என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மாமல்லபுரம் அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் மனைவி விவாகரத்து கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடியை சேர்ந்தவர் முருகன் (வயது 36). சிற்பதொழில் செய்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபம் அடைந்த தீபா கடந்த மாதம் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் முருகன் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே விவாகரத்து கேட்டு தீபா வக்கீல் நோட்டீசும் அனுப்பியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் அதிமுக கட்சியை அடமானம் வைத்தால் கூட பரவாயில்லை முதல்வர் பதிவியையே அடமானம் வைத்துள்ளார் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin
    திருப்போரூர்:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருப்போரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இங்கு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ளது. கூடவே ஆட்சி கொடுமையும் உள்ளது. ஆட்சி கொடுமையை ஒரு வார காலத்தில் உங்களிடமிருந்து காப்பாற்றப் போகிறோம். வெயில் கொடுமையில் உங்களை காக்க வைக்க விரும்பவில்லை.

    பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மக்களை பற்றி கவலைப்படவில்லை. பதவி ஒன்றே இருவரின் குறிக்கோள். பதவியில் நீடிக்க, பதவியை காப்பாற்றிக் கொள்ள இருவரும் சுயநலமாக செயல்படுகிறார்கள். ஒரே சுயநலமாக உள்ள இருவரும் கூட்டு சேர்ந்துள்ளார்கள்.

    ஊழல்வாதிகளுடன் தான் மோடி கூட்டுவைத்துள்ளார். மோடி மக்களிடத்தில் ஊழல் இல்லாத ஆட்சி தருவேன் என்று கூறினார். ஆனால் இன்று ஊழலோடு ஊழல் கூட்டணி அமைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு துறையில் ஹெலிகாப்டர் வழங்கியதில் ஊழல் இன்று சந்தி சிரிக்கிறது.

    மக்களை ஏமாற்றும் வித்தையை மோடி தெரிந்து வைத்துள்ளார். ஏமாற்றும் வித்தையை தொடர்ந்து செய்து வருகிறார்.

    தர்மம், அதர்மம் என எடப்பாடி பேசி வருகிறார். தர்மத்தை பற்றி பேச அவருக்கு என்ன அருகதை உள்ளது. அதைபற்றி எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவருக்குமே தெரியும்.



    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்துள்ளது. இதிலிருந்து ஜெயலலிதா கைரேகை வைக்கவில்லை. அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பது உண்மையாகியிருக்கிறது. என்ன நடந்திருக்கும் என எல்லாரும் யூகிக்க முடியும்.

    அமித்ஷா, மோடியிடம் அ.தி.மு.க. கட்சியை அடமானம் வைத்தால் கூட பரவாயில்லை. முதல்வர் பதிவியை அடமானம் வைத்துள்ளனர். அதை கண்டிப்பாக மீட்க முடியாது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி அதற்குரிய தண்டனையை வாங்கி தருவோம்.

    கலைஞரின் வழியில் வந்தவன் நான். அவர் காட்டிய பாதையில் செல்கிறேன். இந்த வெற்றிக்கணியை பறித்து அவருடைய நினைவிடத்தில் வைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin
    நயன்தாரா குறித்து பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #RadhaRavi #DMK #KamalHaasan
    ஆலந்தூர்:

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி விட்டதாக உங்கள் மீது வரும் விமர்சனங்கள்?

    பதில்:- நான் பல்லக்கில் பவனி வர விரும்பவில்லை. பல்லக்குக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். இதுவே என் வேலை. நான் பின்வாங்கி விட்டதாக வரும் விமர்சனங்கள் வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். மக்களை நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்க உள்ளேன்.

    ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால் தொகுதி நலன் கருதி சுயநலத்துடன் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    கேள்வி-: திடீர் மம்தா சந்திப்பு பயணம் ஏன்?

    பதில்:- இந்த பயணம் அரசியல் ரீதியானது. மம்தாவை சந்தித்து திரும்பிய பின்னர் காரணத்தை சொல்கிறேன்.


    கேள்வி:- நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி இருக்கிறதே?

    பதில்:- நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள்.

    பதில்:- மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான் தேர்தல் பிரசாரத்தில் சொல்லி இருக்கிறோம். சாத்தியமில்லாத பெரும் கனவுகளை மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை.

