என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் பவானிசாகர் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதியில் 4 நபர்கள் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததை கண்டனர். வனத்துறையினரை கண்ட 4பேரும் துப்பாக்கியுடன் தப்பியோட முயற்சித்தனர். ஆனால் வனத்துறையினர் விரட்டி பிடித்தனர். பவானிசாகர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோபி கரட்டடிபாளையத்தை சேர்ந்த பிரபு(32), நல்லகவுண்டம் பாளையம் காஜாமைதீன், மொடச்சூரை சேர்ந்த பழனிச்சாமி(50), மில்மேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார்(53) என்பது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு பவானிசாகர் வனச்சரகர் ஜான்சன் தலைமையில் வனத்துறையினர் 4 பேரையும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 4 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வசூலிக்க துணை இயக்குநர் உத்தரவிட்டார்.
    அரசு பஸ்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் பழனி-அந்தியூர் அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
    அரச்சலூர்:

    சேலத்தில் இருந்து கொடைக்கானல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    பஸ்சை பழனிச்சாமி (வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ஆறுமுகம் (47) இருந்தார்.

    இதேபோல பழனியில் இருந்த அந்தியூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை சிவகாசி (36) என்பவர் ஓட்டி வந்தார். முருகேஷ் (45) கண்டக்டராக இருந்தார்.

    இன்று காலை 7.45 மணி அளவில் 2 பஸ்களும் அரச்சலூரை அடுத்த தலவுமலை அருகே உள்ள வெள்ளக்கவுண்டன்வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட பழனி- அந்தியூர் பஸ் டிரைவர் சிவகாசி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

    இருந்தபோதிலும் அந்த பஸ்சின் பின் பகுதியில் வலது புறத்தில் சேலம்- கொடைக்கானல் அரசு பஸ் மோதியது. இதனால் ரோட்டோரத்தில் இருந்த வேப்பமரத்தை நோக்கி பழனி-அந்தியூர் பஸ் சென்றது.

    அப்போதும் சுதாரித்துக் கொண்ட டிரைவர் வேப்ப மரத்தின் மீது பஸ் நேருக்கு நேர் பலமாக மோதாமல் இருக்க திருப்பினார். இருந்த போதிலும் பஸ்சின் பின் பகுதி வேப்ப மரத்தின் மீது மோதியது.

    இந்த விபத்தில் பழனி- அந்தியூர் பஸ்சின் பின் பகுதியும், சேலம்-கொடைக்கானல் பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. சேலம்-கொடைக்கானல் பஸ்சில் இருந்த பயணிகள் தப்பினர்.

    ஆனால் பழனி-அந்தியூர் பஸ்சின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.

    பலியானவர் பெயர் கவுசிக் (34). திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர். கார் டிரைவராக இருந்தார். அவருக்கு ஜேஸ்மின் (26) என்ற மனைவியும், அப்ரின் (8) என்ற மகளும், ஆஷிக் (6) என்ற மகனும் உள்ளனர்.

    தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியான கவுசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த தீபக் (27), பிரேம்குமார் (17), செந்தில் (43), குமாரசாமி (43), யுவராஜ் (24) உள்பட 6 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அரச்சலூர் பகுதியில் இன்று பரபரப்பு நிலவியது. #tamilnews
    அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்குதான் பெண் கொடுப்பாதாக காதலியின் பெற்றோர் கூறியதால் கோவிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி போலீசில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 26). ஐ.டி.ஐ. படிப்பு முடித்து விட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.

    ஈங்கூர் அருகே புலவனூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகள் பவித்ரா (23). ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார்.

    பவித்ராவும், விஸ்வநாதனும் தூரத்து உறவினர்கள் ஆவர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ராவின் பெற்றோரை சந்தித்து விஸ்வநாதன் பெண் கேட்டார்.

    அப்போது அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளைக்கு தான் பெண் கொடுப்பேன் என கூறி பவித்ராவின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை விஸ்வநாதனும், பவித்ராவும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வட்டமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிறகு பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் மணமக்களை விஸ்வநாதனின் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். #tamilnews
    ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வனப்பகுதி காடகநல்லிக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    காடகநல்லிக்கு பஸ் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தது.

    பசுவணாபுரம் அருகே ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ரோட்டோர பள்ளத்தில் பஸ் திடீரென கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா.. என அபாய குரலிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்தனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் ஊர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. படுகாயத்துடன் துடித்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    மயக்க மருந்து கொடுத்து மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நம்பியூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.

