search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்
    X

    உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்

    உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Farmers

    ஈரோடு:

    விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு அருகே மூலக்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்து பேசினார்.

    அப்போது விவசாயிகளி டம் போராட்டத்தின் தன்மை குறித்தும், போராட்டத்தினால் அரசின் செயல் பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அவர் சந்தித்து பேசினார். அதன்பின்னர் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறீர்கள். வெறும் போராட்டம் மட்டும் நடத்தினால் இந்த அரசு செவி சாய்க்காது என்று கருதி, குறிப்பிட்ட சிலர் தங்களை வருத்திக்கொள்ள கூடிய உண்ணா நோன்பையும் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு வேதனைப்படுகிறேன்.


    இந்த செய்தியை கேள்விப்பட்டு ஏற்கனவே தி.மு.க. சார்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளேன். அதில் அரசு உடனடியாக தலையிட்டு போராட்டக்குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதே கோரிக்கையை ஆளும் கட்சி தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    உயர்மின் கோபுரங்களை அமைக்க யாரையும் கலந்து பேசாமல் சர்வாதிகார தன்மையுடன் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. உயர் அதிகாரிகளும் வந்து சந்திக்கவில்லை. மாவட்ட கலெக்டர் கூட வந்து சந்திக்க வில்லை என்று வேதனையுடன் போராட்டக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அவர்களையும் அரசு அழைத்து பேசவில்லை. அதே நிலைதான் விவசாயிகளுக்கும் உள்ளது.

    வருகிற 2-ந் தேதி சட்டமன்றம் கூட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உங்களுக்காக நான் குரல் கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். உங்களுடைய போராட்டம் வெற்றி பெற தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை சந்தித்து பேசும்போது, உடலை வருத்திக்கொண்டு கண்டிப்பாக போராட்டம் நடத்த வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள் என்றேன். போராட்டம் நடத்துங்கள். ஆனால் உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை ஏன் கைவிடக்கூடாது? என்று கேட்டேன்.

    அதற்கு அவர்கள், எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு தான் முக்கியம். எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று சொன்னது, விவசாயிகளின் வேதனை எவ்வளவு என்று புரிகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கு உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக சட்டமன்றத்தில் நிச்சயமாக நாங்கள் குரல் எழுப்புவோம்.

    தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி உள்பட பலர் உடனிருந்தனர். #MKStalin #Farmers

    Next Story
    ×