என் மலர்tooltip icon

    ஈரோடு

    திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தால் விபத்துக்குள்ளான லாரி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு :

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. இந்த லாரியை பெரியசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டு இருந்தது.

    அப்போது திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் லாரி வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.

    பள்ளத்தில் பாய்ந்த லாரி அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. விபத்து நடந்தபோது டிரைவர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மரத்தில் மோதாமல் லாரி பாய்ந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்து ஏற்பட்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்த பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரியின் பின்பகுதி நடுரோடு வரை தூக்கியபடி இருந்ததால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்தபடி விடிய-விடிய நின்றன. மேற்கொண்டு எந்த வாகனமும் திம்பம் மலைப்பாதைக்கு வராமல் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் பாய்ந்து நின்ற லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகி வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    இதுகுறித்து அந்த வழியாக கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பயணிகள் கூறும்போது, ‘27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கனரக வாகனங்களால் தான் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவில் மிகவும் அவதிப்பட்டோம். எனவே அதிகாரிகள் கனரக வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்றார்கள்.
    ஈரோடு அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் அமானுல்லா கான் வரதட்சணை கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமானுல்லா கான் ஹவச்சா கையில் இருந்த குழந்தையின் தலையில் அடித்தார். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடுத்த நாள் குழந்தையை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தையின் உணர்வு பறிபோனதாக கூறினார். இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஹவச்சா கேரளா சென்றார். அங்கு பல ஆஸ்பத்திரிகளில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை அளிக்க அளிக்க குழந்தை அசைவற்று மோசமான நிலையை எட்டியது.

    குழந்தையின் இந்த நிலைக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்ய ஈரோடு வந்தார். ஈரோட்டில் உள்ள போலீசில் குழந்தையின் மருத்துவ குறிப்புகளை இணைத்து கணவர் மீது புகார் அளிதார். ஆனால் புகாரை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹவச்சா நேற்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க புகாரை கூறினார். உரிய போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்காத காரணத்தையும், உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

    தந்தையால் தாக்கப்பட்டு உணர்வு இழந்து அசைவற்று கிடக்கும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இதன்பேரில் ஈரோடு மகளிர் போலீசார் அமானுல்லாகான் மட்டும் அவருடைய தாய், அக்காள், சித்தி ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இன்று அமானுல்லாகான் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    பெருந்துறை அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியதில் வேலூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். #Accident
    சென்னிமலை:

    வேலூர் காட்பாடி பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கோதண்டம் (வயது 60) என்ற குருசாமி தலைமை யில் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வேனில் புறப்பட்ட னர்.

    வேனில் செந்தில்குமார் (40), பழனி (40), நாகராஜ் (45), நாராயணசாமி (29), விமல் (27), சசி (28), ஜோதி (32), ஸ்ரீமதி (3), அருண் (5), ரோஹித் (7), மோனிஷா (8) உள்பட 13 பேர் இருந்தனர்.

    வேனை வேலூரை சேர்ந்த ராஜ்கபூர் (29) என்பவர் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வேன் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    ஓலப்பாளையம் பிரிவு வந்தபோது ஆந்திர மாநிலத்திலிருந்து சிலிக்கான் லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை வேலூரை சேர்ந்த பலராமன் (53) ஓட்டிச் சென்றார்.

    அந்த லாரியை ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனி, நாகராஜ் ஆகிய 2 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். குருசாமி கோதண்டத்தின் 2 கால்களும் முறிந்தன.

    வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Accident


    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 23). திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நவகோம்பு பகுதியை சேர்ந்தவர் அபிநயா (22).

    இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் இருவரின் வீட்டுக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் தந்தை பெரியார் திடாவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து காதல் ஜோடி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதியளித்தது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #MekedatuDam #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி தண்ணீர் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென்று தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு தமிழகத்திலிருக்கும் கொஞ்சநெஞ்ச விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். கஜா புயல் பாதிப்பில் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் இந்த செய்தி பேரிடியாக அமைந்திருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MekedatuDam #Eswaran
    சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. #FireAccident
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, ஊத்துக்குளி ரோடு, காந்திநகரில் வசிப்பவர் குமரன் (வயது 36). இவர் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர் ரோடு, அஞ்சநேயர் கோவில் கோவில் பின்புறம் ஜெ.ஜெ., நகரில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் குமரன் டெக்ஸ் என்ற பெயரில் பனியன் வேஸ்ட் பஞ்சில் இருந்து பாலிஸ்டர் கலந்து கலர் நூல் உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.

