என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற செல்கிறேன்.
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அழுத்தமான அரசு வேண்டும். இதனை கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் மக்களை சந்திக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
தீர்ப்பு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது என்பது நல்ல விஷயம் எனக்கு கூட ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுப்பது தவறு.
நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கென்று முழுமையான தனி காவல் நிலையம் செயல்படும். ஏற்கனவே உழவர் சந்தை என்று ஒன்று உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. மற்ற கட்சிகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.அதைவிட்டுவிட மாட்டோம்.
தேர்தல் நேரத்தில் பி.எம். மோடி படம் வெளியிட காங்கிரஸ் தடை கேட்டுள்ளது. இது சரியானது தான். தேர்தலில் அந்த கட்சிக்கு இது விளம்பரம் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan

தாம்பரம்:
சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி கண்ணபிரான் தெருவில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாரி (வயது22), முகமது அவரித் (23), அஜய் (23) ஆகிய தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்த கழிவறையில் அடைப்பு ஏற்பட்டது. அன்சாரி, முகமது அவரித், அஜய் ஆகிய 3 பேரும் நேற்று இரவு 8 மணிக்கு அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டி சுவர்இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.
இதில் அன்சாரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். முகமது அவரித், அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே முகமது அபரித் பலியானார்.
அஜய் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
பாராளுமன்ற தேர்தல் களம் பரபரக்கும் நேரத்தில் நடந்த இந்த படுகொலைகள் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 2 கொலைகள் நடந்து உள்ளன.
அனைத்து கொலைகளும் நன்கு திட்டமிடப்பட்டு எதிரிகளை பின்தொடர்ந்து பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் ரவுடி பாஸ்கர். கடந்த 24-ந் தேதி அவர் ஆரம்பாக்கத்தில் உள்ள மதுக்கடையில் நின்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புவனேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கணவர் கந்தன் கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கூலிப்படையை ஏவி பாஸ்கரை தீர்த்து கட்டி இருந்தார்.
இதேபோல் கடந்த 24-ந் தேதி மறைமலைநகரை அடுத்த கோலாபுரத்தில் முருகன் என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரை மனைவி மஞ்சுளா, கள்ளக்காதலன் சிவா ஆகியோர் கொலை செய்து இருந்தனர்.
அதே நாளில் செங்கல்பட்டு அருகே உள்ள மேலரி பாக்கம் ஏரியில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். நண்பரின் காதலை சேர்த்து திருமணம் செய்து வைத்த தகராறில் இந்த கொலை நடந்து இருந்தது.
இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் உத்திரமேரூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கடந்த 25-ந் தேதி மறைமலைநகரை அடுத்த மேலகோட்டையூரில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடந்து வருகிறது.
மறுநாள் (26-ந் தேதி) கூடுவாஞ்சேரி நங்கூரம் நகரை சேர்ந்த குட்டா என்கிற வினோத் தீர்த்துக்கட்டப்பட்டார்.
நேற்று முன்தினம் மதியம் (27-ந் தேதி) திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த ரவுடி கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி லோடு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு அரும்பாக்கத்துக்கு வந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த கும்பல் பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஓடஓட விரட்டி கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் சிக்கி இருக்கிறார்கள்.
நேற்று காலை (28-ந் தேதி) பாடியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் பாண்டியனை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் கொலை சம்பவங்களால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குற்றச் செயல்கள் நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பதை விட்டு கூலிப் படைகளாக செயல்படுபவர்களை அழிக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஒவ்வொரு குற்றவாளிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறோம். ஜெயிலில் இருந்துவெளி வரும் ரவுடிகள் மற்றும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அனைவரும் உளவுப் பிரிவு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குற்றங்களை தடுக்க கூலிப்படையினர் மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பை விவேகானந்த நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). பிரபல ரவுடி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு பாஸ்கர் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் ரவுடி பாஸ்கர் கொலையில் தொடர்புடைய சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புவனாவை போலீசார் கைது செய்தனர். கணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கூலிப்படையை ஏவி பாஸ்கரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.
