என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.
    • டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

    பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடி எஃப் வாசன் சாலை விபத்தி சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோவைக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.

    கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    முன் சென்ற வாகன்ததை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

    சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.

    டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படத்தின் நிலை என்ன என்பதும் கேள்வி குறியாக உள்ளது.

    • 3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாசென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார்.
    • காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட திருப்பந்தியூர் கிராமத்தில் பதுங்கி இருந்த ரவுடி குள்ள விஷ்வா போலீசாரின் என் கவுண்டருக்கு பலியானான்.

    ரவுடி விஷ்வாவை பிடிக்கச் சென்றபோது போலீசாரை வெட்டியதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி விஷ்வா உயிரிழந்து விட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஏ பிளஸ் வகையை சேர்ந்த ரவுடியான குள்ள விஷ்வா மீது 3 கொலை, 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனங்களை மிரட்டி விஷ்வா மாமூல் வாங்கி வந்ததாகவும் இதுதொடர்பான மோதல் காரணமாகவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட சென்ற ரவுடி விஷ்வாவின் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போனில் பேசியபடியே சுட்டு விடவா? என்று கேட்கும் மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாவுடன் சென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார். செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காவல் நிலையத்தின் உள்ளேயே வைத்து போலீசுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    போலீஸ் நிலையத்தில் வைத்து விடுக்கப்பட்ட இந்த என்கவுண்டர் மிரட்டலால் கடும் அதிர்ச்சி அடைந்த குள்ள விஷ்வா அது தொடர்பாக உடனடியாக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது வழக்கில் பிடிவாரண்டில் ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ரிமாண்ட் செய்யப்பட்டேன். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பிணை பெற்றேன்.

    நான் சிறையை விட்டு வெளியே வந்தவுடன் காவல் நிலையத்தில் கையெழுத்து போடவில்லை. எனது பிணை மனுவை ரத்து செய்யச் சொல்லி காவல் துறையினர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி வழக்கு போட்டனர்.

    நான் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி முதல் சிவகங்கையில் தங்கி அந்த காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தேன். ஆனாலும் எனது பிணை மனு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். எனது வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நான் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கடந்த மாதம் 1-ந்தேதி அன்று உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின் நகல் கோரி எனது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சில காரணங்களால் அந்த நகல் 24-ந்தேதி அன்று கிடைத்தது.

    அந்த நகலை வழக்கறிஞரிடம் இருந்து நான் 26-ந்தேதி பெற்றுக்கொண்டேன். நீதிமன்ற உத்தரவின்படி நான் 27-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் புதூர காவல் நிலையத்தில் கையெழுத்திட்டேன்.

    28-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கு நான் கையெழுத்தட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் காவல் துறையினர் என்னை காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைத்தனர்.

    காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர். காவல் துறையினரின் சிறப்பு படையினர் என்னிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மதியம் 12 மணியளவில் காவல் ஆய்வாளரிடம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்ன செய்வது என்று கேட்டார்.

    அப்போது அவர் கையெழுத்து வாங்கவா 'சுட்டு விடவா' என்று கேட்டார். இதனால் நான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன். தயாளன் ஆய்வாளர் பரந்தாமனிடம் பேசிய வீடியோ ஆதாரம் உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நான் கையெழுத்திட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் என்னை சுட்டு விடலாமா? என சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆய்வாளரிடம் பேசியதில் இருந்து என்னை ஆய்வாளர் என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன்.

    எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்ட காவல் துறையினரே பொறுப்பு என்பதை இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே என்னை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டுகிறேன்.

    இவ்வறு அந்த புகாரில் ரவுடி விஷ்வா கூறியிருக்கிறார்.

    இந்த கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுட்டுக்கொல்லப்பட்டு உள்ள விஷ்வா, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வயலூர் கிளாஸ் கிராமத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அவர் எழுதி உள்ள கடிதத்தில், என்மீது போலி என்கவுண்ட்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி காவல் ஆய்வாளர் தயாளன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.

    காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக கூறப்படும் தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார் ரவுடி விஷ்வா.
    • ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், சுங்கவார்சத்திரத்தில் ரவுடி மீது போலீசார் என்கவுண்டர் நடத்தினர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி விஷ்வா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.

    ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    • கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வெடி குண்டு வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    மணிமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). ஆட்டோ டிரைவர். இவரை கடந்த மாதம் கரசங்கால் மருந்து கடை அருகே வைத்து கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர். அதே போல் சமத்துவபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரையும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். கொலை முயற்சியில் ஈடுபட்டது. கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி என்ற கோபிநாத் (வயது 35), சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கரசங்கால் ஏரிக்கரையில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் கோபி மீது ஒரு கொலை, 8 கொலை முயற்சி, 7 அடிதடி வழக்குகள், கொள்ளையடித்தல் போன்ற வழக்குகள் மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கானாத்தூர் போலீஸ் நிலையங்களில் உள்ளது தெரியவந்தது.. விக்னேஷ் மீது மணிமங்கலம், சோமங்கலம் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளையடித்தல், வெடி குண்டு வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர்.
    • பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலூர் ஈ.பி.காலணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் வயது (40). இவர் பொதுமக்களிடம் இருந்து இலவச ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி தன் வீட்டில் பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையில் அதிகாரிகள் ஈ.பி. காலணி பகுதியில் உள்ள மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய ஆய்வின்போது அவரது வீட்டில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளும், 20 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகளும் என மொத்தம் 1080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்து வந்த மகாராஜனை போலீசார் கைது செய்து பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    • பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்”
    • 8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் விழாவில் பேசியதாவது:

    சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார்.

    "காசு இல்லாததால் மருந்து மாத்திரை சாப்பிடுறதில்ல.. இனி மாத்திரை வாங்குவேன்" என்று ஒரு பாட்டி சொல்கிறார்கள்.

    இன்னொரு பெண்மணி சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், "தினமும் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா... காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்" என்று சொன்னார்கள்.

    இந்த இரண்டு பதிலும் எனக்கு நெகிழ்ச்சியை தந்தாலும், காலத்திற்கும் எண்ணி நான் பெருமைப்படுகிற மாதிரியான ஒரு பதிலை, நாம் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோமோ அதை ஒரு வரியில் சொல்கின்ற மாதிரி இன்னொரு பெண்மணி ஒன்று சொன்னார்…

    "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்" என்று அவர் சொன்னார். அதாவது, "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்" என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?

    இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப் போகின்றது. நாள்தோறும் உதிக்கும் உதயசூரியன் போல உங்களுடைய இந்த உதயசூரியன் ஆட்சியும் உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகின்றது. இது தி.மு.க.வுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி! மிகவும் முக்கியமான வாக்குறுதி!

    "இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள். இவர்களால் தர முடியாது" என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல-தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு இருக்கிறது.

    நான் போட்ட ஒரு கையெழுத்து, பலரது வாழ்க்கையை மாற்ற போகிறது என்ற அந்த உரிமையை எனக்குக் கொடுத்தவர்களே நீங்கள்தான்!

    மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். மக்களுக்காகதான் பயன்படுத்துவேன். இந்த இரண்டு திட்டங்கள், நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்!

    இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.

    உழவுக் கருவிகளை கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறினால்கூட பெண்களுடைய உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கங்களாலும், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

    பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தினுடைய உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்" என்றெல்லாம்கூட எழுதி வைத்திருந்தார்கள்.

    இன்றைக்கு மானமும், அறிவும் உள்ள யாரும் அந்த மாதிரி பேசுவதில்லை. பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளுகின்ற இயற்கை சுழற்சியைகூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள். ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். படிக்கக் கூடாது-வேலைக்கு போகக்கூடாது-வீட்டுப்படியை தாண்டக்கூடாது அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று பழமைவாத சிந்தனைகளை வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள். இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமில்லை, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம்!

    8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது. ஆனாலும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பு, தீராத கோபம்... ஏனென்றால்..? சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால், அது சட்டபடி குற்றம். கைம்பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

    பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க பள்ளி-கல்லூரிக்கு வந்து விட்டார்கள். இனி, உனக்கு படிப்பு எதுக்கு என்று சொல்ல முடியாது. நீ வேலைக்கு போகக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்!

    இன்றைக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படிக்கிறார்கள். அதுவும் நன்றாக படிக்கிறார்கள். அனைத்து வேலைகளுக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். இந்த பாலினச் சமத்துவத்தை கொண்டு வந்து பெண்ணும், ஆணும் சரிநிகர் என்று உயர்த்தியதுதான் நம்முடைய திராவிட மாடல்!

