என் மலர்tooltip icon

    ஈரோடு

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
    சென்னிமலை:

    சென்னிமலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதற்கு 85 மருத்துவ குழுக்களை உருவாக்கி சிகிச்சை கொடுத்து தற்போது கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது.

    அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் நோய் தாக்குதல் இருந்தது. அங்கும் 50 சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நோய் கட்டுக்குள் உள்ளது.

    மேலும் நோய் பரவாமல் தடுக்க இன்னும் 15 நாட்களுக்கு கால்நடை சந்தைகள் நடப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் நோய் பரவாமல் தடுக்கப்படும். சத்தியமங்கலம் பகுதியில் நோய் பரவல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.

    ஈரோடு, திருப்பூர் உள்பட 6 மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பாலி கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது கோமாரி நோய் தாக்குதலில் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து வருகிறோம். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

    கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுத்த பின்பு விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
    அந்தியூரில் சாப்பாடு கொடுக்காததால் கோவிலில் படுத்து தூங்கிய 2 பேரை அடித்து கொன்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    அந்தியூர்:

    அந்தியூரை அடுத்த ஆத்தப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லான் என்கிற நல்லசாமி.

    நேற்று முன்தினம் இரவு, அந்தியூரை அடுத்த கொன்ன மரத்தையன்கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த வெள்ளை பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த வடிவேல், டி.என். பாளையத்தை சேர்ந்த கந்த சாமியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தான்.

    கொலையாளி நல்லானை கைது செய்த அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு மனைவி இல்லை. நான் தனியாக வசித்து வருகிற காரணத்தினால், எனக்கு சாப்பிட உணவு கிடைப்பதில்லை.

    சாப்பாடு கேட்டு எங்கள் ஊரிலும் மற்ற பகுதிகளிலும் பலரிடம் சென்றேன். ஆனால் அவர்கள் எனக்கு உணவு வழங்க மறுத்து விட்டனர்.

    சம்பவத்தன்று இரவு கோவிலில் இருந்த கந்தசாமியிடமும் வடிவேலிடமும் சாப்பாட்டுக்கு பணம் கேட்டேன். அவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர்.

    மேலும் கோவிலுக்கு பக்கத்து வீடுகளில் இருந்தவர்களிடமும் சாப்பாடு கேட்டேன் அவர்களும் இல்லை என்று துரத்தி விட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நான் எங்கள் வீட்டிற்கு சென்று மூங்கில் கம்பை கொலை செய்யும் எண்ணத்தில் எடுத்து வந்தேன்.

    அங்கு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி, வடிவேலுவை மூங்கில் கம்பு மற்றும் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றேன்.

    சந்தியாபாளையத்தை சேர்ந்த பெரியசாமியை அடித்தபோது அவர் தப்பி சென்று ஒளிந்து கொண்டார். அதன்பிறகு ஆத்திரம் குறையாத நான் எங்கள் பகுதியை சேர்ந்த குமாரையும் கத்தியால் குத்தினேன். சாப்பாடு கிடைக்கவில்லை என்ற வெறியால் இதை செய்தேன்.

    இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். #tamilnews
    ஈரோடு அருகே மதுக்கடையை திறங்கள் அல்லது பஸ்சில் சென்று மதுகுடிக்க பஸ் பாஸ் கொடுங்கள் என்று கலெக்டரிடம் குடிமகன் மனு அளித்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. #Drunkard
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே மதுபானக்கடை கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது இருப்பினும் இன்னும் அந்த பகுதியில் மது கடை திறக்கப்படவில்லை.

    நான் ஒரு கூலித்தொழிலாளி தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன் தற்போது மதுகுடிக்க பத்து கிலோ மீட்டர் வரை சென்று மதுஅருந்தி வருகிறேன். இதனால் பஸ் செலவு அதிகமாகிறது. இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.  #Drunkard
    ஈரோட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம் போல் இன்றும் குறைந்தது. தொடர்ந்து விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.10-க்கு விற்கப்பட்டது. இன்று 22 பைசா குறைக்கப்பட்டு ரூ.74.88-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.70.86-க்கு விற்கப்பட்டது. இன்று 37 பைசா குறைந்து ரூ.70.57-க்கு விற்கப்பட்டது.

    தொடர்ந்து பெட்ரோல் -டீசல் விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #Sengottaiyan #GajaCyclone
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருமந்தூர் மேட்டில் நம்பியூர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி அரசு உதவி பெறும் வைர விழா பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சைக்கிள்கள் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பதில் சிரமம் உள்ளதாக துறை ரீதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளது.

    ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து மற்றொரு கல்வி மாவட்டத்திற்கு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. கல்வி மாவட்டங்கள் வேறாக இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது.


    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டிவனத்தில் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜனவரி 1-ந் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #HalfYearlyExam #GajaCyclone
    இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #NEETExam
    கோபி:

    கோபியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு ரூ.26¾ லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி பேசினார்.

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பள்ளி கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    மேலும் பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும் அதன் மூலம் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையவும் இந்த அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி மற்றும் சைக்கிள்கள் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து ஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.



    இந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு தேர்வு மையங்கள் மண்டல வாரியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் ஒரு வார காலத்துக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு உள்ளது. சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

    அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #NEETExam
    பிரசவத்தின்போது தாய், குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது விசாரணை நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 23). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா பிரசவத்துக்காக விஜயமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த நவம்பர் 28-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக காஞ்சனாவை விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள்.

    அங்கு டாக்டர் விஜயசித்ரா பரிசோதனை செய்தபோது காஞ்சனாவுக்கு லேசான வலி மட்டுமே இருந்தது. எனவே முழுமையான வலி வரும்வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறினார். அதன்படி காஞ்சனா அங்கு இருந்தார். மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது பணி நேரம் முடிந்து டாக்டர் வெளியே சென்றுவிட்டார். செவிலியர் சுகன்யா என்பவர் மட்டுமே பணியில் இருந்தார். அவர் காஞ்சனாவுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார்.

    குழந்தையின் தலை பாதி வெளியேவந்த நிலையில் பின்னர் எந்த அசைவும் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால் பிரசவம் சிக்கலானதாக மாறியது. செவிலியர் சுகன்யாவுக்கு உதவிக்கு வேறு யாரும் இல்லை. எனவே அருகில் உள்ள வேறு சுகாதார நிலையங்களுக்கு காஞ்சனாவை கொண்டுசெல்ல முயற்சித்தார்.

    அருகில் உள்ள திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காஞ்சனாவை மிக ஆபத்தான நிலையில் செவிலியர் அனுப்பிவைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கும் டாக்டர்கள் யாரும் இல்லை. உடனே ஆம்புலன்சு மூலம் காஞ்சனா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே காஞ்சனா பரிதாபமாக இறந்தார். பல மணி நேரமாக துடித்துக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக பலியானது. தாயும், குழந்தையும் மரணம் அடைந்த தகவல் காஞ்சனாவின் உறவினர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்தது.

    விஜயமங்கலம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயசித்ரா, செவிலியர் சுகன்யா ஆகியோர் மீது காஞ்சனாவின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். முதலிலேயே ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று இருந்தால்கூட தாயையும், குழந்தையையும் காப்பாற்றி இருக்க முடியும். பணியில் அலட்சியமாக இருந்து தாய் மற்றும் குழந்தை பலிக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, “இதுதொடர்பாக ஆரம்பசுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது துறைரீதியாக விசாரணை நடந்துவருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அதன்பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
    ஜனவரி 1-ந்தேதி முதல் அரசு பள்ளியில் பிரிகே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan #governmentschool #prekglkgukg

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஊராட்சி செம்மம் பாளையத்தில் உள்ள கால்நடை கிளை மருத்துவ மனை தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. கூடுதலாக ஒரு உதவி மருத்துவர் கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன் திறப்பு விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    விழாவில் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட மருத்துவ மனையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம், கோழி வளர்ச்சி திட்டம், கால்நடை பசுந்தீவன திட்டம், கால்நடை காப்பீடு திட்டம் விலையில்லா ஆடுகள் திட்டமும் செயல்படுத்தப்படும்.

