி அந்த பகுதியில் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற போது டிரைவரின் தலையில் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார்.

    இது குறித்து டிரைவர் குமார் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவரை தாக்கிய நபர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து. பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
    • வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 1 கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் 15-ந் தேதி காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். அவருக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீபெரும்புதூர் மணிகூண்டு அருகில் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பேண்டு வாத்தியம்-மேள தாளம்- அதிர் வேட்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தினர் அனைவரும் திரளாக திரண்டு நின்று, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து பிள்ளை சத்திரம் அருகில் செண்டை மேளம் - பேண்டு வாத்தியம் - அதிர் வேட்டுகள் முழங்க வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    அடுத்து, வாலாஜாபாத் வடக்கு - தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் வடக்கு - தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் மாநகரம் ஆகியவற்றின் சார்பில் வழியெங்கும் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    மொத்தத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகரில் இருந்து விழா நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானம் வரை 40 கி.மீ. தூரத்திற்கு வழி நெடுகிலும் பெரும் கூட்டமாக நின்று வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து - காஞ்சிபுரம் வரை வழியெங்கும் சாலையின் இருமருங்கிலும் கழக கொடி, தோரணங்களும், வரவேற்பு பதாகைகளும், பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அமைத்து, காஞ்சிபுரம் மாநகரில் இதுவரை, இதுபோன்ற கோலகலமான வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்றது இல்லை என்ற அளவிற்கு மிகவும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற 15-ந் தேதி காலை 8.30 மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதனாத்தில் அலைகடலென திரண்டு குவிந்திட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

    • ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
    • அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    காஞ்சிபுரம்:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப். 1-ந் தேதி முதல் செப். 30-ந் தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தில் பிரத்யேக தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் இணை உணவு அளித்தல், இரண்டாவது வாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து, முன்பருவக் கல்வி, யோகா, உள்ளூர் உணவு போன்ற ஆயுஷ் நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின் பற்றுதல் நடைபெறுகிறது.

    மூன்றாவது வாரத்தில் என் மனம் என் நாடு மற்றும் பழங்குடியினரை மையமாகக் கொண்டு ஊட்டச்சத்து உணர்திறன் நிகழ்ச்சியில் நான்காவது வாரத்தில் ரத்தசோகை பரிசோதனை, சிகிச்சை, ஒட்டுமொத்த ஊட்டச் சத்து நடவடிக்கைகள் மற்றும் சமுதாய தோட்டங்கள் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் மற்ற துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கி ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.சங்கீதா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோவில்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.

    அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகளுக்கு குமரக்கோட்டம் முருகன் கோவிலில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. .எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் திருமணம் செய்து கொண்ட 3 ஜோடிகளுக்கும் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, திருக்கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்ட தொடக்க விழாவுக்கான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப் பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.
    • பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது.

    விடுதலை பறவைகள் கட்சி நிறுவன தலைவர் டெல்லி ராஜா சமூக நல அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.

    தங்க சிலை அமைக்க தமிழகம் முழுவதும் விடுதலை பறவைகள் கட்சி சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் தங்க சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள் என்று கட்சியின் நிறுவன தலைவர் டெல்லி ராஜா கூறினார்.

    • கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மற்றும் சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் நிதியுதவியுடன் கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா. ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் செயலாட்சியருமான மு. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளரும் முதன்மை வருவாய் அலுவலருமான சு. உமாபதி மற்றும் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் தே. சித்ரா ஆகியோர் வரவேற்று பேசினர். நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநர் சுரேஷ் கிட்டங்கி பராமரிக்கும் முறையை விளக்கி கூறினார்.

