என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    என்னிடம் இன்றைக்கு பொறுப்பை கொடுத்தால், மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன் என டி.ஆர்.பாலு சவால் விடுத்துள்ளார். #TRBaalu #DMK
    தாம்பரம் :

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

    1 லிட்டர் பெட்ரோல் ரூ.74.75-க்கு விற்கப்படுகிறது. இது நியாயமான விலை கிடையாது என்று நான் சொல்கிறேன். காரணம் நான், 1996-ல் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தேன்.

    இன்றைக்கு என்னிடம் அந்த பொறுப்பை கொடுங்கள். நான் நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன். மோடி எங்கெங்கோ சென்று சவால் விடுகிறார்.

    நான் சவால் விடுகிறேன். 40 ரூபாய்க்கு நான் பெட்ரோலை கொடுக்கிறேன். அப்படி செய்தால் பா.ஜனதாவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. பா.ஜனதாவினரால் அது முடியுமா?.

    இவ்வாறு அவர் பேசினார். #TRBaalu #DMK
    நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க. வானத்தில் கோட்டை கட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். #TamilisaiSoundararajan
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி கொண்டு சென்றேன். போட்டியிடுவோர் பெயர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டது. பா.ஜனதா மத்திய தலைமை தேர்தல் குழு பெயர் பட்டியலை இன்று வெளியிடும். அதில் பெண் வேட்பாளர் பெயரும் இடம் பெறும்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றிக் கூட்டணி. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பெற்றி பெறாது. இதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேறாத வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு ரெயிலில் இலவச பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்க வேண்டியதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்படி கொடுக்க முடியும்.



    ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தி.மு.க.வும், மத்திய காங்கிரஸ் அரசும் என்ன செய்தன. அதை தி.மு.க. தீர்க்கும் என்பது வெற்று வாக்குறுதி. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போது அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது மத்திய பா.ஜனதா அரசு. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க. வானத்தில் கோட்டை கட்டுகிறது.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவோம் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு தான் நிறைவேற்ற முடியும். எனவே அ.தி.மு.க.வின் வாக்குறுதிகள் நிறைவேறும்.

    காங்கிரஸ் நீண்ட காலமாக ஆட்சி செய்தது. 1971-ம் ஆண்டிலேயே வறுமையை ஒழிக்கப்போவதாக இந்திரா காந்தி கூறினார். ஆனால் அவர்கள் ஆட்சியை விட்டு போகும் வரை வறுமையை ஒழிக்கவில்லை.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தி.மு.க. விமர்சிக்கிறது. ஆனால், இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    எனவே, தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #BabyBeheaded
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த செவிலியர், அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய அவர், சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்துள்ளார்.

    குழந்தையின் தலை திரும்பியதும், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது. உடல் தாயின் கருப்பையில் சிக்கிக்கொண்டது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #BabyBeheaded

    பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு. அவரது மறைவு காரணமாக பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

    நாளைய தினம் நடைபெறும் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்பின்பு வேட்பாளர்கள் பட்டியல் நாளைய தினமே வெளியிடப்படும்.

    காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தோல்வி கூட்டணி. எங்கள் பிரச்சாரம் மக்களை நேரில் சந்திக்கும் பிரசாரமாக இருக்கும்.

    சவுகிதார் என்றால் மக்களின் காவலன் என்று அர்த்தம் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காக இந்த பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே பிரதமர் மோடி மக்களின் காவலன், மக்களுக்கு சேவை செய்பவர்.

    தூத்துக்குடியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள்.கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன். கட்சியின் விருப்பம் தான் என் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

    சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த ரஷீத்கான் (28) என்ற பயணியிடம் சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது சூட்கேசில் சோதனை நடத்தினார்கள். அதில் 2 கிலோ 50 கிராம் தங்கநகைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது என்ற பயணியின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் உள்ளாடையில் 150 கிராம் தங்க கட்டியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

    அதே விமானம் அதிகாலை 4.15 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யவந்த சென்னையை சேர்ந்த ஆஷிப்கான் (38) என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவரிடம் அமெரிக்க டாலர்கள் கட்டுக்கட்டாக இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும். அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது ரியாஸ் (வயது 35), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.

    திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இருவரும் மன வருத்தத்தில் இருந்தனர். ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் 2 பேரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் படுக்கை அறையில் இருந்து கரும்புகையும், அலறல் சத்தமும் கேட்டது.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு எரிந்த தீயை அணைத்தனர். அப்போது முகமது ரியாசும், தமிழ்ச்செல்வியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர்கள் தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது. அவர்களின் இந்த முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்த 2 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய அந்தமான், திருச்சி, டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது. #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய அந்தமான், திருச்சி, டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

    இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். பின்னர் அவர்கள் மாற்று விமானத்தில் தாமதமாக புறப்பட்டு சென்றனர். #ChennaiAirport
    காஞ்சிபுரத்தில் சோமஸ்கந்தர் சிலை சீரமைப்பு பணியில் பொன்மாணிக்கவேல் தலைமையில் 30 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது.