    மாணவி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்ற போது அங்கு உறவினர் ஒருவரின் மகனான செந்தில் என்பவர் மாணவிக்கு ஆப்பிள் ஜீஸ் கொடுத்தார். அப்போது அதில் மயக்க மருந்து கலந்ததால் மயங்கிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இந்நிலையில் மாணவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே நம்பியூர் மற்றும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற போது மாணவி கர்ப்பமாகி இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் வழக்குபதிவு செய்ய விசாரணை நடத்தினார். தலைமறைவான வாலிபர் செந்திலை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஈரோடு பவானி ஆற்றில் பிள்ளையாரை கரைக்க சென்றபோது இளைஞர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #GaneshChaturthi
    ஈரோடு:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாக, பூஜை செய்யப்பட்ட கணபதி சிலைகளை ஆற்றிலும், கடலிலும் கரைப்பது வழக்கம்.

    அதன்படி, திருப்பூர் மாவட்டம் மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்து வந்துள்ளனர். அப்போது சிலையை ஆற்றில் கரைக்கும்போது எதிர்ப்பாராத விதமாக 3 இளைஞர்கள் ஆற்றில் விழுந்தனர்.

    உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடவே, ஒருவர் மீட்கப்பட்டார். மீட்கப்படாத இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வ வழிபாட்டு விழாக்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. #GaneshChaturthi
    இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க மோடி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. மாநில மாநாட்டில் வைகோ பேசினார். #MDMK #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க. மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து உள்ளது. பல தேசிய இனங்களை கொண்ட நாடு. இந்த ஒருமைப்பாடு நிலைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மதவாத, சங்பரிவார இயக்கங்களின் கொட்டம் 2019-ம் ஆண்டுக்கு பிறகும் தொடருமானால் நாடு ஒருமைப்பாட்டுடன் நிலைக்குமா? என்பது கேள்விக்குறிதான். இதை சொல்கிற துணிச்சல் ம.தி.மு.க.வுக்கு உண்டு. இங்கே நீங்கள் இந்த மாநாட்டில் பார்க்கின்ற கூட்டம் தங்கள் கைக்காசுகளை போட்டு வந்திருக்கிறது. மிக நலிந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதுதான் எங்களது வலிமை. எங்களிடம் வாக்கு வங்கியான வலிமை குறைவுதான். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், வாக்குகளை விற்பனை செய்யாமல் லட்சியத்துடன் நாங்கள் வாழ்கிறோம்.



    1962-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி ராஜ்ய சபாவில் அறிஞர் அண்ணா பேசும்போது நான் இந்திய யூனியனில் உள்ள திராவிட நாட்டில் இருந்து வருகிறேன். திராவிடன் என்று என்னை அழைப்பதில் பெருமை கொள்கிறேன். திராவிடர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று கூறினார்.

    அப்போது அவர் பேச்சை முடித்த பின்பு, பாபு ஜெகஜீவன்ராம் அண்ணாவின் கையை பிடித்து நான் பீகாரில் இருந்து வந்திருக்கும் திராவிடன் என்று கேட்டார். தனி நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிய அறிஞர் அண்ணா, சீன போரின்போது அந்த கொள்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். அதை அவர் தெளிவாகவும் கூறி இருக்கிறார். அவர் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை 1967-ம் ஆண்டு ஏற்றபோது தாய்க்கு பெயர் வைத்ததுபோன்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டினார். சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கினார்.



    1978-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி ராஜ்யசபையில் எனது கன்னிப்பேச்சை மாநில சுயாட்சிக்காக வழங்கினேன். அந்த பேச்சின் முடிவில் என் லட்சியத்துக்காக நான் கொண்ட கட்சியின் கொள்கைக்காக உயிர் பிரிந்தாலும், உறுதியுடன் இருப்பேன். இந்த வாய்ப்பை தந்த கலைஞருக்கு நன்றியையும் தெரிவித்து பேசினேன்.

    பின்னர் கலைஞரை பார்க்க வந்தேன். அவர் என்னை காரில் அழைத்து சென்றபோது இங்கே சட்டமன்றத்தில் நான் இல்லாதபோது உன்னை பற்றி தவறாக பேசினார்கள். பாராளுமன்றத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக நீ பேசியதாக குற்றம் சாட்டினார்கள். உடனே பேராசிரியர் அன்பழகன் அதற்கு பதில்அளித்தார். நான் அந்த வேளையில் அவையில் இல்லை. இருந்திருந்தால் வேறுமாதிரியாக பேசியிருப்பேன், என்றார்.