    தேர்தல் பிரசாரம் செய்வதற்கு முன் சாத்தியமா என்பதை வல்லுநர்களுடன் பேசி நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முன் வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #DMK #KamalHaasan
    சுங்குவார்சத்திரம் அருகே பஸ்-லாரி மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் கனரக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு கம்பெனி பஸ் சுங்குவார்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது சுங்குவார் சத்திரம் கூட்டு சாலையில் சென்னை நோக்கி வந்த லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடாது என்று தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    ஆலந்தூர் :

    சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை தே.மு.தி.க. பின்பற்றும். 4 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதால் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை.

    பல தேர்தல்களை பார்த்து விட்டோம். தேர்தல் அறிக்கைகளை பார்த்து விட்டோம். ஆனால் உறுதியாக இந்த முறை கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுமாறு மத்திய அரசிடம் தே.மு.தி.க. வலியுறுத்தும். தமிழகத்திற்கு தேவையானதை உறுதியாக எடுத்துரைப்போம். தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பிரதமர், முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.



    மத்திய மந்திரிசபையில் தே.மு.தி.க. சேருவது பற்றி யோசிக்கவில்லை. தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும். யார் யார் வெற்றி பெற உள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் தான் மந்திரிசபையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்.

    தூத்துக்குடியில் 2 பெண்கள் போட்டியிடுவது ஆரோக்கியமானது. வரவேற்கக்கூடியது. அரசியலுக்கு பெண்கள் அதிகமாக வர வேண்டும். இதில் யார் பலமானவர்? என்று சொல்ல முடியாது. 2 பேரும் நல்ல வேட்பாளர்கள். உழைக்கக்கூடியவர்கள். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். இதில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பது இனி தான் தெரியும்.

    தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். விஜயகாந்த் முகத்தை காட்டினாலே போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். வருகிற 27-ந் தேதி முதல் 40 தொகுதிகளிலும் நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    ஓடும் பஸ்சில் புதுமண தம்பதியிடம் 22 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வியாசர்பாடியை சேர்ந்தவர் சரவணன் (28) வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தில்லி ராணி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    புதுமண தம்பதிகளான இவர்கள் ஆரணியில் உள்ள தில்லி ராணியின் தாய் வீட்டிற்கு செல்ல இன்று கோயம்பேடு வந்தனர். காலை 7.30 மணியளவில் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர்.

    பஸ் புறப்பட்டு நெற்குன்றம் அருகே வந்தது. அப்போது தங்களது தலைக்கு மேல் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது பெட்டிக்குள் வைத்திருந்த நகைப்பை காணவில்லை.

    அதில் 22 பவுன் தங்க நகைகள் இருந்தன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #OPS #MKStalin

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூர் பஸ் நிலையம் அருகே துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்  செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த மகா கூட்டணி. புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அர்ப்பணித்து சிறப்பான ஆட்சி நடத்தியதை யாரும் மறக்கமுடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம்வரை எடுத்துச்சென்று பல சட்டப் போராட்டங்களை நடத்தினார்.

    மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் இலங்கையில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் பேர் கை, கால்கள் மற்றும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கதியாயினர்.

    கருணாநிதியின் கபட நாடகத்தால் போர் நின்று விட்டதாக அறிந்து பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்த 40 ஆயிரம் குழந்தைகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க.

    அ.தி.மு.க.வின் 2011-16 ஆண்டு வரையிலான பொற்கால ஆட்சியில் விலையில்லா அரிசி, பசுமை வீடுகள், மற்றும் தொலை நோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனால் கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குடிசைவீடுகள் அற்ற நிலை உருவாகிறது.

    இதுவரை தமிழகத்தில் 16 லட்சம் குடிசைவீடுகள் கணக்கிடப்பட்டு 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 2023-க்குள் அம்மா எண்ணப்படி தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.

    இந்த இடைத்தேர்தல் எதனால் வந்தது கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு துரோகம் செய்தவர்கள்.

    ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார். அவர் டீக்கடையில் டீ குடிக்கிறார். நான் டீக் கடையே நடத்தியவன். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறை கலாச்சாரம், காலூன்றி கொடிகட்டிபறக்கும்.

    தமிழகத்தில் தீயசக்திகளை தலைதூக்க விடமாட்டோம். இது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. புரட்சித்தலைவியின் உழைப்பால் பல்வேறு சோதனைகள், பிரச்சனைகள் சதிகளை முறியடித்து இன்று ஒன்றரை கோடி பேர் உள்ள இயக்கமாக மாறி உள்ளது. இது எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #OPS #MKStalin

    சேலையூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம்  பொன்னியம்மன் நகர் 2-வது தெருவில் வசித்துவருபவர் ராம்குமார். குரோம்பேட்டையில் உள்ள வங்கியில்  ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுபா, இவரும் தாம்பரத்தில் உள்ள வங்கியில் ஊழியராக உள்ளார்.

