என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்ட காஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 30-7-2000 அன்று சந்தன கடத்தல் வீரப்பன், அவனது கூட் டாளிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மற்றவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.
இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இந்த வழக்கு தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டதாகும். இந்த வழக்கில் அரசு தரப்பில் 47 சாட்சிகள், 51 ஆவணங்கள், 32 சான்று பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விரிவான நகலை பெற்று, இரு மாநில அரசு அதிகாரிகளுடனும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து 9 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்.
இவ்வாறு வக்கீல் தனகோட்டிராம் கூறினார். #ActorRajkumar #Veerappan
ஈரோடு மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு செங்கோடம் பாளையத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சுழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து சாதனை படைத்தவர். ஆனால் தமிழகத்துக்கு காங்கிரசுடன் தி.மு.க.வினரும் சேர்ந்து துரோகம் செய்தார்கள். இவர்களின் கூட்டணி ஆட்சி நடந்த போது தான் இலங்கையில் போர் நடந்தது. ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது மத்திய காங். அரசு இலங்கை ராணுவத்துக்கு முழு உதவியை வழங்கியது. இதை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவே கூறி உள்ளார்.
ஈழப்படு கொலைக்கு காரணமான காங்கிரஸ்-தி.மு.க.வினரை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க ஐ.நா. சபைக்கு செல்வோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அமைச்சர் கருப்பணன் கூறியதாவது.-
ஈழத்தமிழர்களுக்காக மறைந்த ஜெயலலிதா பல்வேறு உதவிகளை வாரி வழங்கி உள்ளார். தமிழ் மாநிலமாக உருவாகவும் பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளார்.
இலங்கை போரின் போது தங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா ராணுவம் உதவி செய்துள்ளதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.
அங்கு ஒரே நாளில் 1 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்-தி.மு.க. ஆட்சியாளர்களே காரணம். இவர்கள் அ.தி.மு.க.வை அழிக்க ஆட்சியை அகற்ற பகல் கனவு காண்கிறார்கள். ஒரு போதும் அது நடக்காது.
இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசினார்.
எம்.பி.சத்தியபாமா, எம்.எல்.ஏ.க்கள், கே.எஸ்.தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், சிவசுப்பிரமணி, ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி கழக செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜன், ஜெயராஜ், முருகுசேகர், மகளிர் அணி செயலாளர் மல்லிகாபரமசிவம், மாநில வர்த்தகஅணி செயலாளர் சிந்து ரவிசந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம், இணை செயலாளர் மாதையன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், இணை செயலாளர் கோபால், டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன், சூரம்பட்டி தங்கவேலு, ஜீவாரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterKaruppannan #MinisterSengottaiyan
கொடுமுடி:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு 2-வது நாளாக பல இடங்களில் இடி-மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது.
இதே போல் கொடுமுடி அருகேயும் மழை கொட்டியது. இரவு காற்றும் வீசியதால் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டோரம் உள்ள ஒரு மரம் திடீரென முறிந்து அங்கிருந்த 2 குடிசை வீடுகள் மீது விழுந்தது.
இதில் வேணி (வயது 45), ஜகினா (25), பூங்கொடி (50) ஆகிய 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
இரவு மழை பெய்ய தொடங்கியதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கதவை பூட்டி கொண்டு படுத்து விட்டனர். இரவு 9.50 மணி அளவில் காற்றில் மரம் முறிந்து இந்த 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
உடனடியாக 3 பெண்களும் மீட்கப்பட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரோட்டோரத்தில் உள்ள வீடுகளில் மரம் விழுந்ததால் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுபாதையில் விடப்பட்டன. #tamilnews
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஆனந்த் (வயது 18). ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் எபின் (23). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் கொண்டமுத்தனூர் கிராமத்தை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரைக்கு வந்தனர்.
அவர்களுடன் நண்பரான அலெக்ஸ் என்பவரும் வந்திருந்தார். ஆனந்தும், எபினும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அலெக்ஸ் ஆற்றங்கரையில் நின்றார்.
குளித்துக்கொண்டிருந்த ஆனந்தும், எபினும் ஆற்றின் ஆழமாக பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் ஆற்று நீரில் மூழ்கினர். இதை பார்த்த அலெக்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆற்றில் இறங்கி 2 வாலிபர்களையும் தேடினர். நேற்று பகலில் நடந்த இந்த தேடுதல் பணியில் அந்த பகுதி மீனவர்களும் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை தேடியும் 2 வாலிபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் நேற்று தேடும் பணி நிறத்தப்பட்டது.
இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கிய ஆனந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அவர் ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்படாம்பாளையம் பிரிவில் ஆற்றில் மிதந்தது.
உடலை பார்த்து ஆனந்தின் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆற்றில் மூழ்கிய இன்னொரு வாலிபரான எபினும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-7-2000 அன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.

108 நாட்கள் பிணைக் கைதியாக ராஜ்குமார் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரை வீரப்பன் விடுவித்தான்.