    இதில் 22 பேர் பணியாற்றி வருகின்றனர். காலை வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்ட போது தீடீர் என அங்கு கிடந்த பஞ்சு பகுதியில் புகை கிளம்பி உள்ளது. உடனடியாக பணியாளர்கள் வெளியேறி புகை வந்த பகுதியில் உள்ள தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது புகை மூட்டமாக மாறியது. அங்கு இருந்தவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து தீ அணைக்க அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக பெருந்துறைக்கு தகவல் கொடுத்து அங்கு இருந்தும் தீயணைப்பு வாகனம் வந்து குடோனில் இருபுறமும் ஒரு மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்த தீ விபத்தில் அங்கு இருந்த 15 டன் பஞ்சு, 60 பேல் நூல் கோன் மற்றும் பாலிஸ்டர் பஞ்சு எறிந்து நாசம் ஆகியது, இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும். மேலும் அங்கு இருந்த இயந்திரமும் தீயில் கருகியது. குடோனிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார், வருவாய் ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சென்னிமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஞ்சுமில் எந்திரம் ஓடிக் கொண்டிருந்ததால். அதன் உஷ்ணத்தில் கழிவு பஞ்சில் தீ பிடித்ததா? அல்லது வேறு எப்படி தீ பிடித்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  #FireAccident


    பெருந்துறை அருகே வாய்க்கால் மறுபக்கம் நீந்தி சென்ற வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள முனியப்ப பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 39). தனியார் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் பணிபுரிந்து வந்தார்.

    நேற்று மாலை இவர் நண்பர்களுடன் பெருந்துறை வந்தார். அப்போது கீழ்பவானி வாய்க் காலில் தண்ணீர் பாய்ந்து செல்வதை கண்டு அதில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டனர்.

    பெருந்துறை அடுத்த திருவாச்சி கீழ் பவானி வாய்க்காலில் இறங்கி நண்பர்களுடன் சண்முகம் குளித்தார்.

    அப்போது சண்முகம் வாய்க்காலின் எதிரே மறு கரைக்கு நீந்தி சென்றார். வாய்க்காலின் நடுப்பகுதிக்கு சென்றபோது அதிகமாக சென்ற தண்ணீர் திடீரென சண்முகத்தை இழுத்து சென்றது.

    அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரை அவரது நண்பர்கள் தேடி பார்த்தனர். கிடைக்க வில்லை. இதனால் கதறி அழுத நண்பர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    வாய்க்காலில் குதித்து தீயணைப்பு வீரர்கள் தேடினர். சுமார் 3 மணி நேரம் போராடி வாய்க்காலில் சிறிது தூரம் தள்ளி சண்முகத்தின் உடலை மீட்டனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சண்முகத்துக்கு கலையரசி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    வாடகை பணம் தருவதாக கூறி காரை திருடி சென்றவரை பெருந்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

    இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

    அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

    பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அகமது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

    பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்கவில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
    ஈரோடு அருகே வாடகை பணம் தருவதாக கூறி நூதன முறையில் கார் திருடி சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

    இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

    அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

    பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அக மது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண் டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

    பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்க வில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோக நாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட கிராமப்பகுதி மக்களுக்காக 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து இளைஞர்கள் வேன் மூலம் அனுப்பி வைத்தனர். #GajaCyclone
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்க 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கும் பணி நம்பியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோசணம், மலையப்பாளையம், சாவக்கட்டுபாளையம், வேமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டு நாட்களாக நடைபெற்ற பணியில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு சப்பாத்திகளை தயார் செய்தனர்.

