என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அடுத்த தாமல் பகுதியில் நேற்று முன்தினம் மினி வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
விபத்து குறித்து காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை இணை ஆணையர் ராமலிங்கம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ராமலிங்கம் கூறும்போது, “மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்லவதற்காக ஏற்படுத்தியுள்ள குறுக்கு வழிகளை தடை செய்யப்படும்.
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது மீறினால் வாகனம் அனுமதி தடை மற்றும் ஓட்டுனர் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
இந் நிலையில் தற்போது விபத்து நடந்த தாமல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும்படி அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சீபுரம் அடுத்த தாமல் பகுதியைச் சுற்றி பாலுசெட்டி சத்திரம், திருப்புட்குழி, முசரவாக்கம், கீழ்ஒட்டிவாக்கம் உள்ளிட்ட ஏராளமான மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் வயல்களும் சாலையின் மறுபுறம் விவசாயிகளின் நீராதரமான தாமல் ஏரியும் உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு பல முறை நீர்ப்பாசனத்திற்காக விவசாயிகள் சாலையைக் கடக்கும் நிலை காணப்படுகிறது.
மேலும் தொடக்க, நடுநிலைப் பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் ஆபத்தான நிலையில் நெடுஞ்சாலையைக் கடக்கும் நிலை உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புக் கூட்டத்தில் அப்போதைய தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் மற்றும் கிராம மக்கள் தாமல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை அத்திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் இருந்து ராஜகுளம் வரை உள்ள 15 கிலோ மீட்டர் பகுதியில் அதிக அளவில் வாகன விபத்துகள் நடப்பதாக மாவட்ட காவல் துறை சார்பினில் நடைபெற்ற ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே இப் பகுதி சாலையில் பல்வேறு இடங்களில் வாகனங்களின் அதி வேகத்தினை குறைக்கும் வகையினில் ரிப்ளக்கடருடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டது. ஆனாலும் வாகன ஓட்டிகள் அத்து மீறி சாலை விதிகளை மீறி செல்வதால் இது போன்று விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மேம்பாலம் அமைப்பது ஒன்றே விபத்துகளை தவிர்க்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி திருக்கோவிலில் மாசிமாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர்.
இன்று முதல் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 24-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 26-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
1-ந்தேதி இரவு தெப்பல் உற்சவமும், 3-ந்தேதி மாலை வேடர்பறிஉற்சவமும், 4-ந்தேதி அதிகாலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.
தினமும் காலை, மாலை வேளைகளில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கிளி, பூத, வெள்ளிமயில், தங்கமயில், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வானவேடிக்கையுடன் வீதி உலா வருவார்.
இதையொட்டி தினமும் இசைநிகழ்ச்சிகளும், சமயசொற்பொழிவுகளும், நடைபெற உள்ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் சார்பில் செயல்அலுவலர் நற்சோனை மற்றும் மேலாளர் வெற்றிவேல், சிவாச்சார்யர்கள், ஆலயபணியாளர்கள் செய்துள்ளனர்.
அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தஞ்சாவூர் அய்யப்பேட்டையை சேர்ந்த விஜயனிடம் (32) விசாரணை செய்த போது அவர் 2013-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது பற்றி தஞ்சாவூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சென்னை வந்து கொண்டு இருக்கிறார்கள். #Tamilnews
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலவரம் குறித்து பேசுவதற்கு டெல்லி செல்கிறேன். அது வழக்கமான ஒன்று. ஏற்கனவே விஜயதாரணி விவகாரம் குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது அவர் எந்த கருத்தும் கூறவில்லை. அதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.
அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். அனைத்து கட்சி தலைவர்களை அழைத்தது போல விவசாய சங்க தலைவர்களையும் அழைக்க வேண்டும். அவர்கள் காவிரி நதிநீர் பிரச்சனைக்காக போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. வீதியில் நடந்து செல்லும் தாய்மார்களிடம் செயின்பறிப்பு அதிகரித்துள்ளது.
சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை முழுவீச்சில் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் தீவிரவாத பயிற்சி நடைபெறுவதாக தீவிரவாதம் ஊடுருவல் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் கூறி உள்ளார்.
மத்திய அமைச்சராக இருப்பவர் ஒருவர் சொல்லி இருக்கிறார். எந்த தீவிரவாத அமைப்பு ஊடுருவி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
பிரதமர் மோடி தமிழகம் வந்து மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய நலத்திட்டங்களை அறிவிக்கட்டும். பிரதமர் மோடி கலந்து கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் வங்கியில் மோசடி செய்த நிரவ்மோடி பங்கேற்றுள்ளார்.
பெரிய நிறுவனங்கள் எல்லாம் வங்கியில் பணத்தை பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று சவுரியமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமல்ஹாசன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, நல்லக்கண்ணு, ரஜினி, விஜயகாந்த் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து இருக்கிறார். அதில் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
கமல்-ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.
அ.தி.மு.க. உடைந்து இருக்கிறது. அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.
அ.தி.மு.க.வை இணைப்பதற்கு பிரதமர் மோடி கட்டபஞ்சாயத்து செய்தார் என்று காங்கிரஸ் கூறி இருந்தது. தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சு அதை நிரூபித்து விட்டது. பா.ஜனதா, மோடி, மத்திய அரசு இவர்கள்தான் மறைமுகமாக அ.தி.மு.க.வை நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
போரூர்:
கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையை சேர்ந்தவர் சுரபிரத்னா (22), பல் மருத்துவ கல்லூரி மாணவி. இவர் காரில் அமைந்தகரை அண்ணா வளைவு சிக்னல் அருகே நின்று விட்டு புறப்பட்டு சென்றார்.
அப்போது அசோக்நகர் 10-வது அவின்யூவை சேர்ந்த வக்கீல் எழில்ராயன் என்பவர் தனது மகளுடன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மாணவி சுரபி ரத்னாவின் கார் லேசாக உரசி சென்றதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த எழில்ராயன், மாணவி சுரபிரத்னாவின் காரை விரட்டிச் சென்று அமைந்தகரை மார்க்கெட் சிக்னலில் வழிமறித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே நடுரோட்டில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எழில் ராயன் திடீரென மாணவி சுரபி ரத்னாவின் கன்னத்தில் தாக்கினார். வலியால் அவர் அலறி துடித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சுரபி ரத்னா அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து வக்கீல் எழில் ராயனை கைது செய்தார். அவர் மீது ஆபாசமாக பேசி பெண்ணை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #tamilnews
சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த செட்டிபுண்ணியம் இந்திரா நகரை சேர்ந்தவர் துளசி (வயது 35). கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் தாம்பரம், பல்லாவரம் பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார்.
அப்போது தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் பெரியார் நகரில் உள்ள நாகூர் என்ற விதவைப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக நாகூர் வீட்டில் துளசி தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நாகூர் வீட்டில் துளசி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். துளசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துளசியின் உடல் அலங்கோலமான நிலையில் இருந்தது. எனவே அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவருடன் தங்கி இருந்த நாகூர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட துளசியுடன் வாலிபர் ஒருவர் நெருங்கி பழகி வந்தார். அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து துளசியை சந்தித்து சென்றுள்ளார்.
எனவே தனிமையில் இருந்த போது ஏற்பட்ட தகராறில் துளசியை அவருடைய கள்ளக்காதலனே கழுத்தை அறுத்து கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தலைமறைவான நாகூர் சிக்கினால் தான் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது முழுமையாக தெரியவரும். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அதேபகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக முதலில் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் குடும்பத்துடன் குன்றத்தூரில் குடியேறினார். அப்போது செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் சரளாவையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து செல்லப்பட்டார். இந்தநிலையில் ஹாசினி கொலை வழக்கில் இறுதிகட்ட விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் தினமும் நடந்துவந்தது. மொத்தம் 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 14-ந்தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் வேல்முருகன், ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு வருகிற 19-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு நாளை வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
நாம் தமிழர் கட்சியின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், திருப்போரூர், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கலந்துரையாடல் தாம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது புதிய நிர்வாகிகளை அவர் நியமித்தார். அதன் விவரம் வருமாறு:-
காஞ்சீபுரம் கிழக்கு மண்டலச் செயலாளர்- வழக்கறிஞர் செ.இராசன், காஞ்சீபுரம் தென்கிழக்கு மாவட்ட செயலாளர்- எல்லாளன் யூசுப், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர்- மைக்கேல் வின்சென்ட் சேவியர்.