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.
இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளிலும், இந் திய படைக்கலன் சட்டப்படியும், மற்றும் வெடிபொருள் தடை சட்டப்படியும் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 47 பேர் சாட்சியளித்தனர்.
வழக்கு நடந்தபோதே கன்னட நடிகர் ராஜ்குமார், மரணம் அடைந்தார். இந்த வழக்கு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது 25-ந் தேதி அதாவது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி மணி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதற்காக வழக்கில் சம்பந்தப்பட்ட கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 8 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். புட்டுச்சாமி ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லாததாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று கூறப்பட்டதையொட்டி கோபி கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலை 9 மணி முதல் கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீர்ப்பு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நீடித்தது. #ActorRajkumar #Veerappan
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் கடந்த 4 நாட்களாக மாற்று திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
4 ஆண்டுகால மோடியின் ஆட்சியால் நாடு முன்னேறவில்லை. நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி பணத்தை மாற்றினால் கருப்பு பணத்தை ஒழித்துவிடலாம் என்றார். ஆனால் கருப்பு பணம் ஒழிந்தபாடில்லை. புதிதாக நோட்டு அச்சடிக்கப்பட்டதால் ரூ.20 ஆயிரம் கோடி செலவானதுதான் மிச்சம். ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
நானும் ஊழல் செய்யமாட்டேன். வேறு யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என வீராப்பு பேசி மோடி சவால் விட்டார். ஆனால் இப்போது ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது பூதாகரமாக கிளம்பி உள்ளது. இந்த ஊழல் குறித்து ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லாமல் திணறி கொண்டிருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை மன்னித்து விடுதலை செய்ய தலைவர் ராகுல்காந்தி ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.
எனினும் தலைவர் ராகுல்காந்தி கூறியதால் நானும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெயருக்குதான் அ.தி.மு.க. அரசு. ஆனால் அரசை இயக்கி வருபவர் பிரதமர் மோடி தான். பாரதிய ஜனதாவின் டீம்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை மோடி ஆட்டிப்படைக்க அதன்படி இங்குள்ள ஆட்சியாளர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajivgandhi #RajivGandhiCase #PuducherryCM #Narayanasamy #PMModi
ஈரோடு:
ஈரோட்டில் நேற்று மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. இரவில் மழையின் வேகம் அதிகரித்தது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டியது.
பின்னர் வேகம் குறைந்து மிதமான மழை பெய்தது. நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இடியின் சத்தம் நீண்ட நேரம் நீடித்தது.
இந்த இடி சத்தம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொது மக்கள் தட்டி எழுப்பியது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தூக்கத்தையும் தொலைத்தனர்.
ஈரோட்டில் பெய்தது போல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.பவானி சாகர் பகுதியில் அதிக அளவாக 64 மி. மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
வரட்டுப்பள்ளம் 59.2
கொடிவேரி 30.2
அம்மாபேட்டை 28.6
ஈரோடு 25
கொடுமுடி 2.4
பவானிசாகர் பகுதியில் அதிக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து ஆற்றுக்கு 1050 கன அடி தண்ணீரும், வாய்க்காலுக்கு 2300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.29 கன அடியாக உள்ளது.
ஈரோடு:
சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் உமா சங்கர் (வயது 30).
மேல் வீட்டில் உமாசங்கர் தனது குடும்பத்துடனும், கீழ் வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் உமா சங்கர் மற்றும் அவரது பெற்றோர் என அனைவரும் சேர்ந்து வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்று விட்டனர்.
ஊருக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மேல் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவின் உள்ளே இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
ஈரோடு பெரிய சேமூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்து அனைத்து துறையிலும் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை 2 துறைகள் ஈரோடு மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. 2 துறைகளிலும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடப்பதை மக்கள் கண் கூடாக பார்த்து வருகிறார்கள்.
ஏரிகள், குளங்களை எல்லாம் தூர்வார சுற்றுச்சூழல்துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பெரியசேமூர் பள்ளியை உயர் நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே வரும் ஆண்டு இது பற்றி அரசு பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கும்.
பள்ளி கல்வித்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பாக பணியாற்றாத சில இடங்களில் இருக்கும் பெற்றோர்- ஆசிரியர் சங்கங்களை உடனடியாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது. சிறந்த முறையில் பணியாற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
அரசின் கொள்கை முடிவின் படி எந்த பள்ளியையும், அந்த பள்ளியின் வளாகத்தில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்ற எந்த பரிசீலனையும் எந்த ஆய்வும் இல்லை.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்குள் மாணவர்கள் 1315 பள்ளிகளில் இருக்கிறார்கள். செலவும் அதிகமாகிறது. ஆனால் எந்த பள்ளியையும் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.
