என் மலர்tooltip icon

    ஈரோடு

    தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சென்னிவலசை சேர்ந்தவர் வீரண்ணன். இவர் இறந்து விட்டார். இவரது மகள் பவித்ரா (வயது 21).

    பவித்ரா பி.எஸ்.சி. பயா டெக்னாலஜி படித்து விட்டு பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ‘‘லேப் டெக்னீசியன்’’ ஆக வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பவித்ரா வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார்.

    அக்கம் பக்கத்தினர் இதை கண்டு பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் அவரது தாயாருக்கு தகவல் கொடுத்தனர். ‘‘உங்கள் மகள் வீட்டுக்குள் புகுந்து வெளியே வரவே இல்லை. உடனே வந்து பாருங்கள்’’ என்று கூறினர்.

    பதட்டம் அடைந்த தாயார் வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் பவித்ரா தனது சேலையால் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த தகவலை அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    தூக்கில் தொங்கிய இளம்பெண் பவித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? காதல் விவகாரமா? அல்லது உடல் நலம் சரியில்லாததால் இந்த முடிவை எடுத்தாரா? என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனிப்படைகள் அமைக்கப்பட்டபோதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். #hraja #bjp

    கோபி:

    கோபியில் த.மு.மு.க. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை திணித்துள்ளது. முத்தலாக் குறித்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

    மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் நாடாளுமன்ற மாண்புகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறையின் பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை.

    அதேபோல் மனைவி புகார் அளித்தால் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதினால் குடும்பங்கள் சீர் குலைந்து விடும். இதனால் பெண்கள் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தான் இந்தியாவில் அதிகமாக இருப்பார்கள்.

    சிவில் சட்டத்தில் இருந்த திருமண பந்தத்தை கிரிமினல் சட்டத்தில் கொண்டு வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எச்.ராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவது போலீசாருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது. உடனடியாக எச்.ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியுள்ளது.

    அதற்கு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை அடையும். அதற்கு பெட்ரோல்- டீசல் விலை உயர்வு காரணமாக அமையும். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாததால் தமிழகத்தில் நடைபெறுவது பாரதிய ஜனதாவின் பினாமி ஆட்சி என்பதை காட்டுகிறது.

    இலங்கை போர் குற்றம் என தி.மு.க. மீது அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த வி‌ஷயத்தில் தி.மு.க. வை குற்றம் சொல்ல அ.தி.மு.க. விற்கு எந்த அருகதையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #bjp

    முதலமைச்சரின் சாதியை குறிப்பிட்டு பேசியது வன்முறையை தூண்டக்கூடியது என்று கருணாஸ் மீது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #Eswaran #Karunas
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

    ஒரு எம்.எல்.ஏ. சாதி பெயரை குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீங்கள் (கருணாஸ்) பிறந்த சாதியை உயர்வாக பேசிக் கொள்ளுங்கள். அதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. உங்களை உயர்த்தி கொள்வதற்காக அடுத்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான பாதைக்கு வழி காட்டுவதாகும்.

    தமிழக அரசை பற்றி எந்த குற்றத்தை வேண்டுமானாலும் சுமத்தலாம். விமர்சனம் செய்யலாம். அந்த உரிமை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ளது. முதலமைச்சருடைய சாதியை குறிப்பிட்டு பேசுவது வன்முறையை தூண்டக்கூடியது.

    அ.தி.மு.க.வினுடைய வாக்கு வங்கியால் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனீர்களா? அல்லது உங்கள் மக்கள் செல்வாக்கால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததா?. எம்.ஜி. ஆர். காலத்திலிருந்தே கொங்கு மண்டலத்தினுடைய ஆதரவால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து கொண்டிருந்ததென்பது எந்தவொரு பாமரனுக்கும் தெரியும்.

    2016-ம் ஆண்டிலே ஆட்சிக்கு வந்தது கூட கொங்கு மண்டலம் கொடுத்த வெற்றிதான் என்பதை நினைவூட்டுகிறேன். அப்படி இருக்கையில் இன்னொரு சாதி போட்ட பிச்சையில் கொங்கு மண்டலத்துக்காரர் முதலமைச்சராகி இருக்கிறார் என்று சொல்வது நியாயமா?