    நீங்கள் இருந்தால் என்ன அண்ணா பேசியிருப்பீர்கள் என்று கேட்டேன். என் தம்பி மாநில சுயாட்சி வேண்டாமென்று கூறிஇருப்பான். ஆனால் தமிழ்நாட்டை தனி நாடாக கொடுங்கள் என்று கேட்டிருப்பான். அந்த அளவுக்கு என் மீது அன்பு வைத்திருந்தவர். 3 முறை என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர். அவரை சிறு துரும்புக்கூட தொட அனுமதிக்காமல் மெய்க்காப்பாளர் படையை உருவாக்கியவன் நான். அவரை உயிராக நேசித்தேன்.

    இந்துக்கள் தேசம், இந்துக்களின் நாடு, முஸ்லிம்களை வெளியேறுங்கள் என்று சொல்லும் ஆதிக்க சக்திகள், சங்பரிவார சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும். மதச்சார்பின்மை அழிந்து விட்டது, தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. மக்களுக்காக போராட வேண்டிய எடுபிடி அரசு ஊழல் அரசாக உள்ளது. அண்ணாவின் பெயரை சொல்லக்கூட தகுதி இல்லாத அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வின் எடுபிடியாக இருக்கின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை எப்படியும் திறப்பதற்காக கபட நாடகம் ஆடுகிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். நடக்கப்போவதை சொல்கிறேன். எப்படியும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிடுவார்கள். ஆனாலும் நான் தன்னலமற்று போராடிக்கொண்டு இருக்கிறேன்.

    தமிழக அரசு தூக்கி எறியப்பட வேண்டிய அரசு. மணல், குட்கா, ஒப்பந்த பணிகள் என அனைத்திலும் ஊழல். மத்திய அரசுக்கு குற்றேவல் செய்யும் அரசாக இருக்கிறது. இந்தநிலையில் சமூக நீதி, இடஒதுக்கீடு, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மத்தியில் இருக்கும் நரேந்திரமோடியின் கூட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்.

    தமிழ் ஈழம் மலர்ந்து ஐ.நா.சபையில் தமிழர் நாட்டுக்கு என்று பிரதிநிதி வேண்டும். என் இதயத்தில் பதிந்த பிரபாகரன் என்ற ஓவியத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இன்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டு 7 நாட்டு படைகள் உதவியுடன் விடுதலை புலிகளை அழித்தோம் என்று கொக்கரிக்கிறான் ராஜபக்சே. அந்த 7 நாட்டு படைகள் உதவி இல்லாமல் இருந்தால், சிங்கள படையை வைத்துக்கொண்டு விடுதலை புலிகளை ராஜபக்சேவால் வென்றிருக்க முடியாது. ஹிட்லரை விட கொடுமைகள் செய்தவன் ராஜபக்சே.

    என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு நரேந்திர மோடியுடன் கூட்டணி வைத்தது. ஆனாலும், அவர் பதவியேற்பு விழாவில் ராஜபக்சேவை அழைத்தபோது, அவர் வரக்கூடாது மீறி வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று உடனடியாக வெளியேறினோம். பதவிகள் கிடைக்குமென்று அங்கே இருக்கவில்லை. பிரபாகரன் தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர். அவருடைய படையில் உள்ள வீரர்களும் ஒழுக்கம் மிக்கவர்கள். அவர்களால் எந்தவொரு சிங்கள பெண்ணுக்காவது பாலியல் தொல்லை இருந்தது என்று யாரும் சொல்ல முடியாது.

    எனவேதான் எங்கள் ரத்தத்திலும், தொண்டர்களின் ரத்த அணுக்களிலும் ஈழ விடுதலை என்ற உணர்வு கலந்து உள்ளது. மதவாத ஆட்சி அகல வேண்டும். மத்தியில் கூட்டணி தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி அமையும்.

