என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    3 மாவட்டங்களில் விடிய, விடிய மழை- தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி
    X

    3 மாவட்டங்களில் விடிய, விடிய மழை- தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி

    • காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
    • மேட்டுத்தெரு காமராஜர் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் அக்னி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த சில நாட்களாக 105 டிகிரிக்கு வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்தது.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டி தீர்த்தது. சென்னை நகர் பகுதியில் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

    இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டியது.

    பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலையம் நுழைவாயிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், ரெயில் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.

    மேட்டுத்தெரு காமராஜர் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 10.7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் 25.8 மி.மீ., வாலாஜாபாத்-36.50 மி.மீ., உத்திரமேரூர்-17 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர்-45 மி.மீ., குன்றத்தூர்-88.20 மி.மீ.மழை கொட்டி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. செங்குன்றம், பொன்னேரி, பூந்தமல்லி, சோழவரம், பொன்னேரி, ஆவடி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

    இதனால் திருவள்ளூர் பஜார் வீதி, கலெக்டர் அலுவலகம், வீரராகவர் கோவில் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. தொடர்மழை காரணமாக வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் பருவங்களில் விவசாயிகள் உழவு செய்வதற்கும் விதைப்பதற்கும் இந்த மழை கை கொடுக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பள்ளி முழுவதும் ஏரிபோல் காணப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் பலத்த காற்று காரணமாக மரங்களும் முறிந்து விழுந்து உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜமீன்கொரட்டூர் பகுதியில் 84 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்)வருமாறு:-

    ஆர்.கே.பேட்டை-5

    பூண்டி-3.

    செங்கல்பட்டு மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளன.

    செம்மஞ்சேரி, குமரன் நகர், சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே ஆறுபோல் மழை நீர் ஓடுகிறது. ஓ.எம்.ஆர்.சாலையில் மெட்ரோ ரெயில் பணி காரணமாக சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    திருப்போரூரில் ரவுண்டானா அருகில் உள்ள ரேசன் கடைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கி ருந்த ரேசன் பொருட்கள் சேதம் அடைந்தது.

    செங்கல்பட்டு மாவட்டத் தில் அதிகபட்சமாக தாம்ப ரத்தில் 68 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில்-15மி.மீ., மதுராந்தகம்-30 மி.மீ., செய்யூர்-29 மி.மீ., மாமல்லபுரம்-53 மி.மீ., கேளம்பாக்கம்-30மி.மீ., திருக்கழுக்குன்றம்-25மி.மீ., திருப்போரூர்-22மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

    Next Story
    ×