என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
- அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெகத்ரட்சகன் எம்.பி, சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருவள்ளூர்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை இன்று திருக்குவளையில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெகத்ரட்சகன் எம்.பி, சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின்படி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 56,272 மாணவ- மாணவியர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 5,567 பேர் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 3,051 பேர் என மொத்தம் 64,890 மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள்.
காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் பி. எம். குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருவிடந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்தியா சேகர், எம்.எல்.ஏ. பாலாஜி, சப் கலெக்டர் லட்சுமிபதி, பையணூர் சேகர், ஊராட்சி தலைவர் அமுதா குமார், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