    தனிப்பட்ட விளம்பரம் தேடி கொள்வதற்காக இப்படி பேசுவதை எல்லாம் தவிர்க்க வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு முதல் தகுதி மற்றவர்கள் மனம் புண்படாமல் பேசுவதுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    2016-ம் ஆண்டு கடைசி நேரத்தில் உங்களை அழைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக்கினார்கள் என்பதற்காக நன்றி விசுவாசத்தை காட்டுங்கள், யாருக்கும் கவலையில்லை. ஆனால் அடுத்தவர்களை கேவலப்படுத்தி பேசாதீர்கள்.

    பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதை அனுமதிக்கக்கூ டாது. எல்லோருக்கும் பேச தெரியும். ஆனால் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #KonguNaduMakkalDesiaKatchi #Eswaran #Karunas
    பவானி ஆற்றை கடக்க முயன்றபோது ஆற்றில் சிக்கிய 10 பெண்களை காப்பாற்றிய விவசாயியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #BhavaniRiver
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்து கோம்பை கிராமத்தை சேர்ந்த பெண்கள் சத்தி அருகே உள்ள அரியப்பம்பாளையத்துக்குச் சென்று வயலில் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

    இவர்களின் ஊரின் குறுக்கே பவானி ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் முதல் நாளில் எளிதில் ஆற்றை கடந்து சென்று விட்டனர். நேற்று காலையிலும் 13 பெண்கள் அரியப்பம்பாளையம் வந்து பணி முடித்து ஊருக்கு புறப்பட்டனர்.

    முதல் நாளில் சென்றதுபோல் நேற்று மாலையும் பவானி ஆற்றை கடந்து சென்று விடலாம் என 13 பெண்களும் பவானி ஆற்றில் இறங்கி கடக்க முயன்றனர். ஆற்றின் மத்தி பகுதிக்கு சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    நேற்று பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இது தெரியாமல் ஆற்றைக் கடந்த பெண்கள் தண்ணீரில் சிக்கினர். மத்திய பகுதிக்கு சென்ற அவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் அந்த பெண்கள் கூக்குரலிட்டனர் ‘‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’’ என அபயக் குரலிட்டனர். அவர்களின் குரல் கேட்டு ஆலத்துகோம்பை ஊரைச் சேர்ந்த ரஜினி (40) என்ற விவசாயி ஓடி வந்து ஆற்றில் சிக்கிய பெண்களை துணிச்சலுடன் ஆற்றில் குதித்து காப்பாற்றினார். தண்ணீரில் தத்தளித்த 10 பெண்களை தனது உயிரைப் பணயம் வைத்து மீட்டார்.

    மீதமுள்ள 3 பெண்களை தண்ணீர் இழுத்துச் சென்றது. மற்றும் மூன்று பெண்களையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என ரஜினி வேதனை அடைந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சரசாள் (வயது 25) பெரிய மணி (55) என்ற இரண்டு பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சத்தியமங்கலம் போலீசாரும் விரைந்து வந்தனர். பிணமாக மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பழனிச்சாமி என்பவரின் மனைவி வசந்தா (45) கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என்று கருதப்பட்டது. இன்று காலை 8 மணியிலிருந்து வசந்தா உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடங்கியது. இந்த பணியில் போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர்.

    செம்படாம்பாளையம் பவானி ஆற்று படித்துறையில் வசந்தா உடல் இன்று காலை 9 மணிக்க கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

    பவானி ஆற்றில் சிக்கி தத்தளித்த 13 பெண்களில் 10 பெண்களை தனி ஒரு மனிதராக அந்த பகுதியை சேர்ந்த ரஜினி என்ற விவசாயி காப்பாற்றி உள்ளார்.

    சம்பவத்தன்று ரஜினி ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் மத்தியில் அலறும் சத்தமும் கைகள் மட்டும் வெளியே தெரிந்தது.

    இதை கண்ட ரஜினி ஆற்றில் யாரோ சிக்கி இருப்பதை உறுதி செய்து அடுத்த கணம் ஆற்றில் குதித்தார். நீரின் மத்தி பகுதிக்கு சென்ற அவர் ஒவ்வொரு பெண்ணாக இழுத்து ஆழமான பகுதியில் இருந்து மீட்டார்.