    தமிழகத்தில் இந்த அரசு அகற்றப்பட வேண்டும். தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்கிற உறுதியை எடுத்துக்கொண்டு கூட்டணியை அறிவித்தோம். என் மீது விமர்சனங்களை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். எனக்காக பலர் உயிர்விட்டது போதும். நான் நாணயமாக இருக்கிறேன். நான் நேர்மையாக இருக்கிறேன். எனது லட்சியத்துக்காக வாழ்கிறேன். எனக்கென்று இருக்கின்ற குடும்பம் தொண்டர்களாகிய உங்கள் குடும்பம் தான். உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி. நாம் நல்ல இடத்திற்கு செல்வோம். நீங்கள் மகிழ்கிற நாள்தான் எனக்கும் மகிழ்ச்சியான நாள்.

    இவ்வாறு வைகோ கூறினார். 
    நம்பியூர் அருகே விடுதியில் தங்கி இருந்த அரசு பள்ளி மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் மாணவியை கோபி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

    நம்பியூர்:

    திருப்பூரை சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரின் மகள் நம்பியூர் அருகே அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்து 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று இரவு விடுதியில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை வார்டனிடம் அந்த மாணவி தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த மாணவி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாணவியின் தாய் கோபிக்கு வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவியை அழைத்து சென்றார். மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு விடிய-விடிய மழை பெய்ததால் சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு மின்சாரம் சரி செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மேக மூட்டமாக காணப்பட்டது. பின்னர் ஒரு சில இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்தது.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு மற்றும் அதன் வட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்தது. மழை காற்று வீசாமல் மிதமான நிலையில் பெய்து கொண்டே இருந்தது.

    இன்று அதிகாலை நேரத்தில் மழையின் வேகம் குறைந்தது. இன்று காலை 7 மணி வரை தூரல் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு மின்சாரம் சரி செய்யப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தி, பெருந்துறை, பவானி, நம்பியூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பவானிசாகர்- 87 மி.மீ.

    கொடிவேரி-42.2 மி.மீ.

    குண்டேரிபள்ளம்-38 மி.மீ.

    பவானி-20.6 மி.மீ.

    சத்தி-20 மி.மீ.

    கோபி-14 மி.மீ.

    ஈரோடு- 14 மி.மீ.

    பெருந்துறை-11 மி.மீ.

    அம்மாபேட்டை-11 மி.மீ.

    மொடக்குறிச்சி-11 மி.மீ.

    வரட்டுப்பள்ளம்-8.8 மி.மீ.

    கவுந்தப்பாடி-4 மி.மீ.

    நம்பியூர்-2.1 மி.மீ.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிக அளவு பெய்யவில்லை. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    நீர் மட்டமும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 100.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 427 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 650 கன அடியும், வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகளை வீழ்த்த தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைப்போம் என்று ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. #MDMK #DMK

    ஈரோடு:

    ஈரோடு அருகே மூலக்கரையில் ம.தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, ம.தி.மு.க. வெள்ளிவிழா, வைகோவின் பொதுவாழ்வு பொன் விழா ஆகிய முப்பெருவிழா மாநில மாநாடு இன்று நடந்தது.

    இன்று காலை 8.30 மணிக்கு மாநாடு நடைபெறும் மூலக்கரைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வந்தார். மாநாட்டு திடலில் ம.தி.மு.க. கொடியை துணை பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் ஏற்றினார்.

    அதை தொடர்ந்து தொண்டர் அணி, ஆபத்து உதவிகள் அணியினரின் அணிவகுப்பு நடந்தது. மாநாட்டு பந்தலை பொருளாளர் கணேசமூர்த்தி திறந்து வைத்தார்.

    பெரியார் சுடரை புலவர் சே. செவந்தியப்பன், அண்ணா சுடரை துணை பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி ஆகியோர் ஏற்றி வைத்தனர். பெரியார் சிலைக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி மாலை அணிவித்தார். அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.

    வைகோ பொது வாழ்வு பொன்விழா புகைப்பட கண்காட்சியை டாக்டர் ரொஹையா ஆகியோர் திறந்து வைத்தார்.

    மாநாட்டுக்கு ம.தி.மு.க. மாநில தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். மல்லை சத்யா வரவேற்று பேசினார். தொடர்ந்து காலை அமர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.மதியம் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வைகோ பொது வாழ்வு பொன் விழா மலரை தேசிய மாநாட்டுக்கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா வெளியிட்டார். பாராட்டு கேடயத்தை திரா விடர் கழக தலைவர் கி. வீரமணி வழங்கினார்.

