என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் காலை 6 மணிக்குதான் அனுமதிக்கப்படுகிறது. இரவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை 6 மணிக்கு பிறகு ஒட்டுமொத்த வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் இருபுறமும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் லாரிகள் மற்ற வாகனங்கள் உரிய நேரத்தில் போக முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே வாகனங்களை 6 மணிக்கு பதில் அதிகாலை 4 மணிக்கே அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதித்தால் நாங்கள் 6 மணிக்கெல்லாம் மலைப்பாதையை கடந்து விடுவோம்... என்று கூறி இன்று காலை 6 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் காரப்பள்ளம் சோதனை சாவடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
காலை 6 மணிக்கு நடந்த சாலை மறியல் போராட்டம் 7.30 மணிக்கு ஒரு முடிவுக்கு வந்தது.
கோபி:
கோபியில் 1089 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கோபி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 15 லட்சத்து 47 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இணைய தள வசதியுடன் கணினியும் இணைத்து தரப்படும். இந்த வருடம் எல்.கே.ஜி-யு.கே.ஜி வகுப்பு சேர்க்கையில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளிகள் 33 உள்ளது. இதே போல் 9 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 123 உள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும். குறைந்த சேர்க்கை காரணம் காட்டி பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் அருகில் இருந்தனர்.
முன்னதாக கோபி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார். #KASengottaiyan
ஈரோடு பழைய பாளையம் அம்பிகை நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது56). இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முரளிதரன் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். முரளிதரன் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் முரளிதரன் சூரம்பட்டி வலசு மாரியம்மன் முன்பு திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் முரளிதரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் கிடைத்ததும் முரளிதரன் மனைவி மற்றும் மகன்கள் வந்து அவரை பார்த்து கதறி அழுதனர்.
முரளிதரன் எதற்காக தீக்குளித்தார்? என்று உடனடியாக தெரியவில்லை. நோய் காரணமாக அவர் தீக்குளித்தாரா? அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தீக்குளித்தாரா? என்று தெரியவில்லை.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு:
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் மற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் நிலையில் தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வருவதற்கு அதிமுக- தேமுதிக இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதை நாம் அறிவோம்.
ஆனால் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வை பார்க்கும் போது தமிழக மக்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏதோ வியாபாரத்தில் இடைத் தரகர்கள் செய்யும் வியாபார உத்தியை போல கூட்டணி பேரத்தை தேமுதிக- அதிமுக 2 கட்சிகளும் மாறி மாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.
தேமுதிக தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதை கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளி காட்டியிருக்கிறது.
அரசியல் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலை கொண்டு இவ்விரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணி எப்படி மக்கள் நலம் சார்ந்த கூட்டணியாக இருக்க முடியும்? தமிழக மக்களுக்கு போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று இவ்விரு கட்சிகளும் கருதுகிறார்களா? இந்த 2 கட்சிகளும் அமைக்கும் வியாபார அரசியல் கூட்டணிக்கு தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியை கொடுக்க தயாராகி விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #dmdk #kmdk #parliamentelection
ஈரோடு:
தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. தற்போது அரசியல் மறுவாழ்விற்காக மாறிமாறி அலைந்து கொண்டு இருக்கிறது.
பிரேமலதா கட்சி விஷயங்களில் எப்போது தலையிட ஆரம்பித்தாரோ அப்போது இருந்தே தே.மு.தி.க.வை பணம் கொழிக்கும் கட்சியாக மாற்றி வருகிறார். அதிமுக, திமுக ஆட்சியில் கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் கூட்டணி பேரம் பேசிய செயலை இதுவரை தமிழகத்தில் யாரும் செய்ய வில்லை.

பிரேமலதா திமுக பற்றியும் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை விஜயகாந்த் சந்திக்க அனுமதி கேட்ட போது மு.க.ஸ்டாலின் மறுத்ததாக பிரேமலதா கூறி வருகிறார். இது சுத்தப் பொய். பிரேமலதா பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துக்கூற வேண்டி இருக்கும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி மிக பெரிய தோல்வியை சந்திக்கும். காரணம் இது மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணி. திமுக- காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். மு.க.ஸ்டாலின் மக்கள் விரும்பும் தலைவராக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #premalatha #dmk #mkstalin
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ளது கடம்பூர் வனப்பகுதி.
இப்பகுதியில் உள்ள கம்பத்ராயன் கிரி வனத்தில் நேற்று மாலை 6 மணியளவில் புகையாக கிளம்பியது. போக போக காட்டுத்தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
அப்போது காற்றும் வேகமாக வீசியதால் தீ பரவலாக பற்றி எரிந்தது. இது பற்றி அப்பகுதி பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் வந்தனர். அவர்கள் பொது மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகிறார்கள்.
விடிய-விடிய எரிந்த தீ இன்று காலையும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. 2-வது நாளாக பொது மக்களும், வனத்துறையினரும் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.
இந்த காட்டு தீயால் வனப்பகுதியில் உள்ள சந்தன மரம் வில்வமரம், மூங்கில் மரம் போன்ற அரிய வகை மரங்கள் பல எரிந்து சாம்பலாகி விட்டன. பற்றி எரியும் தீயில் வனக்குழுவினர் இலை, தழைகளை போட்டும் அவற்றால் அடித்தும் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு, கரூர், சேலம், கோவை உள்பட 13 மாவட்ட விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு உயர் மின் கோபுரம் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படை வீடு என்னும் பகுதியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்தனர்.