போராட்டம் செய்வோம் என்று கூறுகிறவர்கள் கூடுதலாக மாணவர்களை பள்ளியில் எப்படி சேர்க்க முடியும்? எப்படி பள்ளிக்கு 50 மாணவர்களை கொண்டு வரும் அளவுக்கு சீரமைக்க முடியும்? என எடுத்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.
ஏனென்றால் ஒரு மாணவர் 2 மாணவர் இருக்கிறார் என்று சொன்னால் ஒரு மாணவருக்கு குறைந்த பட்சம் ரூ.6 லட்சம் அரசு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே மக்கள் வரி பணத்தை எவ்வாறு வழி நடத்துவது? எப்படி மாணவர் சேர்க்கையை கூடுதல்படுத்துவது? என்று ஆலோசனை தர வேண்டும்.
அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளை அரசு பள்ளியுடன் இணைக்கும் நோக்கம் அல்ல. குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி பயிற்சி அளிக்க ஆங்கிலம், தமிழ் சிறப்பாக கற்று கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வருகிறதே? அதன் மீதான நடவடிக்கை என்ன? என்று கேட்டபோது அமைச்சர் கூறியதாவது:-
3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். இந்திய துணை கண்டத்திலேயே அதிக ஆசிரியர்கள் இருப்பது இங்கு தான். ஏதோ ஒரு இடத்தில் தவறு ஏற்பட்டால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட நிலை எதிர் காலத்தில் வரக்கூடாது.
ஆசிரியர் மீது புகார் எழுந்தால் விசாரணையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஆசிரியர் மீது போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரியரை தேடி கைது செய்யவும் முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி செங்குளத்தை சேர்ந்தவர் சிக்கரன் (வயது 37). கூலி தொழிலாளி.
இவரது மனைவி பெயர் சிக்கரா (32). இவர்களுக்கு சுதா (15), மேகலா (10) என்ற மகள்கள் இருந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே சிக்கரனும், சிக்கராவும் பிரிந்தனர். சுதாவும், மேகலாவும் சிக்கரனுடன் வளர்ந்தனர்.
சுதா முகாசி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், மேகலா அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் உண்டு உறைவிட பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். 2 பேரும் விடுதியில் தங்கி படித்தனர்.
சிக்கரன் தீராத நோய் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இதனால் மன வேதனை அடைந்த சிக்கரன் நோயால் தான் இறந்துவிட்டால் தனது மகள்கள் அவதிப்படுவார்களே என்று என எண்ணினார்.
இந்த நிலையில் விடுதிகளில் இருந்து சுதாவையும், மேகலாவையும் அழைத்து வந்தார். பின்னர் 3 பேரும் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கொல்லம ரத்தான் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சிக்கரன் உணவில் விஷம் கலந்து மகள்களுக்கு சாப்பிட கொடுத்தார். சிக்கரனும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மேகலா பரிதாபமாக இறந்தார்.
மேல் சிகிச்சைக்காக சுதாவும், சிக்கரனும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சுதாவும் பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கரனுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிக்கரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ஜெயின். இவரது மகள் சுவேதா (வயது 24).
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அவருக்கு துறவி ஆக ஆசை ஏற்பட்டது. இந்த முடிவை பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
இதையொட்டி இன்று ஈரோடு இந்திரா நகரில் இருந்து ஊர்வலம் நடந்தது. இதில் சுவேதா குதிரையில் புதிய ஆடை நகைகள் அணிவித்தப்படி சென்றார்.
இந்த ஊர்வலத்தில் ஏராளமான வட மாநில மக்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வீதி, தெப்பக்குளம் வழியாக சென்று புதுஜெயின் கோவிலை அடைந்தது. வரும் ஜனவரி மாதம் முறைப்படி வடமாநிலம் சென்று சுவேதா துறவி கோலம் அடைகிறார்.
ஈரோடு:
ஈரோடு பெரிய சேமூர் மாமரத்துபாளையம் அருகே கார்த்திக்கேயன் பிரிண்டிங் மில் என்ற ஒரு தனியார் நிறுவனம் உள்ளது.
இங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மன்னீர் (வயது 48), மண்டரி பண்டித் (40) ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மில்லில் உள்ள கெமிக்கல் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தனர்.
அப்போது அந்த தொட்டியில் பரவி இருந்த விஷ வாயு அவர்களை தாக்கியது. இதில் 2 பேரும் மூச்சு திணறி மயங்கி விழுந்து இறந்து விட்டனர்.
இதற்கிடையே சுத்தம் செய்ய தொட்டியில் இறங்கிய 2 பேர் வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் சுருண்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையொட்டி அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு விஷ வாயு தாக்கி இறந்து கிடந்த 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விஷ வாயு தாக்கி பலியான மன்னீருக்கு முகிலாபேகம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதே போல் மண்டரி பண்டித்துக்கு மிம்மியாதேவி என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர்.

விஷ வாயு தாக்கி இறந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி சத்தி ரோட்டில் திடீரென அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த திருநங்கையிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.






