search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Rajkumar"

    நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். #ActorRajkumar #Veerappan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்ட காஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 30-7-2000 அன்று சந்தன கடத்தல் வீரப்பன், அவனது கூட் டாளிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மற்றவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.

    இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு கூறினார்.



    குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இந்த வழக்கு தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டதாகும். இந்த வழக்கில் அரசு தரப்பில் 47 சாட்சிகள், 51 ஆவணங்கள், 32 சான்று பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விரிவான நகலை பெற்று, இரு மாநில அரசு அதிகாரிகளுடனும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து 9 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்.

    இவ்வாறு வக்கீல் தனகோட்டிராம் கூறினார்.  #ActorRajkumar #Veerappan



    வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

    பெங்களூரு:

    மேற்குதொடர்ச்சி மலைக் காடுகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்றான்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராஜ்குமார் இருந்தபோது வீரப்பன் அவரை கடத்தினான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    108 நாட்கள் வீரப்பனின் பிடியில் இருந்த ராஜ்குமார் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் மீட்கப்பட்டார்.

    நக்கீரன் கோபால் இடைத் தரகராக இருந்த பேச்சு வார்தைகள் மேற்கொள்ள இறுதியாக பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோர் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வந்தனர்.

    அப்போது கர்காடகாவில் எஸ்.எம். கிருஷ்ணாவும், தமிழ்நாட்டில் கருணாநிதியும் முதல்-அமைச்சராக இருந்து வந்தனர். ராஜ்குமார் கடத்தப்பட்டதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் அவர் மீட்கப்பட்டபோது நடந்த பேச்சுவார்தைகள் அதில் எடுக்கப்பட்ட உடன்பாடுகள் போன்றவை பற்றி இன்னும் முழுமையான விவரங்கள் வெளியே வரவில்லை.பணம் கைமாறியதா? என்ற விவரமும் தெரியவில்லை.

    ஒருசில தகவல்கள் மட்டும் தான் வெளிவந்துள்ளன. இன்னும் பல ரகசியங்கள் அம்பலமாக வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் இந்த புத்தகம் வெளிவர உள்ளது.

    அதில், ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக விரிவான விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார். அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் இது சம்பந்தமாக பேசியது, நக்கீரன் கோபாலை தூதுவராக அனுப்பியது, வீரப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தைகள், வீரப்பனுடன் எஸ்.எம். கிருஷ்ணாவே நேரடியாக பேசியது, பின்னர் மீட்பு குழுவினர் சென்று மீட்டு வந்தது போன்றவற்றில் நடந்த பல்வேறு ரகசியங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த புத்தகம் வெளிவந்தால் ராஜ்குமார் கடத்தலின் பின்னணி அப்போது நடந்த பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், எஸ்.எம். கிருஷ்ணா தனது அரசியல் வாழ்க்கை பற்றியும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரசில் அவரது பணிகள், பின்னர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டது, பாரதீய ஜனதாவில் சேர்ந்தது போன்ற விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

    எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக அரசியலில் 50 ஆண்டு காலம் கோலோச்சியவர் ஆவார். அவர் எம்.எல்.ஏ., மாநில மேல்சபை உறுப்பினர், அமைச்சர், சபாநாயகர், துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி, மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

    இவர் பல்வேறு அரசியல் ரகசியங்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

    ×