அதன்படி இன்று 13 மாவட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை மூலக்கரை மேட்டுக்கடை முதலி கவுண்டன் வலசு, இனைய கவுண்டன்பாளையம் , கதிரம் பட்டி பென்னங்காட்டு வலசு, உட்பட 30 கிராமங்களை சேர்ந்த 300 வீடுகள் - டவர் லைன் சொல்லும் விவசாய விளை நிலங்களில் கருப்பு கொடிகளை கட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்து வளர்ந்த சண்முகம் என்கிற முகிலன் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பில் தீவிரமாக பணியாற்றி வந்தவர். தற்போது தமிழகம் அளவில் இயற்கை வளங்களை பாதுகாக்க போராடி வரும் சமூக போராளியாக முகிலன் தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.
பல வருடங்களாக சென்னிமலை அதிகம் வராமல் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்தார். இவரை கடந்த 2 மாதங்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் முகிலன் கிடைக்கவில்லை.
இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் அவரது சொந்த ஊரான சென்னிமலையில் திருப்பூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இன்ஸ்பெக்டர் சங்கீதா, மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் 3 நாட்களாக முகாமிட்டு அவரது நண்பர்கள், தொழில் ரீதியான தொடர்பில் உள்ளவர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகிலனை புரட்சிகர அமைப்பில் இணைத்தவர் மிக நீண்ட கால நண்பர் என்ற முறையில் தற் சார்ப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையனிடம் 2 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.
இது குறித்து பொன்னையன் கூறியதாவது:-
சி பி சி ஐ டி., ஆய்வாளர் ஒருவரும் உதவி ஆய்வாளர் ஒருவரும் வீட்டிற்கு வந்தனர். முகிலன் புரட்சிகர இளைஞர் அமைப்போடு இணைந்தது, அவரது செயல்பாடு, வழக்குகள் பற்றி கேட்டறிந்தனர்.
முகிலன் குடும்பத்தில் கடன் பிரச்சனை உண்டா? தற்சார்பு விவசாயிகள் சங்க அலுவலகம் முகிலன் வீடு ஒரே வளாகத்தில் உள்ளதால் அங்கு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா? என விசாரணை நடத்தி சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சளுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஈரோடு மாவட்டம். இங்கு உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பல மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதே போல் தமிழகத்தில் ஈரோடு மஞ்சளின் தன்மைகள், சிறப்புகள் மண்ணின் தன்மை மஞ்சள் விளையும் பகுதிகளின் எல்லை போன்றவை குறித்து இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் கடந்தாண்டு விண்ணப்பிக்கப்பட்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க ஈரோடு மஞ்சள் வணிகர்கள் கிடங்கு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது என இந்திய புவிசார் குறியீடு பதிபக இணைப்பதிவாளர் சின்னராஜா நாயுடு கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “ஈரோடு மண்ணின் தன்மை, தண்ணீர்(காவிரி ஆறு) வளம், மஞ்சளின் தரம், மருத்துவ குணம் கொண்டதாகவும் ஈரோடு மஞ்சள் திகழ்கிறது. இதை தொடர்ந்து ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஈரோடு மஞ்சள் இனி உலக அளவில் பேசப்படும்” என்று கூறினார்.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் கூறும்போது, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி ஈரோடு மஞ்சள் உலகப்புகழ் பெறும். மேலும் நல்ல விலையும் கிடைக்கும் என்று கூறினர். #Erodeturmeric #GeographicalIndication
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலை பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நேற்று மாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகள் நிறைவடைந்த பின்னர், பூஜையில் சாமியின் பாதத்தில்வைக்கப்பட்ட ஒரே ஒரு எலுமிச்சைப் பழம், மறு பூஜை தினமான நேற்றிரவு ஏலம் விடப்பட்டது.
2 ரூபாயில் ஆரம்பித்த ஏல தொகையை சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் போட்டி போட்டு விலையை உயர்த்தி கேட்டனர். ஆயிரங்களை தாண்டி சென்ற ஏலத்தில், ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. ஈரோடு 46 புதூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் எலுமிச்சை பழத்தை ஏலத்தில் வாங்கி சென்றார்.
இதே போல் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட 5 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரம் 50 ஆயிரம் ரூபாய்க்கும், வெள்ளி காசு 43 ஆயிரம் ரூபாய்க்கும் பக்தர்கள் போட்டி போட்டு ஏலத்தில் வாங்கினர்..
இந்த எலுமிச்சை மற்றும் வெள்ளி காசுகளை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக போட்டி போட்டு வாங்கி செல்வதாக பக்தர்கள் கூறினர். இந்த ஆண்டு ஏலத்தில் பெற்ற எலுமிச்சை மற்றும் வெள்ளி காசு, மோதிரத்திற்கான தொகையை அடுத்த ஆண்டு மகாசிவராத்திரியின் போது செலுத்தினால் போதும். விழாவில் பக்தர்கள் வழங்கிய வாழைப்பழம் மலை போல் குவிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சிவராத்திரி மறுபூஜை விழாவிலும் அதனை தொடர்ந்து நடந்த ஏலத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே கோவிலில் கடந்த ஆண்டு சிவராத்திரி விழாவில் எலுமிச்சை 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடதக்கது. #tamilnews
அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத்தலைவர் சுபாஸ் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கங்காதரன் முன்னிலை வகித்ததார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்.
அகில பாரத இந்து மகா சபா கட்சியின் ஆதரவை அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு அளிப்பது எனவும், கூட்டணியின் வெற்றிக்கு தமிழகம் முழுவதும் கட்சியின் சார்பாக தேர்தல் பணிகளை செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டணியின் ஆதரவு குறித்து ஆதரவு கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டணி வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தஞ்சை.இளையராஜா, மாநில இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ரஜினி செந்தில், மாநில மாணவரணி தலைவர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.