கைதான புவனாவின் கணவர் கந்தன். கேபிள் ஆபரேட்டரான அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற போது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் ரவுடி பாஸ்கருக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பழிக்கு பழிவாங்கும் விதமாக புவனா கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கொலையுண்ட பாஸ்கர் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி ‘பங்க்’ குமாரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
கடந்த 2006-ம் ஆண்டு ‘பங்க்’ குமாரை போலீசார் சுட்டு கொன்றனர். இதனையடுத்து அவரது கூட்டாளிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
படப்பையில் தஞ்சம் அடைந்த பாஸ்கர் அங்கு ரவுடியாக சுற்றி வந்துள்ளார். அப்போது அவர் ஏற்கனவே செய்த கொலைக்கு பழிக்குப் பழியாக தீர்த்துக்கட்டப்பட்டு விட்டார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று காலை காரில் வந்த போது மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அச்சிறுப்பாக்கம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் இதுபற்றி சுங்கச்சாவடி ஊழியர் விநாயகமூர்த்தி என்பவர் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் மீது கொலை மிரட்டல், ஆபாச பேச்சு, காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் வேல்முருகனின் கார் டிரைவர் பாஸ்கரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். #Velmurugan
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்போரூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு நலம்பெற உறுதியான, ஆற்றல்மிக்க பிரதமர் வேண்டும் அதற்கு மோடி தான் தகுதியானவர். சதிக்காரர்கள் இந்தியநாட்டை அழிக்க நினைத்தபோது சதியை முறியடித்த திறமையான பிரதமர் மோடி.
எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும் என்று நினைத்த அம்மா அவர்களின் கனவு நிறைவேற வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல பல நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் செயல்படுத்தியுள்ளார்.
ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்த ஒரே அரசு இது. ஏழை, எளியோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தி.மு.க- வினர் நீதிமன்றம் சென்றனர். தடையாணை கொடுக்கவில்லை அதற்குள் தேர்தல் வந்துவிட்டது.
தேர்தல் முடிந்தவுடன் இந்த பணம் வழங்கப்படும். அதேபோல் தேசியஊரக வேலை திட்டத்தில் 100 நாட்களுக்கு பதில் 200 நாட்கள் வேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Edappadipalaniswami
ஆலந்தூர்:
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில் அனுப்பியவரின் பெயர் இல்லை. அதில் கவர்னர் மாளிகையை குண்டு வைத்து தகர்ப்போம். உங்களை சுற்றிவரும் தமிழக அமைச்சர்களை சுட்டுக் கொல்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை பிரித்து பார்த்த கவர்னர் மாளிகை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு துணை கமிஷனர் சஷாங் சாய் இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தர விட்டார்.

இதனைதொடர்ந்து கிண்டி போலீசார் மிரட்டல் கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடிதத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட எதுவும் இடம் பெறாததால் அதனை எழுதியது யார் என்பது தெரியவில்லை.
இருப்பினும் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதுபற்றி கடிதத்தில் உள்ள முத்திரையை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி உதவி கமிஷனர் சுப்ராயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை பிடிக்காத நபர்தான் இந்த கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மிரட்டல் ஆசாமி பிடிபட்டால் தான் கடிதத்தின் முழு பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மிரட்டல் காரணமாக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிண்டி மற்றும் கோட்டூர்புரம் போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள காட்டரம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருங்காட்டுகோட்டை - காட்டரம்பாக்கம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்ன லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத்தை அடுத்த ஒரகடத்திதல் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு இரவு பணி முடித்த தொழிலாளர்கள் 15 பேர் ஒரு வேனில் காஞ்சிபுரம் புறப்பட்டனர். நள்ளிரவு 2 மணியளவில் இந்த வேன் காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக சென்ற லாரி ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் சேதம் அடைந்த வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் லாரி மோதியது.
இந்த விபத்தில், கார் டிரைவர் ரிஷாந்த், வேனில் பயணம் செய்த லோகேஷ் ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். வேனில் இருந்த 14 பேரும், காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
16 பேரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாலாஜாபாத் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் செல்வ பெருமாள் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவருக்கு 2 மகன்கள் இருந்தனர்.
இன்று காலை அவர் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த லாரியை வரவழைத்து இருந்தார். தொழிலாளிகள் பாதி அளவு கழிவுகளை எடுத்துக் கொண்டு லாரியை எடுத்துச் சென்றனர்.
எவ்வளவு கழிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பதற்காக கிருஷ்ண மூர்த்தி தொட்டியை எட்டிப் பார்த்தார். அப்போது அவர் மீது விஷவாயு தாக்கியது. மயக்கம் அடைந்த அவர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை கண்ட அவரது 2 மகன்களும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர்.
அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசித்த 3 ஆண்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கிருஷ்ண மூர்த்தியையும், அவரது 2 மகன்களையும் மீட்க முயன்றனர். அவர்களும் விஷவாயு தாக்கி பலியானார்கள்.
அடுத்தடுத்து 6 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas #ToxicGas
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை கார் மூலம் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். டிரைவர் பாஸ்கர் காரை ஓட்டினார்.
மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியை கார் கடந்தபோது அங்கிருந்த ஊழியர்களுக்கும், டிரைவர் பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து வேல்முருகன் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.






