என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். #Farmer
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ள மாதள்ளி என்ற ஊரை சேர்ந்தவர் பிரபுசாமி (வயது 60) விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். யானை மற்றும் காட்டு பன்றிகள் தொல்லை இருப்பதால் தினமும் இரவு தனது தோட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்காக செல்வார். அங்கேயே தூங்கிக்கொள்வார்.

    நேற்று இரவும் இதேபோல் பிரபுசாமி தனது தோட்டத்துக்கு காவல் பணிக்காக சென்றார். இரவில் தகர டப்பாவால் அடித்தப்படி யானை மற்றும் காட்டு பன்றிகள் உள்ளே நுழையாதபடி சத்தம் போட்டப்படி தனது தோட்டத்துக்குள் சுற்றி வந்தார். அப்போது அங்கு ஏற்கனவே புகுந்திருந்த ஒரு யானை பிரபுசாமியை தூக்கி வீசியது. இதில் அவரது தலை மற்றும் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் தூக்கி வீசியதில் அவரது காலும் முறிந்து படுகாயத்துடன் கிடந்தார்.

    அவர் போட்ட சத்தத்தில் பக்கத்து விவசாய தோட்டத்தில் காவல் பணியில் இருந்த மற்ற விவசாயிகள் ஓடிவந்தனர். யானை காட்டுக்குள் நுழைந்ததும் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு படுகாயத்துடன் சத்தம் போட்டப்படி கிடந்த அவரை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே விவசாயி பிரபுசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி அருகே காதலி கண் முன்பு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காதலனை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சித்தோட்டை அடுத்து நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் சிவானந்தம் (23). பொறியியல் கல்வி படித்துள்ள இவர் நசியனூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    அதே நிறுவனத்தில் பவானியை அடுத்த ஒரிச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த மணியன் மகள் பூர்ணிமா (21) வேலை செய்து வந்தார். ஒரே நிறுவனத்தில் இருவரும் வேலை செய்ததால் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

    கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து இருவரின் வீட்டிலும் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு இருந்த போதிலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பச்சையம்மன் கோவிலில் பூர்ணிமாவின் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சிவானந்தனுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

    பின்னர் இருவரும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பவானி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    ஒரு வழிப்பாதையில் கார் சென்று கொண்டிருந்த போது பவானி தலைமை தபால் நிலையம் அருகே காரை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த மணமகன் சிவானந்தனை அடித்து, இழுத்துச் சென்று மற்றொரு காரில் கடத்திச் சென்றது.

    இதை தடுக்க முயன்ற பூர்ணிமாவை கீழே தள்ளிய கும்பல் மிரட்டி விட்டு சென்றது. இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன் பிறகு உறவினர்கள் அனைவரும் பவானி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இது தொடர்பாக மணமகள் பூர்ணிமா பவானி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அதில் தானும் சிவானந்தமும் திருமணம் செய்து கொண்டு திருமணத்தை பதிவு செய்ய எனது சகோதரர் பிரபு, அண்ணி பிரியா, பெரியம்மா கருப்பாயி மற்றும் கணவரின் நண்பர் சதீஷ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தோம்.

    தபால் நிலையம் அருகே சென்றபோது 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரில் வந்த சுமார் 20 பேர் காரை வழிமறித்து எனது கணவரை கடத்திச் சென்றனர்.

    நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் முருகேசன், சண்முகசுந்தரம், பிரகாஷ், புவனேஷ், அருண், சுரேஷ், ரமேஷ், ஜீவா, கோகுல், நந்தகுமார், கவின், மணிகண்டன் மற்றும் பெயர் தெரியாத 2 பேர் சேர்ந்து காரிலிருந்து வெளியே தர தரவென இழுத்து உதைத்து எனது கணவரை கடத்திச் சென்றனர்.

    இதனை தடுக்க முயன்றும் முடியவில்லை. எனவே, எனது கணவரை மீட்டுத்தர வேண்டும். எனக்கும் எனது கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட கூறப்படும் சிவானந்தம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அவர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அவர் உண்மையில் கடத்தப்பட்டாரா? நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. பூர்ணிமாவிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    திருமாவளவனை இழிவாக பேசிய எச். ராஜாவை கைது செய்ய கோரி போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை இழிவாக பேசி வரும் எச்.ராஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செய லாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடந்தது. 

    மாநில முதன்மை செயலாளர் பாவரசு, மேலிட பொறுப்பாளர் சிவசெல்லபாண்டியன், தொகுதிச் செயலாளர் தம்பிராஜன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பி னார்கள். 

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    டி.என்.பாளையம் அருகே கம்ப்யூட்டரில் அச்சிட்ட போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

    டிஎன்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி. புதூர் நால்ரோடு குள்ளநாய்க்கனூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் என்கிற பழனிச்சாமி (வயது 42).

