என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
- குடி போதையில் பஸ்சில் ஏறிய நபரை பஸ் டிரைவர் காட்ரம்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.
- டிரைவரின் தலையில் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார்.
சோமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 52), சென்னை மாநகர அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் இருந்து அமரம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்சை ஓட்டிச்சென்றார். அமரம்பேடு சென்றடைந்த பின்னர் அங்கு இருந்து மீண்டும் சைதாப்பேட்டைக்கு பஸ் புறப்பட்டது. அப்போது குடி போதையில் பஸ்சில் ஏறிய நபரை பஸ் டிரைவர் காட்ரம்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.
பின்னர் டிரைவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி அந்த பகுதியில் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற போது டிரைவரின் தலையில் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து டிரைவர் குமார் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவரை தாக்கிய நபர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து. பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.