    நேற்று காலை கணவன் - மனைவி  இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று விட்டனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெசன்ட் நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 75 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சோழிங்கநல்லூர்:

    பெசன்ட் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோவில் வழியாக வந்த வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் 75 பட்டுப்புடவைகள், 95 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. அதற்கு ஆவணங்கள் இல்லாததால் புடவைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு கொடுக்க சென்றதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஆவணங்கள் கொண்டு வந்து மீண்டும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர். #LSPolls

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது தொடர்பாக மருத்துவமனை நர்சுகள் மற்றும் தாயிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். #BabyBeheaded
    செங்கல்பட்டு:

    ஆவடியை அடுத்த அயபாக்கத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பொம்மி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    நேற்று அதிகாலை பொம்மிக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பணியில் இல்லாததால் நர்சுகளே பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது குழந்தையின் தலைமட்டும் துண்டாகி தனியாக வந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தையின் உடலை டாக்டர்கள் அகற்றினர்.

    பொம்மிக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகளே சிகிச்சை அளித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் பொம்மியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலரின் உத்தரவின் படி 5 பேர்கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் தேசிய நல்வாழ்வு குழுமத்தை சேர்ந்த குமுதா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனி, கூடுதல் இயக்குனர் டாக்டர் தாமரைச்செல்வி, செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் டாக்டர் உஷா உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் தங்களது விசாரணையை உடனடியாக தொடங்கினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொம்மியிடம் இது பற்றி கேட்டறிந்தனர்.

    அப்போது இதற்கு முன்பு எடுக்கப்பட்ட குழந்தையின் எக்ஸ்ரே படங்கள், அதன் வளர்ச்சி பற்றிய ஆவணங்களை சேகரித்தனர். இன்று காலை கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதில் பொம்மிக்கு பிரசவம் பார்த்த நர்சுகள் யார்? யார்? டாக்டர் பணியில் இருந்தாரா? என்பது பற்றிய விபரங்கள் கேட்டு அறிகிறார்கள்.

    இதற்கிடையே பொம்மியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரசவத்தில் குழந்தையின் சாவை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். போலீசாரும் தனியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இறந்துபோன குழந்தையின் உடலும், தலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் 5 பேர் குழு கொடுக்கும் அறிக்கையின்படி பொம்மிக்கு பிரசவம் பார்த்தவர்கள் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls
    மதுராந்தகம்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்ல தேர்தல் கமி‌ஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய ஆவணங்கள் அதில் இருந்த ஊழியர்களிடம் இல்லை.

    இதையடுத்து ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை செய்யூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    சென்னையில் இருந்து பாண்டிச்சேரி ஏ.டி.எம். பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஏ.டி.எம்.க்கு பணம் நிரப்பும் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். #LSPolls
    தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே கழிவுநீர் தொட்டியில் பெண்ணை கொன்று வீசிய காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள கோவிலஞ்சேரியை சேர்ந்த குணசேகரன் வீட்டில் வேலை பார்த்து வந்தவர் தேவி.

    வேலூரை சேர்ந்த தேவி, கடந்த ஜனவரி மாதம் பொன்னம்பலம் என்பவர் மூலம் குணசேகரன் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந்தேதி தேவியை பார்ப்பதற்காக வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவரை தனது கணவர் என்று குணசேகரிடம் தேவி தெரிவித்தார். இதையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். வீட்டு வேலையையும், மாடுகளை பராமரிப்பதையும் அவர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி இருவரும் திடீர் என்று மாயமானார்கள். கணவன்- மனைவி என்பதால் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்று குணசேகரன் கருதினார். எனவே இதுபற்றி போலீசில் புகார் செய்யவில்லை.

    இந்த நிலையில் இருவரும் தங்கியிருந்த வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலையூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில தினங்களுக்கு முன்பு மாயமான தேவி கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், தேவியுடன் தங்கிய வாலிபர்தான், இந்த பெண்ணை கொலை செய்து பிணத்தை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது. தேவியுடன் தங்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இதில் தேவியை கொலை செய்த வாலிபர் அவருடைய காதலர் என்று தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    ×