search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All Accused Acquitted"

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #ActorRajkumar #Veerappan
    கோபி:

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-7-2000 அன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.

    அப்போது வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா மற்றும் கூட்டாளிகள் 11 பேர் சேர்ந்து துப்பாக்கி முனையில் ராஜ்குமாரை கடத்திச் சென்றனர்.



    108 நாட்கள் பிணைக் கைதியாக ராஜ்குமார் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரை வீரப்பன் விடுவித்தான்.

    ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.

    இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கில் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளிலும், இந் திய படைக்கலன் சட்டப்படியும், மற்றும் வெடிபொருள் தடை சட்டப்படியும் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 47 பேர் சாட்சியளித்தனர்.

    வழக்கு நடந்தபோதே கன்னட நடிகர் ராஜ்குமார், மரணம் அடைந்தார். இந்த வழக்கு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது 25-ந் தேதி அதாவது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி மணி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    இதற்காக வழக்கில் சம்பந்தப்பட்ட கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 8 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். புட்டுச்சாமி ஆஜராகவில்லை.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லாததாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று கூறப்பட்டதையொட்டி கோபி கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    காலை 9 மணி முதல் கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீர்ப்பு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நீடித்தது.  #ActorRajkumar #Veerappan


    ×