என் மலர்
காஞ்சிபுரம்
சோழிங்கநல்லூர்:
பனையூர் பகுதியில் வசித்து வந்தவர் நெல்சன் (வயது27). இவர் டெல்லி சிறப்பு காவல் படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.
விடுமுறையையொட்டி நெல்சன் பனையூரில் உள்ள வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டெம்போ வேன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நெல்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி வனிதா (25). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (36). இவர் பாலாஜியின் உறவினர் ஆவார். இதனால் கணபதி அடிக்கடி பாலாஜி வீட்டுக்கு வந்து சென்றார்.
அப்போது வனிதாவுக்கும், கணபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
இதுபற்றி அறிந்ததும் பாலாஜி மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் வனிதா திடீரென மாயமானார். அவர் கள்ளக்காதலன் கணபதியுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதனால் 1½ வயது மகனுடன் பாலாஜி தவித்தார். அவர் மனைவியை தேடி வந்தார்.
இதற்கிடையே வனிதா தனது கள்ளக்காதலன் கணபதியுடன் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த குண்டு பெரும்பேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பது பாலாஜிக்கு தெரிந்தது. ஆத்திரம் அடைந்த அவர் அவர்களை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.
இன்று அதிகாலை பாலாஜி தனது கூட்டாளிகளுடன் குண்டு பெரும்பேடில் மனைவி வனிதா கள்ளக்காதலனுடன் வசிக்கும் வீட்டுக்கு சென்றார்.
அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணபதியும், வனிதாவும் தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் கொலைக்கும்பல் கணபதியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற வனிதாவுக்கும் வெட்டு விழுந்தது.
இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த கணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வனிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய வனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான கணபதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வனிதாவின் கணவர் பாலாஜி மற்றும் வனிதாவின் தம்பி உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலைக் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
மனைவியின் கள்ளக்காதலனை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் பராமரிப்பு பணிக்காக தாம்பரம் பகுதியில் உள்ள மூன்றாவது முனையத்திற்கு ரெயிலை கொண்டு சென்றனர். அந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் 11-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி இருந்தனர்.
எக்ஸ்பிரஸ் ரெயிலை பின்புறமாக இழுப்பதற்காக டீசல் என்ஜினை ஊழியர் ஒருவர் ஓட்டி வந்தார். டீசல் என்ஜின் வழக்கத்தைவிட சிறிது வேகமாக வந்ததாக தெரிகிறது.
இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அருகே நிறுத்த முடியாமல் ரெயிலின் கடைசி பெட்டி மீது என்ஜின் பயங்கரமாக மோதியது. இதில் ரெயில் பெட்டி சேதமடைந்தது. மேலும் அந்த பெட்டியின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அபாய சங்கு ஒலியை எழுப்பினர். இதனால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்டனர்.
பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பராமரிப்புக்காக முனையத்துக்கு கொண்டு சென்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தை ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.
11-வது பிளாட்பாரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
போரூர்:
ராமாபுரம், செந்தமிழ்நகர் வேம்புலி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். பெயிண்டர். இவரது மனைவி லோகநாயகி.
இவர்களது மகன் சதீஷ் (வயது21). கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார். மகள் சங்கீதா மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சக்திவேலுவுக்கும் அவரது மகன் சதீசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. குடும்பத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் இருந்தபோது சக்தி வேல்-சதீஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் லோகநாயகியும், மகள் சங்கீதாவும் சமாதானப்படுத்தி விட்டு அனைவரும் அறையில் தூங்கினர்.
ஆனால் சக்திவேல், மகன் சதீஷ் மீது தொடர்ந்து கோபத்தில் இருந்தார். அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதிகாலை 3 மணியளவில் எழுந்த சக்திவேல் திடீரென வீட்டில் இருந்த கத்தியால் மகன் சதீசை சரமாரியாக குத்தினார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த லோகநாயகியும், சங்கீதாவும் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் அவர்கள் சக்தி வேலை தடுக்க முயன்றனர்.
இதில் சங்கீதா, லோகநாயகிக்கும் கத்தி வெட்டு விழுந்தது. இதற்குள் பலத்த காயம் அடைந்த சதீஷ், தாய், தங்கையின் கண் முன்னாலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே சக்திவேலை, சங்கீதாவும், லோகநாயகியும் மடக்கி பிடித்து வீட்டின் உள்ளேயே வைத்து பூட்டி சிறை வைத்தனர். இதுபற்றி ராயலாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையாளி சக்தி வேலை கைது செய்தனர். சதீசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. சதீசின் நடத்தையில் சந்தேகப்பட்டு சக்திவேல் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், வினாயகா நகர், 4-வது தெருவில் வசித்து வருபவர் அலெக்ஸ். என்ஜினீயர். மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது 5 வயது மகள் மதிவானிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அலெக்சும், அவரது மனைவியும் ஆஸ்பத்திரியில் இருந்து மகளை கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு உடல் நலம் தேறிய மகளை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
பீரோவில் இருந்த 70 பவுன் நகை, வெள்ளிப் பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை-பொருட்களை சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலில் மாறி மாறி பேசுவது இளம் தலைமுறையினரிடம் அரசியல்வாதிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும். ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பே தீவிரமாக யோசித்து செய்ய வேண்டும்.
கடந்த 10 தினங்களாக தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இப்போது குறை சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல. சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்ததையும், விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் எந்தவொரு கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடுவதில்லை. நாட்டின் பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் கண்டிப்பாக பாடவேண்டும். இதை எல்லாம் செய்யாமல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதும், விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு என்று கூறுவதும் தேர்தல் நேரத்தில் செய்யும் தில்லுமுல்லு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார். #KSAlagiri #Premalatha
ராமாபுரம் நடேசன் நகரை சேர்ந்தவர் கணேசன் (73). கால் ஊனமுற்ற இவர் தனது தம்பியுடன் வாழ்ந்து வந்தார். இவரை, அவருடைய தம்பி மனைவி கோபத்தில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கணேசன் நேற்று இரவு ஆட்டோவில் கத்திப்பாரா சுரங்கப்பாதை பகுதிக்கு சென்றார். அங்கு நள்ளிரவில் ஒரு பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா, ஏட்டு மலையரசன் ஆகியோர், கணேசன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி இன்று காலை கணேசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
மயிலாப்பூரை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (24). இவர் கத்திப்பாராவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
பல மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை துடைத்து சுத்தம் செய்யும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார். 10-வது மாடியில் உள்ள வெளிப்புற கண்ணாடிகளை துடைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பாதுகாப்புக்காக கயிற்றுடன் கட்டி இருந்த இடுப்பு பெல்ட் திடீர் என்று கழன்றது. இதனால் ஜான்பீட்டர் 10-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை இலங்கை, சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் இருந்து வந்த விமானங்களில் பயணம் செய்தவர்களிடம் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தங்கம் கடத்தி வந்த 4 பெண்கள் உள்பட 20 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.37 லட்சம் ஆகும். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளிடம் சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் உள்ளாடையில் மறைத்து அமெரிக்கா, யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
காஞ்சிபுரம்,:
காஞ்சிபுரம் அடுத்த தாட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (வயது30).
இவர் நேற்று இரவு காஞ்சிபுரம் அருகே பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த மர்ம கும்பல் அவ்வழியே சென்றவர்களை மிரட்டி தாக்கினர்.
இதனை மதுசூதனன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மதுசூதனை சரமாரியா வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மதுசூதனனை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மதுசூதனனை வெட்டி கொலை செய்தவர்கள் தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
மைதானத்தில் மது அருந்தும் வாலிபர்கள் அவ்வழியே செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரங்களில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






