என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடுவாஞ்சேரி-காஞ்சிபுரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் கும்பல் கைது
- பிரசாந்த் மீது சென்னையில் மட்டும் கொலை, கொள்ளை என 5வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மர்ம நபர்கள் கத்திமுனையில் உதயகுமாரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி, பைக் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் புதிய புறநகர் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சக்திவேல் என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கொள்ளையர்களை பிடிக்க கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் , சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நந்திவரம் பெரியார் நகரை சேர்ந்த விஜய்பீட்டர், நந்திவரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம், சென்னை பூக்கடை பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற கொசுறு சூர்யா, வளசரவாக்கம் ஷேக் அப்துல்லாநகரை சேர்ந்த பிரசாந்த், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பிரசாந்த் மீது சென்னையில் மட்டும் கொலை, கொள்ளை என 5வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் இருங்காட்டுகோட்டை உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து பழைய ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கத்திமுனையில் உதயகுமாரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.
இதேபோல் கடந்த 7-ந் தேதி காமராஜர் சாலையில் ஆந்திரா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அஜிஸ் பாஷா என்பவரிடமும் மர்ம நபர்கள் செல்போன், பணத்தை பறித்து தப்பினர்.
இந்த கொள்ளை தொடர்பாக பரத், மணிகண்டன், பாலசந்தர் ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், பட்டாகத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.