    ஆற்றின் கரையில் ரஜினியின் உறவினர் பெண் (தங்கைமுறை) லதா நின்று இருந்தார். அவரும் உதவி செய்தார். ஒவ்வொரு பெண்ணையும் ஆழமான பகுதியில் இருந்து ரஜினி காப்பாற்ற கரையில் இருந்த லதா கரையில் இருந்த சேலைகளை எல்லாம் கயிறு போல் சேர்த்து கட்டி ஆற்றில் வீசினார். அதை பிடித்து கொண்டு பெண்கள் கரை ஏறினார்கள்.

    கரையேறிய பெண்கள் மற்ற 3 பேரையும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என வேதனை அடைந்தனர். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தங்களை மீட்ட ரஜினியை சூழ்ந்து கொண்டு 10 பெண்கள் அழுதபடி தங்களை காப்பாற்றியதற்காக நன்றி கூறினர்.

    பெண்களை காப்பாற்றியது குறித்து ரஜினி கூறும்போது, ‘‘நான் ஆற்றின் கரையில் நின்று இருந்தேன். அப்போது ஆற்றின் மத்தி பகுதியில் இருந்து பெண்கள் அலறும் சத்தம் கேட்டது. பார்த்த போது ஆற்றில் கைகள் மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்தது.

    அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்தேன். 10 பெண்களை காப்பாற்ற முடிந்தது. மீதி 3 பேர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது என்று கூறினார்.

    தனி ஒரு மனிதனாக ஆற்றில் குதித்து 10 பெண்களை காப்பாற்றிய விவசாயி ரஜினிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  #BhavaniRiver

    கோபி அருகே பள்ளி சென்ற பிளஸ்-1 மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் மினிசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் ஆனந்தி (வயது 15). கவுந்தப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிள்ஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி மாணவி ஆனந்தி பள்ளிக்கு சென்றார். ஆனால் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தந்தை மினிசாமி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரில் ‘‘என் மகளை எனது உறவினரான மாதேஸ்வரன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து என் மகளை மீட்டு தாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.

    இன்ஸ்பெக்டர் சின்ன தங்கம் இது பற்றி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி ஆனந்தியை தேடி வருகிறார்.

    பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சென்னிமலை கோவில் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். #HRaja #BJP
    சென்னிமலை:

    வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா அறநிலைய துறையில் பணியாற்றும் பணியாளர்களையும், அவர்களது வீட்டுப் பெண்களையும் மிக தரக்குறைவாக பேசியதாக கூறி சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் பணியாற்றி வரும் கோவில் பணியாளர்கள் தங்களது அலுவலக பணியை புறக் கணித்தனர்.

    மேலும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியாளர்கள் பணிகளை புறக்கணித் தாலும் கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. #HRaja #BJP

    புளியம்பட்டியில் ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் போலீஸ் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
    பு.புளியம்பட்டி:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி புஞ்சை புளியம் பட்டி பகுதியில் சுமார் 40 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    அந்த சிலைகள் அனைத்தும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பகுடுதுறை பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. புஞ்சை புளியம்பட்டி அவ்வை வீதியிலும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல சரக்கு ஆட்டோ தயார்படுத்தப்பட்டது. அதில் விநாயகர் சிலையை ஏற்றி பவானி ஆற்றை நோக்கி எடுத்து சென்றனர்.

    சரக்கு ஆட்டோவை கார்த்தி (வயது 25) என்பவர் ஓட்டி சென்றார்.ஆட்டோவில் அந்த பகுதியை இளைஞர்கள் பலர் ஏறி இருந்தனர்.

    பாதுகாப்புக்காக பவானிசாகர் போலீஸ் நிலைய பெண் காவலர் லட்சுமியும் (32) அந்த ஆட்டோவில் இருந்தார். அவரது சொந்த ஊர் சேலம், வடுகம்பட்டி, பிச்சம்பாளையம் ஆகும்.