    மேலும் நம்பியூர் வட்டார பொதுமக்கள் உதவியுடன் கஜா புயல் சேதப்பகுதிக்களான வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை உள்பட மாவட்ட கிராம பகுதி மக்களுக்கு அரிசி, ரொட்டி, தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பால் பவுடர், பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் அனைத்தும் வேன் மூலம் சென்று விநியோகம் செய்யப்பட்டது. #GajaCyclone



    தமிழக அரசை எதிர்ப்பதையே கமல்ஹாசன் கொள்கையாக வைத்துள்ளார் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் விமர்சித்துள்ளார். #ArjunSampath #KamalHaasan
    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 108 நாட்கள் ஆன்மீக பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    பிரச்சார வாகனத்தை இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்து மக்கள் சட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் அ,தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் கொள்கையில் நம்பிக்கை இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒரு மாற்று அரசியல் சக்தி, தேசிய அரசியல், ஆன்மீக அரசியல் தமிழகத்தில் காலுன்ற வேண்டும்.

    மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க வேண்டும். இந்த இரண்டு கருத்துகளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் 108 நாட்கள் இந்த பிரச்சாரம் நடைபெறும்.

    கஜா புயலால் தற்போது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த காலங்களில் நிஷாபுயல், தானே புயல் ஏற்பட்டபோது நரேந்திரமோடி நேரடியாக வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். இடைகால நிவாரணமாக சில நூறு கோடி ரூபாய் ஒதுக்கினார். அதேபோல் இப்போதும் மோடி வந்து பார்வையிட வேண்டும்.

    கஜா புயலால் சேதமடைந்த வீடுகளை மத்திய அரசின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் மூலம் மறுசீரமைப்பு செய்து கொடுக்க வேண்டும் இப்படி புயல் பாதித்த அனைத்து பகுதிகளில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மாநில அரசு செய்ய வேண்டும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

    மக்கள் எளிதில் அணுகும் முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர்.



    கமல்ஹாசன் தமிழக அரசை எதிர்ப்பதையே தனது கொள்கையாக வைத்துள்ளார். அதன் மூலம் விளம்பரம் தேடி கொள்கிறார். தமிழகத்தில் எந்த நன்மையும் கிடைக்க கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஊதுகோலாக கமல்ஹாசன் உள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தை பொறுத்தவரை சபரிமலை ஐயப்பன் கோவிலை அழித்துவிட்டு அதை சுற்றுலா தலமாக்க மாற்ற முயற்சி செய்து வருகிறார் கேரள முதல்வர். ஒரு மத்திய அமைச்சரையே கேரள போலீசார் தடுத்து உள்ளார்கள் என்றால் சாதாரண பக்தர் நிலை என்னவாகும்?

    உடனடியாக மத்திய அரசு சபரிமலை ஐயப்பன் கோவிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #KamalHaasan

    ஈரோட்டில் ஆட்டோ, மொபட் மோதியதில் தவறி விழுந்த பெண் மீது தனியார் பஸ் ஏறி இறங்கியதில் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு பெரிய அக்ரஹாரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி முபின்தாஜ் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    முபின்தாஜ் பழைய பாளையத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் தனது மொபட்டில் ஈரோடு பெரிய அக்ரஹார வீதியில் இருந்து பழைய பாளையத்துக்கு சென்று வருவார்.

    இன்று வழக்கம்போல் முபின்தாஜ் தனது மொபட்டில் பழைய பாளையம் சங்குநகர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு முன்னால் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. பின்னால் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல்லும் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் எதிர்பாராவிதமாக ஆட்டோவும் முபின்தாஜ் வந்த மொபட்டும் மோதிக்கொண்டன.இதில் நிலை தடுமாறிய முபின்தாஜ் ரோட்டில் விழுந்தார்.

    அந்த சமயத்தில் பின்னால் வந்த தனியார் பஸ்சின் சக்கரம் முபின்தாஜ் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முபின்தாஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து நடந்ததும் பஸ்சின் டிரைவரும் கண்டக்டரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். இந்த விபத்து காரணமாக அங்கு கூட்டம் கூடியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முபின்தாஜின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    அவர் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

    மனைவி முபின்தாஜ் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுத அவரது கணவர்

    விபத்து காணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் முபின்ராஜின் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. #tamilnews
    ×