search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறைக்கு வரும்  சுற்றுலா பயணிகள் தீவிர கண்காணிப்பு
    X

    வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர கண்காணிப்பு

    • சுற்றுலா போர்வையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயல்களால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. நடுவில் வால்பாறை நகராட்சி 217 ச.கிமீட்டர் பரப்பளவில் உள்ளது. வால்பாறை நகரம் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    வால்பாறையில் நிலவும் சிதோஷ்ண நிலை மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே மாலை 6 மணிக்கு பிறகு சமவெளி பகுதிகளில் இருந்து பலரும் வால்பாறைக்கு சுற்றுலா வருகின்றனர். அப்படி வருபவர்களில் பலரும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாவதாகவும் தகவல் வந்தது.

    இதையடுத்து சமூக விரோத செயல்களை தடுக்கவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாகாமல் தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள்.

    மாலை 6 மணிக்கு மேல் வருபவர்களிடம் அறை புக் செய்துள்ளீர்களா? என்ன காரணத்திற்காக வருகிறீர்கள்? எனவும் விசாரிக்கின்றனர். மேலும் அவர்கள் வைத்திருக்கும் உடைமைகளையும் சோதனை செய்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-வால்பாறைக்கு இரவு நேரங்களில் சட்டவிரோத சுற்றுலா, சாலையோரம் மது அருந்துவது, நள்ளிரவில் போதைப்பொருள் கடத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. நேற்று கூட சுற்றுலா பயணிகள் 2 பேரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இவற்றை நெறிப்படுத்த வேண்டும். சுற்றுலாவை முன்வைத்து நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று கருதுகிறோம். இதனால் சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

    இதன் காரணமாக மாலை 6 மணிக்கு பிறகு வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகிறார்கள். உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறினால், அவர்கள் போனில் விசாரித்த பின்பே உள்ளே அனுமதித்து வருகிறோம். மற்றபடி வாகனங்கள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×