    இப்பயிற்சியில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர் நாகராஜன், மணியப்பன் (ஓய்வு) ஆகியோர் விவசாயிகளுக்கு சேமிப்பு கிட்டங்கி பயன்பாட்டு தானியங்கள் அறுவடை செய்த பிறகு அவர்கள் பராமரிக்கும் முறை, நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான சத்தியநாராயணன், காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அருணா, காஞ்சிபுரம் சரக கூட்டுறவு சார்பதிவாளர் கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகைகள் கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த பூங்காவுக்கு செல்வதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த பூங்கா கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பூங்கா சரிவர சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக காட்சிஅளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்திலும் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    ஆனாலும் இதுவரை பூங்காவை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பெருநகராட்சி என்ற பெயர் பலகையும் மாநகராட்சியாக தரம் உயராமல் அப்படியே காட்சி அளிப்பதால் இதனை பார்த்து செல்லும் மக்கள் பூங்காவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆவது எப்போது? என்ற கேள்வியுடனே செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப்பணிகளில் மாறவில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டாலும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.இதற்காக காரணம் என்ன என்று தெரிவியவில்லை.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல குழு அலுவலகங்கள் புதிதாக புனரமைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை இழந்து 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

    கணவர் மறைவுக்கு பிறகு அரக்கோணத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்த அவர் அங்கு ஒரு வாலிபருடன் பழகி ஏமாந்துள்ளார்.

    இதன் பின்னர் மீண்டும் காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பேஸ்புக் மூலமாக தினேஷ்குமார் என்ற வாலிபர் 3 குழந்தைகளின் தாயுடன் பழகி இருக்கிறார் அப்போது இருவரும் தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் நெருக்கமானது. இதனால் இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த லிவ்விங் டொகதர் வாழ்க்கையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் மகளான 10-ம் வகுப்பு மாணவி மீதும் தினேஷ் குமார் காம பார்வையை வீசினார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளாக பார்க்க வேண்டிய மாணவியை பள்ளியில் இருந்து ஏதோ காரணம் கூறி அழைத்து வந்து வீட்டில் வைத்தே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போன்று தினேஷ்குமார் பல முறை நடந்து கொண்டு உள்ளார்.

    ஒரு கட்டத்தில் தினேஷ்குமாரின் தொல்லை அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பின்னர் தனது தாயிடம் இது பற்றி சொல்லி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் காஞ்சிபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தினேஷ் குமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவரை போலீசார் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம்.

    காஞ்சிபுரம்:

    ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். கைது கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பதி, நகரி, புத்தூர், ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படும். தற்போது பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் காஞ்சிபுரம் மண்டலம் சென்னை மண்டலம் பேருந்துகள் திருத்தணி வரை மட்டுமே செல்லும் எனவும் ஆந்திர எல்லைப் பகுதிகளுக்கு செல்லாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    • வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • கூலிப்படை கைவரிசையா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ரவுடி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;-

    காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால் பேட்டை அருகே உள்ள வெண்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அஜித். 25 வயதான இவர் ரவுடியாக வலம் வந்தார்.

    நேற்று இரவு இவர் வெண்குடி கிராமத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அஜித்தை குண்டுகட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். நள்ளிரவு நேரம் என்பதால் இதனை யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் அஜித் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை அருகில் உள்ள தாங்கி கிராமத்தில் கோவில் ஒன்றின் அருகில் கிடந்தது. இது பற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் அஜித்தை கடத்தி கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து உடல் எங்கே என்று போலீசார் தேடினர். அப்போது அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் உடல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    வள்ளுவப்பாக்கம் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அஜித்தின் உடலை கைப்பற்றிய போலீசார் தலை மற்றும் உடலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரவுடி அஜித்தை மர்ம நபர்கள் திட்டம் போட்டு கடத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை சூப்பிரண்டு ஜூலியர் சீசர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கூலிப்படை கைவரிசையா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கொலையுண்ட அஜித் மீது வாலாஜாபாத், சாலவாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 6 மாதத்துக்கு முன்பு முத்தியால்பேட்டை செல்லியம்மன் நகரில் கஞ்சா போதையில் ஒரு வீட்டுக்குள் சென்று கலாட்டா செய்ததாக அஜித் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் கைதான இவர் ஒரு மாதத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

    • நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    காஞ்சிபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங் வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×