    இந்த சிலை செய்ததில் தங்கம் முறைகேடுகள் நடந்ததாக பக்தர்கள் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலையினை ஆய்வு செய்து அதில் கடுகளவு தங்கம் கூட கலக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

    அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ விழா தொடங்கியுள்ளது. இதில் பழைய சிலையினை வைத்து வீதி உலா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    ஆனால் விழாவையொட்டி நேற்று சுவாமி திருவீதி உலா வரவில்லை. இதனால் பழைய சிலையினை சீரமைக்க அறநிலையத்துறையினர் தாமதம் செய்வதாக பக்தர்கள் கோவிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மாமல்லபுரத்தில் இருந்து ஸ்தபதி குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பக்தர்கள் முன்னிலையில் பழைய சோமஸ்கந்தர் சிலையை சீரமைத்தனர். ஏற்கனவே சிலைக்கு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்து இருந்தது.

    நேற்று காலை கோவிலுக்கு வந்த பொன்.மாணிக்கவேல் சிலை சீரமைப்பு பணியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது பழைய சிலையினை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாளை (இன்று) முதல் பழைய சிலை வீதி உலா நடைபெறும்.

    ஒரு ஏ.டி.எஸ்.பி. மற்றும் 30 பேர் கொண்ட எனது தலைமையிலான குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்” என்றார்.

    இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் கூறும்போது, “கோர்ட் உத்தரவுப்படி முறையாக சிலையினை சீரமைக்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது” என்றார்.

    கோவில் பிரம்மோற்சவ விழாவின்போது சுவாமிகள் நகரில் உள்ள 4 ராஜவீதிகள் வழியாக வலம் வருவது வழக்கம். 3-ம் நாள் திருவிழாவில் நேற்று மட்டும் உற்சவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் எழுந்தருள்வார். ஆனால் 3ம் நாள் திருவிழாவான நேற்று சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு சுவாமி வராததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான 1.4 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை உள்நாட்டு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    சென்னை பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது கைப்பையை சோதனையிட்டனர்.

    அப்போது அதில் 1.4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.46 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது.

    அந்த விமானம் ஏற்கனவே இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த பன்னாட்டு விமானம் ஆகும்.

    அதில் இலங்கையில் இருந்து வந்த பயணி தனது இருக்கைக்கு அடியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த விமானம் சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு உள்நாட்டு விமானமாக சென்றது.

    பின்னர் அங்கிருந்து உள்நாட்டு விமானமாக சென்னை வந்தது. அதே இருக்கையை முன்பதிவு செய்த அந்த பயணி சென்னை விமானத்தில் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது சிக்கினார்.

    அவரிடம் விசாரித்த போது, “பன்னாட்டு விமானங்களில் சோதனை கெடுபிடி அதிகம் இருக்கும். உள்நாட்டு விமானங்களில் கெடுபிடி அதிகம் இருக்காது. எனவே இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து பின்னர் அது உள்நாட்டு விமானமாக மாற்றப்படும் வரை காத்திருந்து தங்கத்தை கடத்தினோம்” என்றார். இலங்கையில் இருந்து கடத்தி வந்தது யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுராந்தகத்தில் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை தீர்க்க கோரி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வெளியூரிலிருந்து வரும் பொருட்களை இறக்குவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் பொருட்களை தாங்களே இறக்கி கொள்கிறோம் என்று கூலித் தொழிலாளர்களிடம் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

    நேற்று காலை ஒரு மளிகை கடையில் எண்ணெய் பாக்கெட்டுகளை இறக்க முயன்றபோது ஒரு வியாபாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது தொழிலாளர்கள் பொருட்களை பறித்து தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை தீர்க்க கோரி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    செங்கல்பட்டு அருகே தங்கையுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ஆலம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9-ந் தேதி இரவு வீட்டு மாடியில் இருந்து சிவகுமார் கீழே விழுந்து கிடந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மது போதையில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சிவகுமார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனையில் சிவகுமார் வி‌ஷம் கொடுத்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிவகுமாரின் மனைவி சந்திராவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும், அதே பகுதியில் வசிக்கும் தங்கை மாரியம்மாளும் சேர்ந்து சிவகுமாருக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக தெரிவித்தார்.

    கொலை குறித்து சந்திரா போலீசில் கூறும்போது, “கணவர் சிவகுமார் அடிக்கடி தங்கை மாரியம்மாளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    எனவே கணவர் சிவகுமாரை தீர்த்து கட்ட நாங்கள் முடிவு செய்தோம். வழக்கமாக சிவகுமார் வீட்டு மாடியில் மது குடிப்பது வழக்கம். கடந்த 9-ந்தேதி இரவு அவர் வாங்கி வைத்திருந்த மதுவில் வி‌ஷத்தை கலந்து வைத்தோம். இதனை தெரியாமல் அவர் குடித்து மயங்கினார்.

    உடனே நானும், தங்கை மாரியம்மாளும் சேர்ந்து கணவர் சிவகுமாரின் கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் கொலையை மறைப்பதற்காக வீட்டு மாடியில் இருந்து உடலை கீழே தள்ளிவிட்டோம்.

    அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் மதுபோதையில் சிவகுமார் கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறி நாடகமாடினோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குரோம்பேட்டையில் ரெயில் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தினேஷ்செல்வம். இவர் தாம்பரத்தில் தங்கி இருந்து சிறுசேரியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை குரோம்பேட்டை- பல்லாவரம் இடையே தண்டவாளத்தில் தினேஷ்செல்வம் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றினர். தினேஷ்செல்வம் ரெயில் மோதி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×