என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாபாத் அருகே மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவர்
    X

    வாலாஜாபாத் அருகே மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவர்

    • விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
    • நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது45). கல் குவாரியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீதர் மதுகுடித்து வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மதுபோதையில் வந்த ஸ்ரீதர் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் கணவன் -மனைவி இருவரும் தூங்கிவிட்டனர்.

    எனினும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீதர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதிகாலை 4 மணிஅளவில் எழுந்த ஸ்ரீதர் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி செல்வராணியின் தலையில் அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வராணி துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு எழுந்த அவர்களது குழந்தைகள் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பயத்தில் அலறினர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எடமச்சி பஸ் நிறுத்தம் அருகே நின்ற ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×