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தந்தை பெரியார் சொன்ன மாதிரி, ஆணை விடவும் உயர்ந்தவர்களாக பெண்களை உயர்த்துவதுதான் திராவிட மாடல்!

    "எங்கள் அம்மா இல்லை என்றால் நான் இல்லை" என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை பார்த்திருக்கின்றோம்.

    ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் 'ஹவுஸ் ஒய்ஃப்' என்று சிலர் சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.

    'உங்கள் மனைவி வேலைக்கு போகிறார்களா?' என்று கேட்டால், "இல்லை" என்று மட்டும் சொல்லாமல் "வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்" என்று சிலர் சொல்வார்கள். வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

    தாயின் கருணை! மனைவியின் உறுதுணை! மகளின் பேரன்பு! இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை! உண்மையில், உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான்! என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர்கள். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக் கொள்வார்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது.
    • எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    காஞ்சிபுரம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்துசக்திகள் இருக்கலாம் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது. இந்த காஞ்சி மாநகர் ரொம்ப சின்ன வயதில், கோபாலபுரம் வீதியிலே, இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

    அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம். 1971-ம் ஆண்டு அண்ணாவின் கல்லறையிலே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அண்ணா சதுக்கத்தில் இருந்து அண்ணா சுடரை கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நானும் நண்பர்களும் புறப்பட்டு காஞ்சீபுரம் வந்து கழக மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கையில் அண்ணா சுடரை நான் ஒப்படைத்தேன்.

    இன்றைக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் எடுத்து வந்த சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட தமிழ் சமுதாயத்தை காக்க கூடிய திராவிட சுடரை ஏந்தி வந்துள்ளேன்.

    அவரது கொள்கைகளை ஏற்று வாழ்வதால்தான் தமிழ் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளேன். இந்த திட்டத்தை நான் தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேராக நான் கருதுகிறேன்.

    தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீடிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணா துரை தான் ஆள்கிறான் என்றார்.

    அதே போல் இன்றைக்கு மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    இந்த 2½ ஆண்டில், எத்தனை திட்டங்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி பெற விடியல் பயணத் திட்டம், பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குகிற புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை தொடங்கிய நாட்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் இப்போது இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்.
    • தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் கடைசி பக்கத்தில், 'தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்' என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

    தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இது அந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

    • சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை.

    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னை வாலிபர் ஒருவர் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அந்த கூடையில் சோதனை செய்தபோது, அரிய வகை பைத்தான் எனப்படும் 15 மலைப்பாம்பு பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்கா அணில் ஆகியவை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வகை பாம்புகள் விஷமற்றவை ஆனால் ஆபத்தானவை. வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர்பிரதேசங்களில் இருக்கக்கூடியவை ஆகும். அணில் குட்டி ஆப்பிரிக்க கண்டத்தில் அடர்ந்த காடுகளில் வசிக்கக்கூடியது. சுமார் ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடியது.

    பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மலைப்பாம்பு குட்டி, அணில் ஆகியவை எந்த நாட்டில் இருந்து வந்ததோ? அதே நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளனர். அவை நாளை அதிகாலை, சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் அதனை கடத்தி வந்த வாலிபரிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பட்டுகள் மிகவும் பிரபலமானவை. இதனை பயன்படுத்தி சிலர் காஞ்சிபுரம் பட்டு என்று போலியான பட்டுக்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சிலமா தங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை பரிசோதனைக்காக அனுப்பி இருந்தனர். மேலும் விசைத்தறிகளில் தயார் செய்யப்பட்ட சேலைகளை கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் பட்டுச்சேலை பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை என்று இதனை உடனடியாக வெளியிட வேண்டும் கைத்தறி சேலை நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து கைத்தறித்துறை இயக்குனரிடம் கேட்டபோது பட்டுச் சேலை பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்தவுடன் வெளியிடப்படும் என்றார்.

    • பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
    • அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 12 மாத பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். வரும் 22-ந்தேதி பிற்பகல் 5 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-யை அரசுடமையாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்திவிட்டு அதற்கான செலானை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    விண்ணப்பத்தில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.

    பதிவேற்றம் செய்யப்பட்ட செலான் நகல் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அதில் சுய கையொப்பமிட்டு பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அல்லது கொரியர் மூலம் மட்டுமே 22.09.2023 தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×