என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை-புறநகரில் பரவலாக மழை: புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது.
- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது.
காஞ்சிபுரம்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று இரவும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், செங்குன்றம், புழல், அயனாவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், போரூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.
பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது. சில இடங்களில் சுமார் அரைமணிநேரம் மழை வெளுத்து வாங்கியது.
இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலி முகமது பேட்டை, பாலு செட்டி சத்திரம், தாமல், வாலாஜாபாத், பரந்தூர், மாகரல், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலையும் மழை பெய்தது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் அவதி அடைந்தனர்.
திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்துவாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.