    இவர் கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட போலி லாட்டரி சீட்டுகளை டி.என்.பாளையத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பரிசு விழும் என்று ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் சட்ட விரோதமாகவும், ரகசியமாகவும் விற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கள்ளிப்பட்டி போஸ் வீதியை சேர்ந்த தவசியப்பன் (49), என்பவர் மகேந்திரனிடம் போலி லாட்டரி சீட்டு என்று அறியாமல் லாட்டரி வாங்கி வந்ததாக தெரிகிறது.

    நேற்று மாலை டி.ஜி. புதூரில், காளியூர் பிரிவு தம்பாக்கவுண்டர் ஓட்டல் அருகே தவசியப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை, மகேந்திரன் போலி லாட்டரி சீட்டுகளை வாங்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.

    ஆனால் தவசியப்பன் லாட்டரி வாங்க மறுத்தார். மேலும் போலீசிடம் சொல்லி விடுவேன் என்று தவசியப்பன் சொன்னதாக தெரிகிறது.

    இதனால் மகேந்திரன் ஆத்திரம் அடைந்து தவசியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் தவசியப்பன் வைத்திருந்த ரூ.200 பறித்துக் கொண்டு, 5 போலி லாட்டரி சீட்டுகளை கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து பங்களா புதூர் போலீஸ் நிலையத்தில் தவசியப்பன் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரன் என்கிற பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

    கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட போலி லாட்டரி சீட்டுகள் எங்கு அச்சிடப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது? யாரெல்லாம் இந்த போலி லாட்டரி மோசடி விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர்? என விசாரணைக்கு பின் தெரியவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    ஈரோடு அருகே கணவரை இழந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம், எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி சுதா (வயது 41). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    சுதா ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சுதாவின் கணவர் ஜெகநாதன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

    நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் சுதா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது அறைக்கு சென்ற சுதா திடீரென வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகள்கள் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி சுதா இன்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். சுதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்ற காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாடங்களை பாதியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையில் கரிகுலம் என்று சொல்லப்படுகிற பாடங்களை உருவாக்குகின்றது.

    தமிழகத்தில் இந்த ஆண்டு கொண்டு வருகிற புதிய பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. இனி கல்லூரிகளுக்கு சென்றால் கூட அவர்கள் பாட திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டிய அளவிற்கு உருவாகி உள்ளது.

    வருகிற நிதி ஆண்டில் பாடங்களை குறைத்து தேர்வை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாணவர்களுக்கு கூடுதல் சுமை உள்ளதாகவும் நாட்கள் போதவில்லை என்றும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    மத்திய மந்திரி கூறியிருப்பது சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மட்டும் தான். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் போன்ற பள்ளிகளுக்கு அவரவர் சிலபஸ் என்பது தனி வகையாக இருந்து வருகிறது.



    மத்திய அரசின் மாணவர்கள் திறனாய்வு தகுதி தேர்வுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாணவர்களுக்கு நீச்சலை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும். கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தடுக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் தீயில் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் வெல்டிங் வேலைகள் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது.

    நேற்று இரவு இங்கு ஊழியர்கள் பணி செய்தனர். இரவு 10 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டது. ஊழியர்கள் வெளியேறினர்.

    இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் அந்த நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    அவர்கள் அந்த நிறுவனத்தில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த நிறுவனத்தின் அலுவலக அறையிலும் தீப்பற்றி எரிந்தது.

    அந்த அறை உள் பக்கமாக பூட்டி கிடந்தது. அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    அப்போது அங்கு ஒருவர் தீயில் கருகி பிணமாக கிடந்தார். அவர் அந்த நிறுவனத்தில் அச்சு தயாரிப்பாளராக பணிபுரிந்த ஆறுமுகம் (வயது 45) என்பது தெரியவந்தது.

    அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் அவ்வப்போது தான் இங்கு வந்து அச்சு தயாரிப்பில் ஈடுபடுவார். நேற்று இங்கு வந்த அவர் எப்போது அலுவலக அறைக்குள் சென்றார்? என்பது தெரியவில்லை.

    நிறுவனத்தை மற்ற ஊழியர்கள் பூட்டி சென்ற பின்னர் ஆறுமுகம் உள்ளே சென்றது எப்படி? என்பதும் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.

    தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. ராஜாகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் எட்வர்ட்ராஜ், ராம்பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். அந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை துரிதப்படுத்துப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்கு பிறகு வராவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது.

    அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையை தலைமை இடமாக கொண்டு 7 மண்டலங்களில் செயல்பட்டு வந்த அரசு தேர்வுத் துறை அலுவலகம் தற்போது 32 மாவட்டங்களிலும் உதவி இயக்குனர் அலுவலகமாக செயல்பட உள்ளது. இதன்மூலம் குரூப் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

    அதுமட்டுமின்றி அவர்கள் என்னென்ன தேர்வு எழுதலாம் அதற்குரிய சந்தேகங்கள் இனி அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த புதிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் உள்பட 10 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஒரு வாரம் வரை காத்திருப்போம். அப்படியும் வரவில்லை என்றால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


    மாணவர்களுக்கு வழங்குவதை போன்று ஆசிரியர்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் மடிக்கணினி வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் மாணவர்களின் ஆதார் பதிவு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்கள் பற்றிய விவரம் மதிப்பெண்களை தெளிவாகத் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி உடல் நலக்குறைவால் பங்கேற்கவில்லை. #Elephants #Rejuvenationcamp
    பவானி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நல்வாழ்வு (புத்துணர்வு) முகாம் நடந்து வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டும் இன்று யானைகள் நல வாழ்வு முகாம் இன்று மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் வந்து உள்ளன.

    இதில் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பவானி கோவில் யானை வேதநாயகி பங்கேற்கவில்லை.

    உடல் நலக்குறைவால் யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு வேதநாயகி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. #Elephants #Rejuvenationcamp

    தாய், தந்தையின்றி குற்ற செயலில் ஈடுபட்டு வந்த வாலிபரை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுரை கூறி பழ வியாபாரத்தில் ஈடுபட வைத்துள்ளார். #Fruitbusiness #erodebusstand

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது19). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து விட்டார்.

    தனது பாட்டி பாதுகாப்பில் மணிகண்டன் வளர்ந்து வந்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் ஈரோடு பஸ் நிலையத்தில் சுற்றி வந்து சிறு சிறு திருட்டு சம்பவ செயலில் ஈடுபட்டு வந்தார்.

    இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு மணிகண்டன் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

    பின்னர் மணிகண்டனை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் அழைத்து திருந்தி வாழுமாறு அறிவுரை வழங்கினார். இதை ஏற்று மணிகண்டன் தான் திருந்தி வாழ்வதாக எஸ்.பி.யிடம் உறுதி கூறினார்.

    ஆனால் மணிகண்டனுக்கு யாரும் வேலை கொடுக்க முன் வரவில்லை. இதையறிந்த எஸ்.பி. சக்திகணேசன் மணிகண்டனுக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்ய உதவினார்.

    இதையடுத்து தற்போது மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். எஸ்.பி.சக்திகணேசனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.  #Fruitbusiness #erodebusstand

    ஈரோட்டில் இன்று விடுமுறை கேட்டு ஆம்புலன்சில் அரசு பஸ் டிரைவர் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது35). இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பாபு தமிழக போக்குவரத்து கழகத்தில் கடந்த 5 வருடமாக பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பாபுக்கு நேற்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    பாபு மனைவி மலர்கொடி சென்னிமலை ரோடு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கிளை மேலாளரிடம் நடந்த விவரங்களை கூறி கணவருக்கு விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் கிளை மேலாளர் விடுமுறை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று பாபு தனது மனைவியுடன் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்துக்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாபு தனது மனைவியுடன் துணை மேலாளர் அறைக்கு சென்று துணை மேலாளரை சந்தித்து விடுமுறை கடிதத்தை கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திரும்பி சென்றார். 

    கொடுமுடி அருகே வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டை புதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி அருக்காணி (வயது 70).

    இவர்களுக்கு திலகவதி (49), செல்வி (40) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. திலகவதி கரூரிலும், செல்வி சுமைதாங்கி புதூரிலும் வசிக்கிறார்கள்.

    செல்வியின் கணவர் இறந்துவிட்டார். எனவே செல்வி வீட்டில் முத்துசாமி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அருக்காணியும் அங்கு சென்றிருந்தார். பின்னர் சம்மங்குட்டைபுதூருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அருக்காணி பிணமாக கிடந்தார். கட்டிலில் கிடந்த அவரது வாய் பகுதியில் பலத்த காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பெருந்துறை டி.எஸ்.பி., கொடுமுடி போலீஸ் இன்ஸ் பெக்டர் மணிகண்டன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததையும், அருக்காணி டி.வி. பார்த்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.

    டி.வி. காலை 9 மணி வரை ஆப் செய்யப்படவில்லை. இதனால்தான் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இரவு 10.30 மணிக்கு மேல்தான் யாரோ அருக்காணியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    அருக்காணியின் வாய் பகுதியில் கொலையாளி தாக்கியுள்ளார். அந்த தாக்குதலால் அருக்காணியின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல பற்கள் உடைந்துள்ளன. இதனால் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

    முதலில் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருக்காணி ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக பேசியுள்ளனர். போலீசார் வந்து பார்த்த பின்னர்தான் வாய் பகுதியில் கொலையாளி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தாராம். சமீபத்தில் 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 லட்சம் பணம் வந்தது. அதில் ரூ. 4 லட்சத்தை மகள்களுக்கு கொடுத்தனர். ரூ. 2 லட்சத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்ததாகவும், மீதி பணத்தை வட்டிக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனவே வட்டிக்கு பணம் பெற்றவர்களிடம் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை நடந்தபோது அருக்காணி சத்தமிட்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளி வாயில் தாக்கினாரா? அல்லது அருக்காணி யாரையாவது திட்டியதால் வாயில் தாக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    அருக்காணி நகை அணிந்திருந்ததாகவும் அந்த நகையை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.சிலர் அருக்காணி நகையை அவ்வப்போது கழற்றி வைத்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

    எனினும் அந்த நகைக்காக அருக்காணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×