    நள்ளிரவில் கணக்கரசம் பாளையம் அருகே சென்ற சரக்கு ஆட்டோ அங்குள்ள வளைவில் திரும்பும்போது திடீரென விநாயகர் சிலையுடன் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த பெண் காவலர் லட்சுமி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    வசந்த் (29), அருண் (22), தினேஷ்குமார் (22), சஞ்சய் (15), சக்திவேல் (21), காசி (26), சூர்யா (17), பிரனீத் (16), பிரபஞ்ச் (17), சுரேஷ் கிருஷ்ணா (19), அருண் பிரசாத் (17), டிரைவர் கார்த்தி, பெண் காவலர் லட்சுமி.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    “துணை போகாதே துணை போகாதே... ஊழலுக்கு துணை போகாதே” என்று ஈரோட்டில் குட்கா ஊழலை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMK #Gutkha
    ஈரோடு:

    குட்கா ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

    குட்கா ஊழலை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “துணை போகாதே.. துணை போகாதே ஊழலுக்கு துணை போகாதே”, “கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. மத்திய- மாநில அரசுகளை கண்டிக்கிறோம்”, “கைது செய்... கைது செய்.. ஊழலுக்கு துணை போன அதிகாரிகளை கைது செய்” “நடவடிக்கை எடு.. நடவடிக்கை எடு.. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடு” போன்ற கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் முன்னாள் மேயர்-குமார் முருகேஷ், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில கொள்கை பரப்பு இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணி மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் பெரியசாமி பொதுக்குழு உறுப்பினர் மயில்விழி முருகேஷ். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை ராமு, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர், தலைமை கழகப்பேச்சாளர் இளைய கோபால், கிங் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோபி பஸ்நிலையம் அருகே ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கோபி நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் முருகன், டி.என்.பாளையம் சிவபாலன், நம்பியூர் செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். #DMK #Gutkha
    நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் விவசாயியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை அளித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கோபி:

    கோபி அருகே உள்ள செம்மாம்பாளையம் வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி.

    இவருக்கும் அவரது உறவினரான அவினாசி தாலுகா குட்டகத்தை சேர்ந்த சதீஸ்குமாருக்கும் (வயது 26) இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    கடந்த 20-11-2017 அன்று தனது தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது சதீஸ்குமார் அங்கு வந்தார்.

    அவர் பழனிச்சாமியிடம் நிலம் தொடர்பான தகராறில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் பழனிச்சாமியை வெட்டினார். தடுக்க வந்த பழனிச்சாமியின் மகள் துரைசாமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் பழனிச்சாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வரப்பாளையம் போலீசார் சதீஸ்குமாரை கைது செய்த கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். பழனிச்சாமியை கொலை செய்த வழக்கில் சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனகோட்டி ராம் ஆஜராகி வாதாடினார். #tamilnews
    கோபி அருகே வாய்க்காலில் மிதந்த வந்த 2 பெண் பிணங்களை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கடத்தூர் போலீஸ் பகுதிக்குட்பட்ட குப்பந்துறையில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்கால் கரையோரம் இன்று 2 பெண் பிணங்கள் மிதந்து வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒரு பெண்ணுக்கு 35-வயது இருக்கும். இன்னொரு பெண்ணுக்கு 20-வயது இருக்கும் இந்த 2 பெண்களும் ஒரே பகுதியை சேர்ந்தவர்களா? எப்படி இறந்தார்கள்? வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற விவரம் தெரியவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கடத்தூர் போலீசார் விரைந்து சென்றனர்.

    வாய்க்காலில் மிதந்த 2 பெண் பிணங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவுப்செய்து அந்த 2 பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியின் தற்கொலைக்கு அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தான் காரணம் என மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியக்காரன் பாளையத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் செல்வராஜ் என்பவரது மகள் அம்சலதா என்ற மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் பூச்சிமருந்து (வி‌ஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு அந்த பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர்தான் காரணம் என்று கூறி இன்று அப்பள்ளியை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை சமரசம் செய்தனர். #tamilnews
    கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan
    கோபி:

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-07-2000ம் ஆண்டு ஈரோடு மாவட்ட வனப்பகுதி கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.

    108 நாட்கள் பிணைக்கைதியாக நடிகர் ராஜ்குமாரை வைத்திருந்த வீரப்பன் பின்னர் ராஜ்குமாரை விடுவித்தான்.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர்.



    இந்த வழக்கில் தற்போது மாயாவி வீரப்பன், நடிகர் ராஜ்குமார் இறந்து விட்டனர் எனினும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த வழக்கு கடந்த 18 வருடம் 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரில் கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன் ஆகிய 5 பேர் நீதிபதி மணி முன்பு ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 25-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பின்னர். அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும், அன்றைய தினம் வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் 47 பேர் சாட்சி அளித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan

    ×