காஞ்சீபுரம் கிழக்கு மண்டல கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை செயலாளர்- தே.குரல் இனியன், காஞ்சீபுரம் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள்- செயலாளர்- நாகநாதன், தலைவர்: சீனிவாசக்குமார், பொருளாளர் - வே.நீதி, இ.பா செயலாளர்- இராசன்.
செயலாளர் - வெங்கடேசன், இணைச் செயலாளர் - ராஜீவ், துணைச் செயலாளர்- பாலசிங், தலைவர் -சேது, துணைத்தலைவர் - செந்தில் குமார், துணைத் தலைவர் : கெளஸ் பாஷா, பொருளாளர் - பொன்சேகர், செய்தி தொடர்பாளர் -முருகவேல்.
செயலாளர்- ச.ராயப்பன், இணைச் செயலாளர்- ம.மகேஷ், துணைச் செயலாளர் -சுரேஷ்குமார் , தலைவர் - வே.இரவிக் குமார், துணைத் தலைவர் - தாமஸ் செல்வராஜன், துணைத் தலைவர் - வாசுதேவன், பொருளாளர் - மதியரசு, செய்தி தொடர்பாளர் - சு.அரவிந்த்,.
செயலாளர்- சாலமோன், இணைச் செயலாளர் - கா.மாரிமுத்து, துணைச் செயலாளர் - ச.சுரேசு, தலைவர்- மகேந்திரவர்மன் , துணைத் தலைவர் -மு.குமார், துணைத் தலைவர் - செந்தில்குமார், பொருளா ளர் - நா.சி.சுரேசு, செய்தி தொடர்பாளர் -மு.தியாகேசன்.
செயலாளர்- சீ.மோகன் ராஜ், இணைச் செயலாளர்: வீ.சங்கர், தலைவர் - குண சேகரன், துணைத் தலைவர் : லோகநாதன் , துணைத்தலைவர் : கேசவன், செய்தி தொடர்பாளர் - பிரசாந்த்.
செயலாளர் - சுரேஷ் குமார், இணைச் செயலாளர் - பழ.வீரமணி, துணைச் செயலாளர் - முத்துக்குமார், தலைவர்- சுப.முருகன், துணைத் தலைவர் - ஆ.செல்வராயன், துணைத் தலைவர் - க.பெரியசாமி, பொருளாளர் - குணா. இளஞ்சேகர், செய்தி தொடர்பாளர் - மகிராசா. #tamilnews
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு உரிய சட்ட ஆலோசகர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வேண்டிய அழுத்தம் கொடுத்து இருந்தால் 253 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கும்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. விரைவில் அ.தி.மு.க. பிளவுபடும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து விட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் தான் செயின்பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதில் காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தீவிரவாத பயிற்சி நடைபெற வாய்ப்பு இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? இதை அரசியலாக பார்க்காமல் மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
சென்னை விமான நிலையத்தில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது. அது குறித்தான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை.
மேலும் தீவிபத்து குறித்து விசாரிக்க பா.ஜனதா சார்பில் ஒரு குழு அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. விரைவில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சரை சந்தித்து பழமையான சிற்பங்களை பாதுகாக்க கோரிக்கை வைப்போம்.
காவிரி நதிநீர் தீர்ப்பு மனவேதனை அளிக்கிறது. தமிழக அரசு விரைவில் சட்ட ஆலோசகர்களை அழைத்து பேசி சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் தோல்வி அடைந்து விட்டது.
பிரதமர் மோடியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி இருப்பது அரசியல் சார்ந்த விவகாரம் என்பதால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews






