என் மலர்
ஈரோடு
பெருந்துறை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மூத்த தலைவர் பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன், மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தேசிய செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் மோடி அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. நாட்டினுடைய பொருளாதாரம் சீர்குலைந்து இருக்கிறது. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இந்தியாவில் மதச்சார் பற்ற ஒரு ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். மோடி தலைமையில் ஆட்சி அமைந்து ஐந்தாண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில், நாட்டினுடைய நிலைமையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டை நிர்வகிப்பதில் மோடி படுதோல்வி அடைந்திருக்கிறார்.
மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கருப்பு பணம் பற்றி அவர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை.

அதற்கு மாறாக தொழில்கள் முடங்கி போயிருக்கின்றன. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று உரிய புரிதல் இல்லாமல் அவர்கள் செயல்படுத்திய காரணத்தால் இன்றைக்கு சிறு குறு தொழில்கள் நொடிந்து போய் இருக்கின்றன. பலருக்கு வேலைவாய்ப்பு பறி போயிருக்கிறது.
விவசாயத்துறை மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. விவசாயிகள் நாடு முழுவதும் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்கு உட்படுகிறார்கள். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றப்பட வில்லை.
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். பசுவின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கி இருக்கிறார்கள். எனவேதான் இன்றைக்கு நாடு காப்பாற்றப்பட வேண்டும்.
இந்தியாவுடைய மதச் சார்பற்ற ஜனநாயக பன் முகத்தன்மை கொண்ட ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இவை நடைபெற வேண்டுமானால் பாரதீய ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை ஆளும் கட்சி என்பது இன்றைக்கு மத்திய அரசின் கைகளுக்கு கட்டுப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. அதை அவர்களே பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்கள். மத்தியில் உள்ள மோடி ஆட்சியை நிபந்தனையற்று ஆதரிப்போம் என அவர்களே சொல்கிறார்கள்.
அதனால் தமிழ்நாட்டின் உரிமை, நலன் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் ஒரு மாற்று மதச் சார்பற்ற ஜனநாயக ஆட்சி அமையவேண்டும். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் அமைக்க வேண்டும். இங்கு பாரதீய ஜனதா காலூன்ற இடம் இல்லை என்ற நிலையை தமிழ்நாட்டு மக்கள் நிரூபணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு ராஜா கூறினார். #draja #pmmodi #indiacommunistparty
பெருந்துறை:
பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சுமார் 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் போலீசார் மிரட்டி அத்து மீறும் செயலில் ஈடுபடுகின்றனர்.
அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு செல்லக் கூடாது என சர்வாதிகார போக்குடன் ஈரோடு மாவட்ட போலீசும் செயல்பட்டு வருகிறது. எங்களது கட்சியின் மூத்த வக்கீல் மோகன் மீது வழக்கு போட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம். எங்களது மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ளது.
அவரது மகள், மருமகன் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி இந்த இடத்தில் நீங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது மந்திரி உத்தரவு என மிரட்டியுள்ளனர்.

இது குறித்து கேட்டதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதால் தான் தடுத்து நிறுத்தினோம் என போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே மேற் கொண்டு இதுபோன்ற மிரட்டல்கள் நடக்குமாயின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம்.
இவ்வாறு முத்தரசன் கூறினார். #mutharasan #MinisterDindigulSrinivasan
ஈரோடு:
ஈரோடு காங்கிரஸ் முதலாவது மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதலாவது மண்டல தலைவர் அயுப்அலி தலைமை தாங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் முன்னிலை வகித்தார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பொதுச்செயலாளர் அருள் பெத்தையா ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எச்.ஐ.வி.தோற்று உள்ள ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது போல் வேறு சில பெண்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகின்றன. ஆனால் இந்நாள் வரை சுகாதாரத் துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேச வில்லை.
இந்த விஷயத்தில் அவர் அலட்சியமாக செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசையும், மத்திய மந்திரிகளையும் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.
கஜா புயல் நிவாரணத்திற்காகவோ, தமிழக மக்கள் நலனுக்காகவோ அவர்கள் சந்திக்கவில்லை. தேசிய அளவில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசோ மாநில அரசோ அவர்களை கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் தற்போது உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தமிழக அரசு சார்பில் அதிகாரிகளோ அமைச்சர்களோ நேரில் சந்தித்து இதுவரை பேசவில்லை.
ஆனால் காங்கிரஸ் விவசாயிகள் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

ஆனால் 4½ ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் மோடி இதுவரை விவசாயிகளுக்காக செய்தது என்ன? 41 முறை அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதன்மூலம் ரூ. 2,500 கோடி வரை செலவாகியுள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா நிச்சயம் அதற்கான விளைவுகளை சந்திக்கும். பாரதீய ஜனதாவையும் பிரதமர் மோடியையும் மக்கள் நிராகரிப்பார்கள் பாரதீய ஜனதா படுதோல்வி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார். #elangovan #parliamentaryelection #pmmodi
ஈரோடு:
விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு அருகே மூலக்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்து பேசினார்.
அப்போது விவசாயிகளி டம் போராட்டத்தின் தன்மை குறித்தும், போராட்டத்தினால் அரசின் செயல் பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அவர் சந்தித்து பேசினார். அதன்பின்னர் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறீர்கள். வெறும் போராட்டம் மட்டும் நடத்தினால் இந்த அரசு செவி சாய்க்காது என்று கருதி, குறிப்பிட்ட சிலர் தங்களை வருத்திக்கொள்ள கூடிய உண்ணா நோன்பையும் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு வேதனைப்படுகிறேன்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு ஏற்கனவே தி.மு.க. சார்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளேன். அதில் அரசு உடனடியாக தலையிட்டு போராட்டக்குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதே கோரிக்கையை ஆளும் கட்சி தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
உயர்மின் கோபுரங்களை அமைக்க யாரையும் கலந்து பேசாமல் சர்வாதிகார தன்மையுடன் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. உயர் அதிகாரிகளும் வந்து சந்திக்கவில்லை. மாவட்ட கலெக்டர் கூட வந்து சந்திக்க வில்லை என்று வேதனையுடன் போராட்டக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அவர்களையும் அரசு அழைத்து பேசவில்லை. அதே நிலைதான் விவசாயிகளுக்கும் உள்ளது.
வருகிற 2-ந் தேதி சட்டமன்றம் கூட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உங்களுக்காக நான் குரல் கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். உங்களுடைய போராட்டம் வெற்றி பெற தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை சந்தித்து பேசும்போது, உடலை வருத்திக்கொண்டு கண்டிப்பாக போராட்டம் நடத்த வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள் என்றேன். போராட்டம் நடத்துங்கள். ஆனால் உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை ஏன் கைவிடக்கூடாது? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு தான் முக்கியம். எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று சொன்னது, விவசாயிகளின் வேதனை எவ்வளவு என்று புரிகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கு உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக சட்டமன்றத்தில் நிச்சயமாக நாங்கள் குரல் எழுப்புவோம்.
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி உள்பட பலர் உடனிருந்தனர். #MKStalin #Farmers
ஈரோடு:
ஈரோடு மூலக்கரை பிரிவில் இன்று விவசாயிகள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள்.
இன்று (வியாழக்கிழமை) அவர்களின் உண்ணாவிரதம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.
காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஈரோடு அடுத்த மேட்டுக் கடை பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலை முதல் எந்த கடையும் திறக்கப்பட வில்லை. 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் மேட்டுக்கடை பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணி முதல் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடகா மாநில எல்லையில் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 28).
இவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் சங்கரப்பா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வீட்டில் தாளவாடிக்கு போய் விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அவர் கும்டாபுரம் அருகே ரோட்டோரம் உள்ள கும்பேஸ்வரா கோவில் அருகே சங்கரப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அருகே அவர் கொண்டு வந்த பை ஒன்று கிடந்தது. அதில் ஒரு டைரி, ஒரு சாக்லெட் இருந்தது. உடலில் எந்த வித காயமும் இல்லை.
அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தினால் தெரியவரும்.
டிஎன்.பாளையம்:
திருப்பூரை சேர்ந்தவர் முகமது சேக் அப்துல் மகன் முகமது சதாக் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று அரசு விடுமுறை என்பதால் முகமது சதாக், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் பிலால் (29) என்பவருடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தார். கொடிவேரி அணையில் இருவரும் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முகமது சதாக் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று காலை பங்களா புதூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மாணவனின் உடலை தேடி வந்தனர்.
இதற்கிடையே அணையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் அணையில் மூழ்கி பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி அளவில் ஈரோடு வருகிறார்.
அன்று ஈரோடு பெருந்துறை ரோடு ஆலயமணி மகாலில் ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் 2 ஆயிரம் பேர் தி.மு.க.வில் சேர்கிறார்கள்.
முன்னதாக மு.க.ஸ்டாலின் ஈரோடு மூலக்கரை பிரிவில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்.
அங்கு அவர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார். சிறிது நேரம் போராட்டத்தில் அவரும் பங்கேற்று பேசுகிறார்.
மேலும் ஈரோடு முனிசிபல் காலனியில் மறைந்த தி.மு.க.முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.
ஈரோடு வரும் மு.க.ஸ்டாலினை வரவேற்கவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மாநில, மாவட்ட பகுதி ஒன்றிய பேரூர், ஊராட்சி, கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள்அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி கூறி உள்ளார். #DMK #MKStalin
ஈரோடு:
ஈரோடு மாவட்ட இறகுபந்து கழக தலைவர் செல்லையன் என்கிற ராஜாவுக்கு பாராட்டு விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் நடந்தது.
விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக இறகு பந்து கழகத்தின் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. டோனமெட் சாப்ட்வேர் என்ற புதிய சாப்ட்வேர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் வெளிப்படை தன்மை இருப்பதால் தகுதியான வீரர் -வீராங்கனைகள் மட்டுமே வெளிமாநிலங்களுக்கு சென்று விளையாட முடியும்.
நான் அரசியல்வாதி அல்ல. அதுபற்றி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நமக்கு போதுமான மழை இருக்கிறது. ஆனால் அதை நாம் சேமிக்க தவறிவிட்டோம். காவிரியில் இந்த ஆண்டு 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. காவிரி பிரச்சினை என்பது கடந்த 140 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆந்திரா, கர்நாடகாவை விட தமிழகத்தில் தான் அதிக மழை இருக்கிறது. ஆனால் கடந்த சில காலங்களாக மழைநீரை தேக்கி வைக்க நாம் வசதிகள் ஏதும் செய்யவில்லை. அத்திக்கடவு -அவிநாசி திட்டம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அப்போது அதன் திட்ட மதிப்பு ரூ.13 கோடி.
ஆனால் இன்று அதன் திட்ட மதிப்பு ரூ.3 ஆயிரத்து 200 கோடி. ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என்றாலும் அந்த திட்டத்தை நிறைவேற்றி தான் ஆகவேண்டும். நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் என்னுடைய நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்தியூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரண்டு மாதங்களுக்கு முன்னர் காவிரியிலும் பவானியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் தற்போதுவரை கொங்கு மண்டலம் முழுவதும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.
தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் நிலத்தடி நீர் மேம்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு அல்லாமல் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டுதான் இருக்கிறது. குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனை வராத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு எதிரானது மத்திய அரசு என விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி கைது செய்யலாம் என சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
இந்த இரண்டு காரணங்களால் தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தோற்றதற்கு காரணம், இதனை அதன் தலைவர்களும் தற்போது உணர்ந்திருக்கின்றனர்.
விவசாயிகளை வாழ வைக்கின்ற வகையில் எந்த ஒரு முயற்சியும் மத்திய அரசு எடுக்காதது வேதனையளிக்கிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு அறிவிக்காமல் இருக்கிறது.
மேகதாது அணை அதேபோல் கேரளாவில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து அதன் மூலம் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான அரசாகவே செயல்படுகிறது.
எனவே விவசாயிகள் வாழ வைக்கின்ற வகையிலும் தமிழகம் பயன்பெறும் வகையிலும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மிக குறைவான வாக்குகளை பெறும்.
ராகுல் பிரதமராக ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் திமுக எடுத்த முடிவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Eswaran #MKstalin #Rahulgandhi
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியை சேர்ந்த நல்லமுத்து என்பவரது மனைவி ஷர்மிளா (வயது 37). இவர் பெருந்துறைையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு தனுஷ்ராம் (9), மோகபிரசாத் (10) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஷர்மிளாவின் தாயாரான சேலம் மாவட்டம், ஓமலூர், வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தாண்டாக் கவுண்டர் என்பவரது மனைவி செல்வம் (55) பெருந்துறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.
பள்ளியில் தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் தனது பேரன்கள் இருவரையும் தனது ஊருக்கு கூட்டி கொண்டு திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஏறினார்.
இந்த பஸ் பெருந்துறை அடுத்த வெங்கமேடு பகுதியில் சென்ற போது, பஸ்சின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் திடீரென நிலை தடுமாறி பஸ்சில் இருந்து வெளியே தவறி விழுந்தார்.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
உடன் வந்தவர்கள் அவரது வீட்டிற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஷர்மிளா தனது தாயாரின் உடலைக் கண்டு கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதியில் இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னை அண்ணா நூலகத்தில் ஒரு ஸ்டுடியோ அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு தினம் ஒரு பாடம் என ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் எதுவும் வெளியாகவில்லை. 2 மாணவர்கள் அறையின் பூட்டை உடைத்து உள்ளனர்.
வினாத்தாளை எடுக்கும் முன் வெளியாகும் முன்பே அவர்கள் பிடிக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்களை பிரம்பால் அடிக்காமல் பள்ளி வளாகத்தை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக புகார்கள் கூறப்படுவது உண்மை கிடையாது. பள்ளி வளாகத்தை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வற்புறுத்தியது கிடையாது.
அப்படி பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. நமது வீட்டை நாம் சுத்தம் செய்வது போலத் தானே அதுவும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan






