என் மலர்tooltip icon

    ஈரோடு

    அரசாணை நகலை எரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிததாக பள்ளிகூடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரசிங் மூலம் புதிய பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    இன்று தமிழகம் முழுவதும் 250 பள்ளிகள் புதிதாக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 3 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 22 லட்சம் ஆகும்.

    மேலும் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளும் படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

    ரூ.7,500 க்கு சம்பளம் பெறும் சிறப்பு ஆசிரியர்கள் எங்கு பற்றாக்குறை உள்ளதோ அங்கு அவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படுவார்கள். தென் மாவட்டங்களில் கூடுதலாக 6 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் வட மாவட்டங்களில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிய வருகிறது.


    பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    இடைநிலை பணி இடம் மாறுதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வழக்கை தொடர்ந்தவர் ஆசிரியரும் இல்லை. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த அரசானது தூய்மையாகவும், நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுக்கு எந்த பள்ளிகளையும் மூடும் எண்ணம் இல்லை.

    வரும் கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடியில் படிக்கும் 51ஆயிரத்து 214 மாணவர்களை எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நபர் குழு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறது.

    அரசாணை நகலை எரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவுடன் உஷாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி பதவியேற்று ஓராண்டாகிறது. நடந்து முடிந்த தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்று பெற்றுள்ளது. மோடியை வீழ்த்தும் வகையில் ராகுல்காந்தி வளர்ந்துள்ளார்.

    இந்த தோல்வியை ஏற்று கொண்டு மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழிசை பேச்சு மரண ஓலம் போல் உள்ளது. அவர் சொல்வது போல் சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று எதுவும் கிடையாது. தமிழிசை பாரதிய ஜனதாவை விட்டு தனிக்கட்சி தொடங்க வேண்டும். அப்போது தான் அவர் ஒரு வார்டிலாவது வெற்றி பெற முடியும்.


    நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காமல் நிம்மதியாக இருக்க வேண்டும். பா.ஜனதா வலுவிழந்து வருகிறது என்று ரஜினி கூறியதை நான் வரவேற்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் பி.ஜே.பி.யுடன் உஷாராக இருக்க வேண்டும்.

    நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்வது மோடியின் செயல்பாடுதான் காரணம். தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    கஜா புயல் பாதிப்பிலும் கமி‌ஷன் அடிக்க தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. சென்னிமலையில் பெட்சீட் தேங்கி கிடக்கிறது. இதை வாங்காமல் வெளி மாநிலங்களில் கமி‌ஷனுக்காக கொள்முதல் செய்துள்ளனர்.

    இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசீட் வாங்காது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். #Results2018 #Modi #EVKSElangovan
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் முன்னணி பெற்றுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் வெற்றி உறுதியாகி விட்டது.

    இந்த தேர்தல் முடிவு மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். காங்கிரசையும் ராகுலையும் மக்கள் ஏற்று கொண்டு உள்ளார்கள். இந்த தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக நல்ல பிரகாசம் உருவாகி உள்ளது.


    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்த வரை அங்கு சந்திரபாபு நாயுடுயுடன் கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. சந்திரபாபு நாயுடுவிடம் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் அங்கும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

    தமிழகத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க.வையும், பாரதிய ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.  #Results2018 #Modi #EVKSElangovan
    ஈரோடு சூளையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு சூளையை அடுத்த காவிரி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 49) தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பூவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றும் மூர்த்தி வழக்கம்போல் குடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென படுக்கை அறைக்கு சென்ற மூர்த்தி கதவை தாள்போட்டு தூக்கில் தொங்கினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூவதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபடி, கைப்பந்து, எறிப்பந்து ஆகிய 3 போட்டிகள் உடலை திடமாக இருக்க உதவும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
    ஈரோடு:

    ஈஷா யோகா மையம் சார்பில் 14-வது ஈஷா கிரா மோத்சவம் விழா ஈரோடு அருகே கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலியில் நேற்று நடைபெற்றது.

    விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமோத்சவம் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு என்பது தன்னம்பிக்கையுடனும், கவுரவத்தை பாதுகாக்க தைரியமாகவும் வலுவாகவும் இருக்க உதவுகிறது. பள்ளிக் கூடங்கள் திறமைகளை ஊக்குவிப்பதற்கான மையங்கள் ஆகும். எனவே பள்ளிக்கூடங்களில் பாடங்களுடன் சேர்ந்து விளையாட்டும் கற்று கொடுக்கப்படுகிறது.

    சுவாமி விவேகானந்தர் கூறும் போது வலிமை என்பது வாழ்க்கை, பலவீனம் என்பது மரணம் என்று குறிப்பிட்டு உள்ளார். நீ உன் மீது நம்பிக்கை கொள்ளாத வரை நீ கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாதே என்றும் கூறியுள்ளார். விளையாட்டு ஆரோக்கியமான உடலையும், மன தைரியத்தையும் தருகிறது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.

    விளையாட்டில் பங்கேற்றால் போட்டித்திறன், நேர மேலாண்மை, குழுப் பணி ஆகியவற்றின் திறமைகள் வளர்ச்சி பெற உதவுகிறது. உடலின் இயல்பான திறமைகளை மீறி போட்டியிடுவதற்கும், உற்சாகம் அடைவதற்கும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஈஷா கிராமோத்சவத்தில் கலந்து கொண்ட 40 ஆயிரம் வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி உள்ளனர். அவர்களில் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி இறுதி போட்டியில் விளையாடினார்கள். இதுபோன்று வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு உயர்த்தும் வகையில் கிராமப்புற மக்களை உருவாக்கும் ஈஷா அறக்கட்டளையின் செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.

    கபடி என்பது தமிழ்நாடு மாநில விளையாட்டு. இது ‘‘சடுகுடு’’ என்கிற தமிழ்மொழி வார்த்தையில் இருந்து வந்தது.

    கடந்த 1964-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கைப்பந்து சேர்க்கப்பட்டது. இது உலகம் முழுவதும் விளையாடிய பிரபலமான விளையாட்டு ஆகும். 1940-ம் ஆண்டிலேயே ஆசியாவிலேயே இந்தியாவில் முதல் முதலாக பெண்கள் எறிப்பந்து போட்டியை விளையாடியது பலரும் அறிந்து இருக்கலாம்.

    கபடி, கைப்பந்து, எறிப்பந்து ஆகிய 3 போட்டிகளும் அனைவருக்கும் பொதுவானது. அதன் விதிமுறைகள் எளிதாக இருப்பதால் அனைவராலும் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களின் உடல் திடமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் 3 விளையாட்டுகளும் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதில் ஆச்சரியம் இல்லை.

    இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
    தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் என்றும் நிரந்தரம் கிடையாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #dmk #bjp #pmmodi

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள 46 புதூர் பகுதியில் பாபாஜி யோகி ராம் சுரத் என்பவருடைய தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை பார்வையிட மத்திய மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் இன்று ஈரோடு வந்தார்.

    தியான மண்டபத்தை பார்வையிட்ட மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணைகட்டி விவசாயிகளின் வயிற்றில் அடிக்க கூடாது. எனவே இந்த திட்டத்தை கர்நாடக அரசு முழுமையாக கைவிட வேண்டும்.

    மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள் வரும் போது அதில் பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசை குறை சொல்ல கூடாது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை என்று கூறுகிறார்கள். கேரளாவில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட மோடி தமிழகத்திலும் ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பார்வையிட்டுள்ளனர்.

    தி.மு.க.தலைமையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் இணைந்து பாரதிய ஜனதாவை எதிர்க்க போகிறார்களாம். இதை கேட்டு நகைப்பு தான் வருகிறது.

    ஏனெனில் தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் என்றும் நிரந்தரம் கிடையாது. தி.மு.க. பக்கம் அவர்கள் நிரந்தரமாக இருந்ததும் கிடையாது.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #dmk #bjp #pmmodi 

    இருதய ஆபரேஷனுக்காக உண்டியலில் சேமித்த பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்கு சென்னை போலீஸ்காரர் மகள் வழங்கினார். #GajaStorm
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலு (வயது 38). இவர் சென்னையில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (37). இவரும் சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்கள் சென்னை ஆவடியில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் இசனா பாலு (7).