    மாநாட்டில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநாட்டு பந்தலில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

     


    மக்கள் ஆட்சி தத்துவத்தை மத்திய பா.ஜனதா அரசு கேள்விக் குறியாக்கி வருகிறது. அதன் கைப்பாவையாக மாநில அ.தி.மு.க. அரசு இயங்கி வருகிறது. இந்த இரண்டு அரசுகளையும் வீழ்த்த தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகளுடன் ம.தி.மு.க. அணி சேர்ந்து கடமையாற்றும்.

    மத்திய அரசு பள்ளிகளில் பிற்பட்டோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.

    * முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டரீதியான உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

    * காவிரி பாசன பகுதிகளில் மீத்தேன், ஹெட்ரோகார்பன், பெட்ரோலிய பொருள் எடுக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

    * ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்தால் போராட்டம் வெடிக்கும்.

    * 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும். சென்னை- சேலம் இடையே ஏற்கனவே உள்ள 3 சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.

    * அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தும் தமிழக அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம்.

    * ஊழல் விசாரணை நடத்த லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

    * உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.

    * தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மத்திய அரசு பிடிவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப் பதை கைவிட வேண்டும்.

    * இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை கைவிட வேண்டும்.

    * நீட் நுழைவு தேர்வு நடத்தக் கூடாது.

    * ஒரே தேர்தல்-ஒரே தேசம் திட்டத்தை கைவிட வேண்டும்.

    * சிறு தொழில்களை பாதிக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும்.

    * வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், விலை உயர்வு, பண மதிப்பு சரிவு தொழில் துறை வீழ்ச்சிக்கு காரணமான மத்திய பா.ஜனதா கட்சியை வீழ்த்த மக்கள் தயாராக வேண்டும்.

    மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் சரத்பவார், யஷ்வந்த் சின்கா, மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை மந்திரி பேராசிரியர் ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பேசுகிறார்கள்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஏற்புரையாற்றி பேசுகிறார். மாவட்ட செயலாளர் நா.முருகன் நன்றி கூறுகிறார். #MDMK #DMK

    சென்னிமலை அருகே மேய்ந்து கொண்டிருந்த 6 ஆடுகள் மீது இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தன.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு அடுத்த கொம்ம கோவில் ஆதி திராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் ஆடு மேய்த்து பிழைத்து வருகிறார். இவர் 13 பெரிய செம்பறி ஆடுகள், 17 குட்டிகள் வளர்த்து வருகிறார். இந்த கால்நடைகளை பெருமாள் நேற்று மாலை கொம்ம கோவில் அருகில் உள்ள பாலமுருகன் குடியிருப்பு பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பலத்த இடி ஒன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் விழுந்தது. இந்த இடி தாக்குதலில், காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 6 பெரிய செம்பறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தனது வெள்ளாடுகள் இறந்ததை பார்த்து பெருமாளும் அவரது மனைவி பாப்பாவும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கொம்மகோவில் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் சிறைக்கு செல்ல இருப்பதால் புழல் ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Congress #Elangovan
    ஈரோடு:

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் இன்று நடந்தது.

    அதன்படி ஈரோடு காங்கிரஸ் சார்பில் சம்பத் நகர்-நசியனூர் ரோடு பிரிவில் பேரணி தொடங்கி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தார்.

    இதில் பங்கேற்ற மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ரபேல் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சியின் போது வெறும் 520 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த போர் விமானங்களை 1500 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த பணத்தை லஞ்சமாக பெற வாய்ப்புள்ளது.

    இது குறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானங்கள் விலை பற்றி கேட்டால் மழுப்பி வருகிறார். ராணுவம் ரகசியம். இதை வெளியே சொல்ல முடியாது என்கிறார்.

    விலையை கூறுவதில் தவறு ஏதும் இல்லை. என்ன ஆயுதம்? என்ன குண்டு தயாரிக்கிறார்கள்? என்று கேட்டால்தான் ராணுவ ரகசியம்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை பொறுத்த வரை சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஏற்கனவே அவர்களை மன்னித்து விட்டனர். இனிமேல் தமிழக அரசு தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.


    புழல் சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தது போல படங்கள் வெளியானது. அது ஏன் என்றால்? மிக விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் சிறைக்கு செல்ல இருப்பதால் இது போன்ற சலுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்லி வருகிறார். நேற்று கூட ஈரோட்டில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் 4 முதல் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan #EdappadiPalaniswami #OPanneerSelvam #PuzhalJail
    ×