    பள்ளி கல்வி துறையில் மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 1-ந்தேதி முதல் அரசு பள்ளியில் பிரிகே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும். அடுத்து வரும் கல்வி ஆண்டில் ஆரம்பம் முதலே இலவச சைக்கிள் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு 11 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் ஒரு ரூபாய் கூட கல்விக்காக கொடுக்க வேண்டியது இல்லை. அனைத்தும் அரசே ஏற்கும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ministersengottaiyan #governmentschool #prekglkgukg 

    ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் பலியான சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூரை அடுத்த குதிரைக்கல்மேட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முருகன் (வயது 22).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நிவிதா (21) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகனை நிவிதா 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நிவிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரசவ சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு ஆபரே‌ஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அன்று இரவு கிரிஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் முருகன் புகார் செய்துள்ளார்.

    தனது மனைவி மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறி உள்ளார். #tamilnews
    பள்ளிக்கு வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனவரி மாதம் சிறப்பு ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

    கஜா புயல் காரணமாக விண்ணப்பம் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேசிய திறன் பயிற்சி கஜா புயல் காரணமாக வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 18 ஆண்டுகளாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. தற்போது புதியதாக 750 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


    அவரிடம் மாணவிகள் பூ வைக்கவும், கொலுசு அணியவும் பள்ளிக்கல்வித்துறை சார்வில் தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  "மாணவர்கள் பள்ளிக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும். மாணவிகள் பூ வைத்து வர எந்த தடையும் இல்லை" என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
    வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் கதிரவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார்.

    அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.


    மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்.

    மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் அரசே 4 சீருடைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும்.

    தமிழக அரசு தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. யூடிப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 628 பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும்.

    மேலும் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    அந்தியூர் அருகே ரூ. 10 லட்சம் கேட்டு லாரி டிரைவரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    கோபி அருகே உள்ள தாழக்கொம்புவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 28). மெத்தை வியாபாரி.

    இவருக்கும் ஆப்பக்கூடல் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவரான வெங்கடேசனுக்கம் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மகா தேவனிடம் வெங்கடேசன் கூறினார். மகாதேவனும் பல தவணையாக ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை வெங்கடேசனிடம் கொடுத்தார்.

    ஆனால் பணத்தை வெங்கடேசன் இரட்டிப்பு செய்தும் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் தரவில்லை. அவரிடம் பல முறை மகாதேவன் கேட்டு பார்த்தார். ஆனால் அதற்கு பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கரட்டுபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் வந்தார்.

    அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் வந்து கொண்டிருந்தபோது மகா தேவன் மற்றும் அவரது நண்பர்களான கோபி ஒட்டன்புதூரை சேர்ந்த கார்த்திகேயன் (29), கோபியை சேர்ந்த முகமது பஷீர் (27), திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த குமார் (28) ஆகியோர் காரில் அங்கு வந்தனர்.

    அவர்கள் வெங்கடேசனை கடத்தி சென்றனர். பின்னர் வெங்கடேசனின் மனைவி சுந்தரிக்கு போன் செய்து, ‘‘உனது கணவரை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க ரூ. 10 லட்சம் பணம் வேண்டும்’’ என்று கூறினர்.

    இதையடுத்து ஆப்பக் கூடல் போலீஸ் நிலையத்தில் சுந்தரி புகார் செய்தார். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வெங்கடேசனை மீட்க பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு கோபி அருகே வெங்கடேசனை மீட்டனர். அவரை கடத்திய மகாதேவன், கார்த்திகேயன், முகமது பஷீர், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    ×