    கணவன், மனைவி 2 பேரும் சென்னையில் வசித்து வருவதால், இசனா பாலு சத்தியமங்கலத்தில் உள்ள தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். மேலும் அவள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இசனா பாலுவுக்கு 3 வயது இருக்கும்போது இருதய பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. மேலும் 10 வயது ஆகும்போது 2-வது தடவையாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வந்தனர். விழாவுக்கு தனது பாட்டி பூங்கோதையுடன் வந்த இசனா பாலு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் வழங்கினார். அப்போது சிறுமியின் பாட்டி பூங்கோதை கூறுகையில், ‘இவள் (இசனா பாலு) எனது பேத்தி. இவளுக்கு ஏற்கனவே இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தன்னுடைய இருதய ஆபரேஷன் செலவுகளுக்காக உண்டியலில் கடந்த 2 ஆண்டுகளாக பணம் சேர்த்து வந்தாள். தற்போது கஜா புயல் நிவாரணத்துக்காக பலரும் நிதி வழங்குவதை தெரிந்து கொண்டு அவள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுவதையும் அமைச்சரிடம் வழங்குகிறாள்,’ என்றார். உண்டியலில் ரூ.950 இருந்தது.

    அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘இந்த சிறுமியின் 2-வது இருதய ஆபரேஷனுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கும்,’ என்றார். #GajaStorm
    கொடுமுடி அருகே லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே பலியானார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு அடுத்த வடுகனூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவரது மனைவி மீனாட்சி (55).

    நேற்று துரைசாமி தனது மனைவி மீனாட்சியுடன் செம்பாகவுண்டனூரில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் மாலையில் மோட்டார் சைக்கிளில் ஈரோடு-கருர் மெயின் ரோட்டில் வெள்ளோட்டம் பரப்பு அருகே எல்லையூர் பிரிவில் வந்து கொண்டிருந்தனர்.

    வீட்டுக்கு செல்வதற்காக திரும்பும்போது கரூர்- ஈரோடு மெயின் ரோட்டில் எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.

    இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே மனைவி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். துரைசாமி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோபி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி அடுத்த கரட்டூர் மேடு அத்தாணியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 42) கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் அரசூர்-நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டரோம் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார். அந்த பள்ளத்தில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

    இதில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, முத்துசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 267 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்டது. இதில் உணவு, பொருட்கள், உலகில் உள்ள உயிரினங்கள், நகரும் பொருட்களும் பொதுமக்களும், வேலை, இயற்கை ஆதாரங்கள், இயற்கை நிகழ்வுகள், கணிதம் ஆகிய 8 தலைப்புகளில் கண்காட்சி நடந்தது.

    இந்த கண்காட்சியில் 112 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மொத்தம் 267 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். அதில் சிறந்த கண்டுபிடிப்புகளை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.

    ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் முதல் 3 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் பரிசாக தலா ரூ.1,500, 2-வது பரிசாக தலா ரூ.1,000, 3-வது பரிசாக தலா ரூ.500 என மொத்தம் 24 மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான வினாடி- வினா போட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. இதில் முதல் இடம் பெற்ற மாணவ- மாணவிகள் கோவை மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
    சென்னிமலை அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் உள்ளது சி.எஸ்.ஐ. காலனி. இங்கு வசிப்பவர் தனபாக்கியம் (65) இவரது கணவர் சாமுவேல், கடந்த 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனால் தனபாக்கியம் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனபாக்கியம் சென்று விட்டார்.

    நேற்று மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியானார். வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 5½ பவுன் தாலிக்கொடி, 1ž பவுன் மோதிரம் ஒன்று ½ பவுன் மோதிரம் ஒன்று மற்றும் ½ பவுன் தோடு திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தனபாக்கியம் தகவல் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    கோபி அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற முதியவரிடம் ரூ.2.90 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கட்டிக்கல் மேட்டை சேர்ந்தவர் காளியண்ணன் (வயது 70).

    காளியண்ணன் நேற்று நம்பியூர் சென்றார். அங்கு பாங்கியில் ரூ.3 லட்சம் எடுத்தார். பிறகு தன் மருமகளுக்கு 10 ஆயிரம் கொடுத்தார். பிறகு ரூ.2.90 லட்சத்தை வைத்துக் கொண்டு தனது ஊருக்கு பஸ்சில் புறப்பட்டார்.

    பஸ்சை விட்டு இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். வண்டியை ஓட்டியவன் தலையில் ஹெல்மட் அணிந்திருந்தான்.

    காளியண்ணன் தனது வீட்டின் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவன் காளியண்ணன் கையில் இருந்த ரூ.2.90 லட்சத்தை பறித்தான். பிறகு இருவரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதை கண்ட அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தார்கள். எனினும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

    இந்த துணிகர சம்பவம் தொடர்பாக காளியண்ணன் நேற்று இரவு 10:30 மணியளவில் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×