search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Somaskandar Idol"

    காஞ்சிபுரத்தில் சோமஸ்கந்தர் சிலை சீரமைப்பு பணியில் பொன்மாணிக்கவேல் தலைமையில் 30 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது.

    இந்த சிலை செய்ததில் தங்கம் முறைகேடுகள் நடந்ததாக பக்தர்கள் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலையினை ஆய்வு செய்து அதில் கடுகளவு தங்கம் கூட கலக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

    அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ விழா தொடங்கியுள்ளது. இதில் பழைய சிலையினை வைத்து வீதி உலா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    ஆனால் விழாவையொட்டி நேற்று சுவாமி திருவீதி உலா வரவில்லை. இதனால் பழைய சிலையினை சீரமைக்க அறநிலையத்துறையினர் தாமதம் செய்வதாக பக்தர்கள் கோவிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மாமல்லபுரத்தில் இருந்து ஸ்தபதி குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பக்தர்கள் முன்னிலையில் பழைய சோமஸ்கந்தர் சிலையை சீரமைத்தனர். ஏற்கனவே சிலைக்கு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்து இருந்தது.

    நேற்று காலை கோவிலுக்கு வந்த பொன்.மாணிக்கவேல் சிலை சீரமைப்பு பணியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது பழைய சிலையினை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாளை (இன்று) முதல் பழைய சிலை வீதி உலா நடைபெறும்.

    ஒரு ஏ.டி.எஸ்.பி. மற்றும் 30 பேர் கொண்ட எனது தலைமையிலான குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்” என்றார்.

    இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் கூறும்போது, “கோர்ட் உத்தரவுப்படி முறையாக சிலையினை சீரமைக்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது” என்றார்.

    கோவில் பிரம்மோற்சவ விழாவின்போது சுவாமிகள் நகரில் உள்ள 4 ராஜவீதிகள் வழியாக வலம் வருவது வழக்கம். 3-ம் நாள் திருவிழாவில் நேற்று மட்டும் உற்சவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் எழுந்தருள்வார். ஆனால் 3ம் நாள் திருவிழாவான நேற்று சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு சுவாமி வராததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    ×